கல்யாண கோதண்டராமர்

ரம்மியமான சூழல், பச்சைப்பசேல் வயல்வெளிகள், நெல்லும் கரும்பும் விளைந்து செழுமையாகக் காட்சி தரும் கிராமம்.
பார்க்கும்போதே லட்சுமிகரமாகத் தோன்றும் அந்தக் கிராமத்துக்கு லட்சுமிபுரம் என்றே பெயர் இருப்பது பரம பொருத்தம். குறிச்சி என்ற பெயரிலும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இந்த ஊரில் அமைந்துள்ள கல்யாண கோதண்டராம சுவாமி ஆலயத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள், புஷ்பவல்லித்தாயார், கல்யாண கோதண்ட ராமர் மற்றும் கிருஷ்ணருக்கு தனித்தனிச் சன்னதிகள் உள்ளன.
இத்தலம் ஒரு காலத்தில் தாடகையின் வசம் இருந்ததாம். கௌசிகனின் வேள்வியைக் காக்க தசரத சக்கரவர்த்தியால் அனுப்பப்பட்ட ராமபிரான் இத்தலத்திற்கு எழுந்தருளினார். அப்போது லட்சுமி நாராயணப் பெருமாள் இங்கு வீற்றிருந்ததாக தல புராணம் கூறுகிறது.
லட்சுமிதேவியால் தோற்றுவிக்கப்பட்ட தலம் என்பதால் லட்சுமிபுரம் என அழைக்கப்படுகிறது.
ஆலயத்தின் முகப்பில் ஐந்துநிலை ராஜகோபுரமும் அடுத்து கருடாழ்வார் சன்னதியும், உள்ளது. கருடாழ்வாருக்கு அமாவாசைதோறும் பாலாபிஷேகம் நடைபெறும். கருடாழ்வாரின் திருமேனியில் படும்போது அந்தப் பால் நீலநிறமாக மாறுவதாகவும், பின் தரையில் விழும்போது வௌ்ளை நிறமாக மாறுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
கருடாழ்வார் சன்னதியை அடுத்து மகாமண்டபமும் நேர் எதிரே மூலவர் லட்சுமி நாராயணனின் சன்னதியும் உள்ளன. மகாமண்டபத்தின் வலதுபுறம் தாயார் புஷ்பவல்லியின் சன்னதி உள்ளது. வடக்கு பிராகாரத்தில் ஆஞ்சனேயருக்கும், தெற்கு பிராகாரத்தில் கிருஷ்ணருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
ராமபிரான், ராவணனை வதம் செய்துவிட்டு இலங்கையிலிருந்து திரும்பும்போது சீதா தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, இத்தலத்திற்கு எழுந்தருளினாராம்.
வசிஷ்ட முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, ராமபிரான் கல்யாண கோதண்ட ராமராக எவ்வாறு அப்போது காட்சி அளித்தாரோ அதேபோல் ராமபிரான், சீதா பிராட்டி, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் திருக்கல்யாணக் கோலத்தில் வசிஷ்டருடன் இக்கோயிலில் காட்சியளித்து அருள்புரிவதாக தலபுராணம் கூறுகிறது.
இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் மிகவும் சக்தியுள்ளவர். ஒரு மட்டைத் தேங்காய் வெற்றிலை பாக்குடன் தங்களது வேண்டுகோளையும் எழுதி ஒரு ரவிக்கை துணியில் முடிந்து அதை பக்தர்கள் ஆஞ்சநேயர் சன்னதியின் முன் கட்டுகின்றனர். இதனால் தங்களது வேண்டுதல் தவறாது நிறைவேறுவதாக கூறுகின்றனர். தங்களது வேண்டுகோள் நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி தங்களது நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.
நீங்களும் ஒருமுறை கல்யாண கோதண்ட ராமரை தரிசித்து வரலாமே!
எங்கே இருக்கு: தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளிலிருந்து மணல்மேடு செல்லும் பாதையில் 3 கி.மீ. தொலைவில் லட்சுமிபுரம் உள்ளது. பஸ் வசதி உண்டு.

தரிசன நேரம்: காலை 9-10 மாலை 5-7

Comments