பெருமாள் பெருமை

புரட்டாசி புண்ணியகாலம்


ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வியூக வடிவங்கள்:
வாசுதேவ வடிவம், சங்கர்ஷண வடிவம், பிரத்யும்க வடிவம், அனிருத்த வடிவம் என்று திருமாலின் வடிவங்கள் நான்கு வகைப்படும்.
மகாவிஷ்ணுவின் உபவியூக வடிவங்கள் மொத்தம் பனிரெண்டு. அவை -
கேசவன், மாதவன், நாராயணன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகியவை.
திருமாலின் திருப்பணியை ஒட்டிய சின்னங்களே திருக்கரங்களில் பொருந்தியுள்ள சங்கு, சக்கரம், தண்டம், கதாயுதம், தாமரை. இந்த வியூக வடிவங்கள் ஒவ் வொன்றுக்கும் ஒவ்வொரு பணி உள்ளது. அவை பிரபஞ்சப் படைப்புடனும், ஆன்மாக்களை மீட்கும் செயலிலும் தொடர்புடையவை.
திருமால், ஞானம், சக்தி பலம், ஐஸ்வரயம், வீரியம், தேஜஸ் என்ற ஆறு குணங்களைக் கொண்டவர்.
புரட்டாசியில் மஹாவிஷ்ணுவை பூஜிப்பது சிறந்தது. திருமால் என்பதில் ‘திரு’ என்பது பெரியபிராட்டியைக் குறிக்கும். பகவான் தனித்து நின்று உயிர்களைக் காப்பதைக் காட்டிலும், பிராட்டியுடன் சேர்ந்திருந்து உயிர்களைக் காப்பதே சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே, ‘திரு’வாகிய மகாலட்சுமியுடன் சேர்ந்து ‘மால்’ நம்மைக் காப்பார் என்பது பொருள்.
திருமாலின் மூன்று வகைக் கோலங்கள்
நின்ற நிலையில் - நின்ற திருக்கோலம்
பள்ளிகொண்ட நிலையில் - கிடந்த திருக்கோலம்
அமர்ந்த நிலையில் - அமர்ந்த திருக்கோலம்
திருமாலின் தேவியர் மூவர்
திருமகள் - நமக்கு ஞானப்பால் ஊட்டி வளர்க்கும் தாய்
பூ தேவி - நம்மிடம் காணப்படும் குற்றங்களை ஸ்ரீமந் நாராயணனிடம் பொறுத்தருளச் செய்பவள்.
நீளா தேவி - நம்முடைய குற்றங்களை எம்பெருமான் கண்களில் படாமல் செய்பவள்.
திருமாலின் ஆயுதங்கள்
திருவாழி என்ற சக்கரம், பாஞ்சஜன்யம் என்ற சங்கு, கௌமோதகம் என்ற கதை, நந்தகம் என்ற வாள், சார்ங்கம் என்ற வில் ஆகிய பஞ்சாயுதங்கள் எனப்படும்.
மஹாவிஷ்ணுவுக்கு உகந்த புஷ்பங்கள்
செண்பகம், மல்லி, பாதிரி, செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை ஆகியவை.
திருமால் அருள்புரியும் ஐந்து நிலைகள்
பரத்வம் - விண் மீதிருப்பார்
அர்ச்சாவதாம் - மலை மேல் நிற்பார்
வ்யூஹம் - கடலில் கலப்பார்
விபவம் - மண் மீதுழல்வார்
அந்தர்யாமித்வம் - இவற்றுள் எங்கும் மறைந்திருப்பார்.
- மாலதி நாராயணன், பெங்களூரு
புரட்டாசி விரத மகிமை
புரட்டாசி புண்ணியகாலம்
மகாலெட்சுமி
‘பொன்னுருக காந்து மண்ணுருக பெய்யும் புரட்டாசி’ என்பார்கள். அதாவது புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் தங்கம் உருகும் அளவுக்குக் கடுமையான வெயில் காந்து, இரவினில் மண் உருகி வழிந்தோடும் அளவில் நல்ல மழை பெய்யும் என்பது இதன் கருத்து.
தமிழ் மாதங்களில் 6-வது மாதமாக வருகிறது புரட்டாசி. தெய்வக் காரியங்களுக்கு உகந்த மாதம். சூரியபகவான் கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் பொழுது புரட்டாசி மாதம் பிறக்கிறது. இம்மாதம் முன்னோர்களுக்கு விடுதலை மாதமாக கருதப்படுவதால், முன்னோர்கள் பூமிக்கு வருகின்றனர். இதனால்தான் புரட்டாசி மஹாளயபட்ச அமாவாசை சிறந்ததாக உள்ளது.
நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில்! எனவேதான் கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர்.
புரட்டாசி சனியில் விரதம் மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். மேலும் ஜாதகரீதியாக சனிபகவான் பிடியில் இருப்பவர்கள் பெருமாளுக்கு விரதம் இருந்து, எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால் பெருமாளின் அருள் கிடைக்கப் பெற்று சிரமங்கள் பல மடங்கு குறையும்.
புரட்டாசி விரதம் எப்படி இருப்பது?
முதலில் வீட்டில் பூஜை அறையைச் சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலு மங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரித்து, இரு பக்கங்களிலும் ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றிவைக்க வேண்டும். பிறகு, அரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை ஒன்றுகலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீப விளக்கு போல் செய்து கொள்ளுங்கள். மீதி மாவை குவித்து அதன் மேல் பஞ்சினால் பூந்திரி போல் செய்து அதை தீபத்தில் வையுங்கள். சுத்தமான நெய் ஊற்றி வைத்து பூஜைக்குரியனவற்றைச் சேகரித்து வைத்து நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாகப் படைக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடனை வழிபடுவதும். துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
தெய்வத்தின் பார்வையில் நம்மைக் கொண்டு செல்லும் இப்புரட்டாசியில் பெருமாளுக்கு செய்ய வேண்டிய பூஜையை செய்து திருமாலின் அருளைப் பெறுவோம்.

 

Comments