தத்தாத்ரேயர்

பிரம்மனின் புத்திரரும், சப்தரிஷிகளில் ஒருவருமான அத்ரி மகரிஷிக்கும், அனுசூயைக்கும் மகனாக தோன்றியவர், தத்தாத்ரேயர்.
திரிமூர்த்திகளின் திருவுருவின் ஒரே வடிவமான அவதாரம், தத்தாத்ரேயர். மூன்று முகம், ஆறு கரங்கள் கொண்டவர்.
தத்தாத்ரேயர் மகாஞானி, வித்தகயோகி, அவரை ஒரு ஜிதேந்திரியர் என்பர். சந்நியாசிகளில் பஹூதர், குடீசகர், ஹம்சர், பரமஹம்சர் என்ற நான்கு பிரிவினர் உள்ளனர். பரமஹம்சர்களே மேம்பட்டவர்கள் என்றாலும் அவதூதராக உள்ளவர்கள் அவர்ளையும் விட உயர்ந்தவர்கள்.
தத்தாத்ரேயர் வித்வத் சந்நியாசம் என்கிற அவதூத பரம்பரைக்கு மூலகாரண புருஷர் என்பதால் அவதூதர்கள் அனைவரும் தத்தாத்ரேயர் பரம்பரையைச் சார்ந்தவர்களே என்பர்.
தத்த, பிக்ஷூக, அவதூத, நாரத பரிவ்ராஜக உபநிடதங்களில் தத்தாத்ரேயர் பற்றிப் பேசப்படுகிறது. தத்த உபநிடதம் என்பது, தத்தரின் பெருமையைப் பறைசாற்றும் உபநிடதமாகும். தத்தாத்ரேயரைவிட சிறந்த அவதாரம் இல்லையென்பது வியாசர் வாக்கு.
பரசுராமருக்கு தத்தாத்ரேயர் வித்யையை உபதேசித்து, அருள்பாலித்ததன் விளைவே பரசுராம கல்ப சூத்திரம் என்ற அரிய நூல் உலகுக்கு கிடைத்தது. இது ஸ்ரீ வித்ய மகா கிரந்தமாகப் போற்றப்படுகிறது. சாண்டில்ய உபநிடதத்தில் அஷ்டாங்க முறை விவரிக்கப்பட்டுள்ளது. அதில் பரபிரம்மத்திற்கு தத்தாத்ரேயர் என்ற பெயர் வந்த காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
தத்தாத்ரேயருக்கு பிரியமான இடம் பிரயாகை திரிவேணி சங்கமம். மும்மூர்த்திகள் வடிவம் போன்றே மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கு புனிதமான இடம் இது. கும்பமேளா போன்ற மாபெரும் விழாக்காலங்களில் எண்ணற்ற அவதூத சந்நியாசிகளின் கூடுமிடமாகத் திகழ்கிறது.
அவதூத ஆஸ்ரமவாசிகளுக்குத் தண்டம், கமண்டலம் என எதுவும் கிடையாது. இவர்களது பாதுகைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் நிகழ்த்துவது பாரத நாட்டில் நெடுங்காலமாக உள்ள வழக்கம்.
தத்தாத்ரேயர் அருளிய ஜீவன் முக்த கீதையும் அவதூத கீதையும் ஒப்புயர்வற்றவை. முக்த கீதை 24 சுலோகங்களும், அவதூத கீதை 283 சுலோகங்களும் கொண்டது. தத்தாத்ரேயர் தம் சீடர சங்கிருதிக்கு ஜாபாஸ தர்சனோபநிஷத், அவதூத உபநிஷத் ஆகிய இரண்டையும் உபதேசித்திருக்கிறார்.
மகாராஷ்டிர மகான் ஞானேஸ்வரர், தத்தரின் சீடர். தத்தாத்ரேயரின் அருளால்தான் ஒப்பற்ற நூலான ஞானேஸ்வரி இவருக்கு உறுதியாயிற்று. இவரது மற்றொரு சீடர் ஜனார்த்தன பண்டிதர்.
இமயமலையில் ஆத்ரேய மலைப்பகுதியில் உள்ள குகையொன்றில் தத்தாத்ரேயர் பல ஆண்டுகள் தங்கி தவமியற்றியதால் அக்குகை தத்தர் குகை என்றே இன்றும் அழைக்கப்படுகிறத. வடக்கே ஜூனகாட் வழியில் உள்ள கிர்நார் மலை பதினாயிரம் படிகளை உடையது. இந்த மலையின் உச்சியில் தத்தாத்ரேயர் சரண பாதுகை அமைந்துள்ளது.
ராஜஸ்தானில் உள்ள மிகப் பெரிய மலை உச்சி ஒன்றில் (கடல் மட்டத்திலிருந்து 5650 அடி உயரம்) தத்தாத்ரேயர் ஆலயம் இருக்கிறது. இரண்டே அடி உயரமுள்ள சந்நதியில் மூன்று முக தத்தாத்ரேயரின் சிலையும், அவரத பாதச் சுவடுகளும் உள்ளன.
தத்தாத்ரேயர் ஸஹ்ய மலையில் வெகுகாலம் தவமிருந்தார். அதுவே தத்தக்ஷேத்திரம் என்றும் தற்போது மகாபலேஷ்வர் என்றும் விளங்கி வருகிறது.
குல்பர்காவுக்கு அருகே காங்காப்பூரில் மூன்று முகமுடைய தத்தாத்ரேயர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரை இங்குள்ள ஜன்னல் கதவைத் திறந்துதான் தரிசனம் செய்ய வேண்டும். மராட்டியத்தில் கிருஷ்ணா நதி தீரத்தில் அமைந்திருக்கும் நரசிம்ம வாடியில் உள்ள தத்தர் ஆலயத்தில் உள்ள பாதுகைகளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் குருமூர்த்தி என்று கூறுவது தத்தாத்ரேயரையே சொல்வதாக அமையும். அங்கு தத்தகுரு ஆராதனை அதிக அளவில் உள்ளது. ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஔதும்பரம் என்ற இடம் தத்தக்ஷேத்திரமாகக் கருதப்படுகிறது.
சேலம், சேர்ந்தமங்கலம், தத்தகிரி குகாலயத்தில், தத்தாத்ரேயர் சிலாரூபம் அருள் ஜோதியாய்த் திகழ்ந்தொளிர்கிறது. குடவாசல் எனும் புதுக்கடியில் தத்தகுடீரம் உள்ளது. இங்குள்ள தத்தர் ஆலயத்தில் தத்த பாதுகை, கார்த்தவீர்யார்ஜூன் சக்கரம் ஆகிய இரண்டிற்கும் தினந்தோறும் பூஜை நடைபெற்று வருகிறது. உடையார்பட்டி என்னுமிடத்தில் 16 அடி உயரத்தில் மிக எழில் வாய்ந்த தத்தாத்ரேயரின் சிலா விக்ரகம் உள்ளது. இது ஸ்கந்தகிரி விஸ்வ ரூப தத்தர் என வழங்கப்படுகிறது.
சுசீந்தரம் தாணுமாலயன் திருக்கோயில் தாணு, அயன், மால் - அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் கூடிய தத்தாத்ரேய அவதார தொடர்பான தலமாகும். இது ஒர முக்கியமான தத்த க்ஷேத்திரமாகும்.

Comments