பிரதோஷம் நடைபெறாத சிவாலயம்!

ந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், நாகலாபுரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ளது ராமகிரி. இங்குள்ள வாலீஸ்வரர் கோயிலில், சிவனாருக்கு எதிரில் நந்திக்குப் பதிலாக அனுமன் அருள்கிறார். அடுத்ததாக நந்தி அமைந்துள்ளார். சிவன் எதிரில் நந்தி இல்லாததால் இங்கு பிரதோஷம் நடைபெறுவது இல்லை.      
நந்தி தீர்த்தம்!

கோயிலுக்கு வெளியே நந்தி தீர்த்தம் அமைந்துள்ளது. இதன் ஒரு கரையில் இருக்கும் நந்தி முகத்தின் வாயிலிருந்து தண்ணீர் குளத்துக்குள் விழுந்துகொண்டே இருக்கிறது. இதில் நீராடிவிட்டு ஸ்வாமியைத் தரிசிப்பதும் வழிபடுவதும் விசேஷ பலன்களைப் பெற்றுத்தரும் என்கிறார்கள்.

அனுமனின் கதை...

ராமனின் வழிபாட்டுக்காக காசியிலிருந்து அனுமன் எடுத்துவந்த லிங்கமூர்த்தம் கால பைரவரின் அருளாடலால் இங்கேயே தங்கிவிட,  பின்னர் கால பைரவரை வழிபட்டு வேறொரு லிங்கத்தை அனுமன் எடுத்துச் சென்றதாக இந்தத் தலத்தின் புராணம் சொல்கிறது. அனுமன் இங்கு அருள்புரிவதற்கும், இத்தலம் ராமகிரி எனப் பெயர் பெற்றதற்கும் இக்கதையே காரணமாகச் சொல்லப்படுகிறது.

சந்தான பிராப்தி பைரவர்


ந்தக் கோயிலில் கால பைரவர், ‘சந்தான பிராப்தி பைரவ'ராக அருள்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கேவந்து இந்தப் பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையைக் கொண்டுவந்து பைரவருக்குக் கொடுத்துவிட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை ஒரு கல்லில் செய்து, அதை குழந்தைக்கு விலையாகக் கொடுத்து, திரும்பவும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள்.     
வேறு பெயரும் உண்டு!

திருக்காரிக்கரை என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார், தமது தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, ‘கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்’ என்று வைப்புத் தலமாக வைத்துப் பாடியிருக்கிறார். ‘ராமகிரி’ என்ற பெயருக்கு, ராமாயண காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவமே காரணம் என்கிறார்கள்.

எப்படிச் செல்வது?


சென்னை - திருப்பதி மார்க்கத்தில், சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில், நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் உள்ளது ராமகிரி. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உண்டு. நடை திறந்திருக்கும் நேரம்: காலை  8 முதல் 11 மணி வரை மாலை 3 முதல் 6 மணி வரை. 

Comments