வாக்கு வன்மை அருளும் அம்பிகை!

பேசும் ஆற்றல், மனித குலத்திற்கு மட்டுமே இறைவன் அளித்துள்ள கொடை!
ஆனால் சிலருக்கு உரிய வயதில் பேச்சு வராத வந்தாலும் தடையுள்ள வார்த்தைகளாக தெளிவில்லாத பேச்சாக இருக்குமானால், அத்தகைய குறைபாடுகளைப் போக்கும் அம்பிகை ஒருத்தி இருக்கிறாள். அந்த அன்னையின் பெயர் மதுரபாஷினி; அதாவது நல்ல தமிழில் தேன் மொழியாள்.
பேச்சுக் குறைபாடுகளை நீக்கவல்ல, இந்த அம்பிகை இனிய குரல் வளத்தையும் அருளும் தயாக அமைந்துள்ளார். அம்பாளுக்கு உகந்த நாட்களிலும் பொதுவாக வௌ்ளிக்கிழமைகளிலும் மதுரபாஷினிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை பேச்சுக் குறைபாடு உள்ளவர்களி்ன குறையைப் போக்கி அருள்வார் என்பது நம்பிக்கை. பேச்சைத் தொழிலாகக் கொண்டுள்ள ஆசிரியர், வழக்கறிஞர்கள் போன்றோர் மதுரபாஷினிக்கு அர்த்தனை செய்து வழிபட்டு வர, அவர்களது வாக்கு வன்மை மிகும். இசைத்துறையில் வாய்ப்பாட்டு சங்கீதம் பயிலும் பெண்களும், இளைஞர்களும், மதுரபாஷினி அம்பிகைக்கு தேனாபிஷேகம் செய்து வழிபடுவது சிறந்த பலன் அளிக்கிறது.
இத்தல ஈசனின் பெயர் அபிமுக்தீஸ்வரர் தமிழகத்தில் பிரமாண்டமான சிவாலயங்களுள் ஒன்று. திருவாரூர் தியாகேசப்பெருமான் ஆலயம். இந்த ஆலயத்தின் மகா உற்சவத்திற்கு கொடியேற்றுவதற்க முதல் நாள் பாலிகை தெளித்தல் என்றொரு வைபவம் உண்டு. அதற்கு தியாகேசர் ஆலயத்திலிருந்து சண்டிகேசுவரர் புறப்பட்டு இந்த முருதம்பட்டணம் அபிமுக்தீஸ்வரர் ஆலயத்திற்கு வருகிறார். இக்கோயிலுக்குள் மண் எடுத்து, அபிமுக்தீஸ்வரர் முன் வைத்த, பூஜைகள் செய்யப்படும். அதன்பின், அந்தப் புனித மண்ணை சண்டிகேஸ்வரர் எடுத்துச் சென்று தியாகேசருக்கு சமர்ப்பிக்கிறார். அந்த மண்ணைக் கொண்டு பாலிகை தெளிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்ட பின்புதான் தியாகேசர் கோயில் பங்குனி உற்சவக் கொடி ஏற்றப்படும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் விசேஷ நிகழ்ச்சி இது. ஆலயக் கல்வெட்டில் இதற்கான குறிப்பு உள்ளது.
பஞ்ச பாண்டவரகள் வந்து வழிபட்டதலம் என்பதால் இங்கே பஞ்சலிங்கங்கள் கோயில் கொண்டுள்ளனர். அதுவும், தனித்தனி கோயில்களில் தெற்குப் பிராகாரத்தில் வாயு லிங்கம், நிருதி லிங்கம், வடக்க பிராகாரத்தில் ஈசான லிங்கம், அக்னி லிங்கம், ஐந்தாவது ப்ருத்வி லிங்கமாக உள்ளவர்தான் மூலவராக விளங்கும் சிவலிங்கம் அபிமுக்தீஸ்வரர்.
தலவிருட்சம் - வில்வம், தெற்கு பிராகாரத்தில் நிறைய காய்களோடு வில்வ மரம் உள்ளது.
அழகிய ராஜகோபுரமும் முன் மண்டபமும் மூன்றாண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகத்தின்போது அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்குகிறது.
அபிமுக்தீஸ்வரர் அலங்காரத்துடன் எழிலுற விளங்குகிறார். நின்ற கோலத்தில் காட்சிதரும் அம்பிகையின் அழகுக்குத்தான் என்ன குறைச்சல்? எழில்வதினி!
கோயில் கிழக்கு நோக்கி உள்ளது ராஜகோபுர நுழைவாயிலைக் கடந்ததும் விசாலமான கருங்கல் மண்டபம். நந்திகேசர் ஈசனை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். அர்த்த மண்டபத்தைக் கடந்தால், எதிரே அபிமுக்தீசுவரர் லிங்க வடிவில், கருவறைக்கு முன்னதாக மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நதியில் மதுரபாஷினி அம்பாள்.
ஒரு சுற்று கொண்ட பிராகாரம், வடக்கு பிராகாரத்தில் கோயிலின் தொன்மைக்கால கிணறு, இன்றும் நீர் நிறைந்து காணப்படுகிறது. இதிலிருந்துதான் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அனுதினமும் அபிஷேக நீர் எடுக்கப்படுகிறது.
பிரதோஷத்தன்று ஏராளமான பக்தர்கள் கூட்டம் வரும். சிவராத்திரி, கார்த்திகை தீபநாள், ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகியன இங்கே வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

எங்கே இருக்கு: திருவாரூருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவு.

தரிசன நேரம்: காலை 8 - 12; மாலை 4-8

Comments