வெற்றி, தோல்வி, ஞானம் வழங்கி நன்மை செய்யும் ஏழரைச் சனி!

வெற்றி, தோல்வி, ஞானம் வழங்கி நன்மை செய்யும் ஏழரைச் சனி!

னி என்றாலே ஒருவித பயம் நம் மனதில் நிழலாடுகிறது. அதிலும் குறிப்பாக  'ஏழரைச் சனி  என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை' என்கிறார் ஜோதிட நிபுணர் சூரியநாராயணமூர்த்தி. 
சனி
சனி என்றாலே, எல்லோருடைய மனதிலும் ஒரு திடுக்கிடல் ஏற்படவே செய்யும். காரணம், அவர் கஷ்டங்களைத்தான் தருவார் என்ற எண்ணமே அனைவர் மனதிலும் பதியவைக்கப்பட்டுவிட்டது. ஆனால், உண்மையில் அவர் நீதிமான். தன் சுயதர்மத்தில் இருந்து சற்றும் விலகாதவர். ஈஸ்வரனிடம் இருந்து, `ஈஸ்வர பட்டம்’ பெற்றவர். 
ஒருவருக்கு ஏழரைச் சனி ஆரம்பிக்கின்றது என்று சொன்னால், அவர் யார் என்பதை அவருக்கு உணர்த்திவிடும். ஆம், இது நடக்கும் காலத்தில் நம்மைப் பற்றிய தெளிவு நமக்கு ஏற்பட்டுவிடும். இந்தக் காலகட்டத்தில் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
மனிதர்களுக்கு பொன், பெண், பணம், கடன், நோய், கௌரவம், நண்பர்கள், உறவினர்கள் என்று எந்த விஷயத்தில் பலவீனம் உள்ளதோ அந்த விஷயத்தில்தான் அவர் கஷ்டங்களைத் தருவார்.
இந்தக் காலகட்டத்தின்போது எவ்வளவுதான் கஷ்டத்தைக் கொடுத்தாலும், அந்தக் கஷ்டங்களின் மூலமாக நமக்கு அனுபவ ஞானத்தைத் தருவார். நம்மை நாம் புரிந்துகொள்ளவைப்பார்.
ஒரு தவறைச் செய்யும்போது மற்றவர்கள், 'திருந்தி விடு' என்று சொன்னால், உடனே திருந்தி விடுவோமா..? திருந்துவதற்கு ஏதாவது அனுபவம் வேண்டும் அல்லவா? அந்த அனுபவத்தைத் தருபவர்தான் இவர்!
செல்வமும் செல்வாக்கும் பெருகியவர்கள் 'அந்த ஆண்டவனையே ஆட்டிப் படைப்பேன்' என்று திமிரோடு சொல்லக் கேட்டிருப்போம். அப்படிப் பேசியவர்களை எல்லாம் நடுத் தெருவுக்கு வரச் செய்யும் சக்தி இவருக்கு உண்டு. 
'திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்'  என்ற பழமொழிக்கு மிகவும் பொருத்தமானவர் இவர். இந்தப் பலன்கள்  இக்காலத்தில்தான் நடந்தேறும். ஆசை, அறிவு கண்ணை மறைக்கும்போது, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடவைத்து, பாடம் புகட்டி புரியவைப்பார். 

 'அனுபவப்படு, அனுபவப்படு, எல்லாவற்றிலும் அனுபவப் படு.’ படித்த அறிவும், கோடான கோடி பணமும், உயிரைக் கொடுக்கும் நண்பர்கள், அவசர ஆபத்துக்கு உதவாத உறவுகள், வீண் ஆடம்பரம், தேவைக்கு மீறிய செலவுகள், எதற்குமே பயன்படாத வீண் கௌரவம், அந்தஸ்து, தகுதிக்கு மீறிய கடன்கள், இவைபோக உடல் உபாதைகள், நம்மைப் புரிந்துகொள்ளாத உறவுகள், ஆசை படுத்தும் பாடு, ஓயாத மனச் சஞ்சலம்,  சூழ்நிலை உணராத நண்பர்கள், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத கவலை  இவை அனைத்தும் ஒரே நேரத்தில் தாக்கினால், மனிதனின் நிலைமை என்னவாகும்? இதில் அவனுக்கு ஞானம் கிடைக்கும்.
வெற்றி தோல்வியைப் புரியவைக்கும். சக மனிதர்களை உணரவைக்கும். இவற்றில் இருந்து விடுபட்டால், ஏழரைச் சனிகாலம் நன்மையே செய்யும்.  இவருக்கு 'காலம்' என்ற பெயர் உண்டு. பல பிரச்னைகளுக்கு காலம் அருமருந்தாக அமையும். `காலம் நல்ல தீர்வைத் தரும்’ என்பார்கள். இந்த வகையில் சனி நன்மையே செய்கிறார்.
ராசிக்கட்டம்
‘உளி படாத கல் அழகான சிலை ஆவதில்லை’. ‘சுடாத தங்கம் அழகான நகை ஆவதில்லை’. அதுபோலத்தான், அனுபவத்தில் தரக்கூடிய புத்தியை சனிபோல் வேறு யாரும் தர முடியாது.
காலம் கடந்து ஞானத்தைத் தந்து, வாழ்வின் புதிய பாடத்தைத் தருவதன் மூலம் நமக்கு நன்மையே செய்கிறார் சனி.
ஏழரைச்சனி நன்மையே செய்யும் கிரகநிலை:
விநயகர்
* ஜாதகத்தில் யோகாதிபதி (9-ம் இடத்து அதிபதி)  திசை நடக்கும்போது ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனி வந்தால் நன்மையே தரும்.
* ஜாதகத்தில் வலிமையான குருபார்வை சனிக்கு இருந்தால் நன்மையே செய்வார்.
* ஜாதகத்தில் உச்சம் பெற்ற சனி இருந்தால் ஏழரைச் சனி இருக்காது.
* சனி பகவானே யோகாதிபதியாக இருந்தால், ஏழரைச் சனி பாதிப்பு இருக்காது. இவர்  ஜாதகத்தில் சுயசாரம் பெற்று இருந்தால், பாதிப்பு இருக்காது.
* ஏழரைச் சனி, அஷ்டமச் சனி காலத்தில் திருமணம், புதிய வீடு, பெரிய பதவி, சுய தொழில், பண வரவுகள், ஆஸ்தி, சொத்துகள் பெருகும். முன்னோர்கள் சொத்துகள், அரசியல் அதிகாரம், வெளிநாடு பயணம் என்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைத் தந்து நன்மைகள் செய்யும்.
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடப்பவர்கள், சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால், நல்ல பலன் கிடைக்கும், எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் விநாயகரை வணங்கி வந்தால், இவரது பாதிப்புகளில் இருந்து விடுபட்டு நல்ல பலன்களைப் பெறலாம்.

Comments