யோக வாழ்வு தரும் யோக பைரவர்!

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலம் திருப்பத்தூர். இங்குள்ள அருள்மிகு திருத்தளிநாதர் ஆலயத்தில் அபூர்வத் திருக்கோலத்தில் - யோகநிலையில் அருள்பாலிக்கிறார் பைரவ மூர்த்தி. லட்சுமிதேவி கடும் தவம் இயற்றி, சிவ பெருமானின் ‘கௌரிதாண்டவ’த்தைத் தரிசித்து பேறு பெற்ற மிக அற்புதமான தலம் இது.    
இந்தத் தலத்தின் திருத்தளிநாதரைத் தரிசிக்கவந்த காசி பைரவரே, இங்கு யோக பைரவராக அருள்கிறார் என்பது ஐதீகம். ஆக, இவரை ஆதி பைரவர் என்றும் போற்றுகிறார்கள். நம் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அருளும் பைரவ மூர்த்திகளும் இவரிடமிருந்தே தோன்றியதாக திருத்தளிநாதர் திருக்கோயில் தல வரலாறு சொல்கிறது. அதேபோல், இந்த யோக பைரவரிடம் இருந்தே அஷ்ட பைரவர்கள் தோன்றியதாகவும், அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் எட்டு பேர் என்ற கணக்கில் 64 பைரவ மூர்த்திகள் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தப் பைரவ மூர்த்தியின் மேலும் பல மகிமைகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார், திருத்தளிநாதர் கோயிலின் தலைமை குருக்களான பாஸ்கர்.

‘‘இந்த யோக பைரவர் ஆதியில் உக்கிர நிலையில் கால்களில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் பிற்காலத்தில் பைரவரின் கால்களில் இருந்த சங்கிலியை அகற்றி, அவரை சாந்தப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். சாந்நித்தியம் நிறைந்த சுவாமி இவர். எப்போதும் வெற்றியையே அருள்பவர். இவரை, குலதெய்வமாகக் கொண்ட மருது சகோதரர்கள், எப்போது போருக்குச் சென்றாலும் இந்த யோக பைரவரை வழிபட்ட பிறகுதான் செல்வார்களாம்.  


மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், திருமணத்தடை போன்ற பிரச்னைகளை நீக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார் இந்த யோக பைரவர். வெண் பூசணி, தேங்காய் போன்றவற்றில் நெய் தீபம் ஏற்றிவைத்து இவரை வழிபட்டால், எதிரிகள் பணிந்து போவார்கள். பங்காளிச் சண்டை முடிவுக்கு வரும். அதேபோல், ஒரு துணியில் மிளகு சுற்றி முடிந்து வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண் திருஷ்டிகளும் விலகும்.’’

இந்தக் கோயிலில், கார்த்திகை மாதம் அமாவாசை முடிந்த ஆறாவது நாள் அஷ்ட பைரவ யாகமும் அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்திரன் செய்த பாவங்கள் நீங்கவேண்டி இந்திரனின் மகன் ஜயந்தன், யோக பைரவரை பூஜித்ததை நினைவுகூரும் வகையில் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று ஜயந்தன்  பூஜை செய்யும் வைபவம் நடைபெறும். இந்த விழாவின்போது ஸ்ரீயோக பைரவர் வீதி உலா காண்பார்.  இதுபோன்ற விழாக்காலங்களிலும், அஷ்டமி தினங்களிலும் ஸ்ரீயோக பைரவரைத் தரிசித்து வழிபட்டால், நமது வறுமைகள், துயரங்கள் அனைத்தும் நீங்கும் யோக வாழ்க்கை கைகூடும் என்பது ஐதீகம்.

Comments