கடினம் என நினைக்கும் செயலையும் எளிதாய் நடத்திக்காட்டி, வாழ்வில் மகிழ்வை உண்டாக்கும் ஈசன் அருளும் திருத்தலம், சற்குடி.சற் என்றால் சக்தியும், சிவனும் ஒன்றாகி அருள்பாலிக்கும் தன்மை என்பது பொருள். குடி என்றால் அடியவர்கள் பலரும் ஒன்று பட்டு வசிக்கும் ஊர். ஆக சற்குடி என்றால் சிவனும், சக்தியும் ஒன்றாகி அருள்பாலிக்கும் தலம் என்பதே பொருளாகும்.தொன்று தொட்டு சற்குடி என்று அழைக்கப்பட்டு வந்த பெயர் காலப்போக்கில் மருவி. இன்றைக்கு சக்குடி என்று அழைக்கப்படுகிறது.இந்த சக்குடிக்கு சிறிது தூரத்தில் தொன்மைப் புகழ் மிக்க கீழடி எனும் பழமையான, நாகரிகப் பெருமை கொண்ட ஊர் அமைந்துள்ளது. எனவே, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப்பெருமைமிக்கது சக்குடி என்பது ஊர்ஜிதமாகிறது.மதுரை மாநகரில் வரகுண பாண்டிய மன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றிய திருவாதவூரைச் சேர்ந்தவரான மாணிக்கவாசகர், இந்த ஊரில் சிலகாலம் தங்கியிருந்து, அன்றாடம் வைகையில் நீராடி, இங்க கோயில் கொண்டுள்ள ஆதிசொக்கநாதரை தரிசித்து வந்தாராம். திருவாதவூரிலிருந்து மதுரை மாநகருக்கு தொன்று தொட்டு பெருவழிப்பாதை ஒன்று இருந்து வந்த காரணத்தால், மாணிக்கவாசகர் இவ்வூர் வழியே பயணித்து சென்றார் என்று சொல்லப்படுகிறது.ஊரின் மேற்கு பகுதியில், கிழக்குப் பார்த்த வண்ணம் கோயில் அமைந்துள்ளது. கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் அந்நியர் படையெடுப்பு நிகழ்ந்தபோது சற்குடியில் அமைந்திருந்த ஆதி சொக்கநாதர் மற்றும் கரிவரதராஜப் பெருமாள் கோயில்கள் பெருத்த சேதமடைந்தன. இருந்தாலும் கோயில் நிலவறைக்குள் சில சிலைகளை அடியார்கள் பத்திரப்படுத்தி வைத்ததால் அவை தப்பின.நிலைமை சீரானாலும் கோயில் உடனடியாக புனரமைப்புச் செய்யப்படாததால், நீண்ட காலமாக கோயிலில் வழிபாடு இல்லாமலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெறாமலும் இருந்து வந்தன. பி்ன்னர் ஒரு கட்டத்தில், மீண்டும் அன்றாட வழிபாடுகள் தொடர வேண்டும் என ஊர்ப் பெரியவர்கள் கூடி முடிவெடுத்தனர். அதன்படி, ஆன்மிகப் பெரியவர்களின் வழிகாட்டுதல்படி, பக்தர்கள் பலரது பங்களிப்பால் கோயில் கல்கட்டுமானாம் உருவாக்கப்பட்டு தற்போது கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.ஆதி கோயிலில் நந்திதேவருக்குப் பின்னால் நடுகல் ஒன்று இருந்தது. அதில் எவரொருவர் இச்சிவாலயத்தினை புனரமைப்பதிலும், மேம்படுத்துவதிலும் உதவுகிறார்களோ அவர்களின் திருப்பாதங்களை என் சிரம்மேல் கொண்டு போற்றுவேன் அத்தகையோர் மேட்ச கதி அடைவது திண்ணம் என்றும், கோயிலுக்கு அன்றாட பூஜை கைங்கர்யப் பணிகளுக்க எவரொருவர் பாதகம் செய்கிறார்களோ அவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவதோஷத்திற்கு ஆளாவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுகள்து.இந்தக் கல்வெட்டுக்குறிப்பின் கீழ் திரிசூலம் உழவாரப் பணிக்கு உதவம் கருவி, இரு கரம் கூப்பி நிற்கும் பக்தர் உருவங்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதில், இரு கரம் கூப்பி நிற்பவர் மன்னின் சார்பாக இத்திருக்கோயில் திருப்பணிகளை மேற்கொண்டிருப்பவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.கோயிலின் நான்கு புறமும் மதில்சுவர் உள்ளது. சாலக்கோபுர வாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும் விஸ்தாரமான பிராகாரம் காணப்படுகிறது. அதில் நடுநாயகமாக பலிபீடம், நந்தி மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன.மகா மண்டபம் வடபுறம் தெற்கு நோக்கி ஆதி மீனாட்சி என்னும் பெயரில் அம்பாள் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளாள்.அன்னியர் படையெடுப்பின் போது இந்தச் சிலை காணாமல் போனதால் பிற்காலத்தில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் திருப்பணி நடந்து கொண்டிருந்தபோது, எதேச்சையாக பூமிக்குள் சிறிய நிலவறை ஒன்று தென்பட்டது. மண்ணை அகற்றிப் பார்க்கையில் அக்காலத்தில் பக்தர்கள் பாதுகாப்பு கருதி வைத்திருந்த அம்மனின் மூல விக்ரகம் அங்கே வெகு பத்திரமாக இருந்தது. மகிழ்ச்சியடைந்த ஊர் மக்கள் மீண்டும் புது சன்னதியில் அம்பாள் விக்ரகத்தை நிறுவி வழிபடத் தொடங்கினர்.அர்த்த மண்டப வாசலில் பாலகணபதி, பாலமுருகன் வீற்றிருக்க, கருவறையிலே லிங்த் திருமேனியாக ஆதி சொக்கநாதர் எழுந்தருளியுள்ளார். ிந்த இறைவனுக்கு தாரை அபிஷேகம் நாள் முழுவதும் நடைபெறுவதால் கருவறை எப்போதும் குளிர்ச்சியாகக் காணப்படுகிறது. மூலவரின் ஆவுடை சதுர பீடமாகவும், பாணம் ரிதான எட்டுப் பட்டைகளுடன் அஷ்ட தாராலிங்கம் என்று போற்றப்படும் சிறப்புடன் இருப்பதாக குறிப்பிடத்தக்கது. மூலம்வ விமானம் திராவிட கட்டடக்கலை வகையைச் சேர்ந்தது.தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை சந்நதிகளும் தெற்குச் சுற்றில் விநாயகர், ஐயப்பன், நால்வர் மாணிக்கவாசகர், சந்நதிகளும், மேற்குச் சுற்றில் கன்னிமூலை கணபதி, வள்ளி- தெய்வானை சமேத சண்முகர் சந்நதிகளும், வடக்குச் சுற்றில் சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி சந்நதிகளும், கிழக்கச் சுற்றில் நவகிரகம், காலபைரவர், நாகர், சந்திரன், சூரியன் சந்நதிகளும் உள்ளன. வில்வம் தலவிருட்சம். வடக்குச் சுற்றில் உள்ள நந்தவனத்தில் பூக்கிற மலர்கள் நித்ய பூஜை கைங்கர்யப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.தமிழ்புத்தாண்டு, வைகாசிவிசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை மகா தீபம், கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம், தைப் பொங்கல், மகா சிவராத்திரி, போன்ற விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.அடுத்தமுறை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும்போது அங்கே தரிசனம் முடித்துவிட்டு இங்கு வந்து ஆதி சொக்கநாதரையும் ஆதி மீனாட்சியையும் தரிசியுங்கள். உங்களுக்கு இரட்டிப்புப் பலன் நிச்சயம்!எங்கே இருக்கு: மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் செல்லும் நெடுஞ்சாலையில் 13 கி.மீ. தூரத்தில் சக்குடி திருத்தலம் அமைந்துள்ளது.தரிசன நேரம்: காலை 6-10; மாலை 4-8
Comments
Post a Comment