ஆயுள் அபிவிருத்திக்கு ஓர் ஆலயம்!

பசுமைச் சூழலில் அமைந்துள்ள அழகான தலம், திருச்சியிலுள்ள திருமங்கலம்.
அமைதியே உருவான இந்த ஊருக்கு ஆன்மிக பலம் சேர்க்கிறது. இங்குள்ள சாமவேதீஸ்வரர் ஆலயம்.
அழகிய ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் விசாலமான பிராகாரத்தில்விநாயகர் தனி மண்டபத்தில் அருள்பாலிக்க, அடுத்து கொடிமரம், நந்தி, பலிபீடத்தைத் தொடர்ந்து சிறப்பு மண்டபம், இதில் வலதுபுறம் இறைவி உலகநாயகி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். அம்மனின் அர்த்த மண்டப நுழைவாயிலில் துவாரபாலகிகளின் கதை வடிவ திருமேனிகள் அமைந்துள்ளன.
அடுத்துள்ள மகாமண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்க, தொடர்ந்து அர்த்தமண்டபம், இதன் வலதுபுறம் சண்டிகேஸ்வரரின் திருமேனி உள்ளது. அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாமவேதீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.
இறைவனின் தேவகோட்டத்தில் பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி, உதங்க முனிவர், சங்கரநாராயணன், பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
பிராகாரத்தின் தென் திசையில் பரசுராமர் பூஜை செய்த லிங்கமும், கிழக்கு பிராகாரத்தில் முருகன், வள்ளி-தெய்வானை, மகாலட்சுமி மற்றும் அனாய நாயனாருக்கு முக்தி கொடுத்த இறைவன் சிவலிங்கமாகவும், வடக்கு பிராகாரத்தில் அப்பர், சம்பந்தர், ஆனாய நாயனார், பாணலிங்கம், சண்டிகேஸ்வரர் ஆகியோர் திருமேனிகளும் உள்ளன.
ஆனாய நாயனாருக்கு முக்தி கொடுத்த அம்மனின் சன்னதியும் இங்குள்ளது. சண்டிகேசுவரர் வடக்கு பிராகாரத்தில் தனி சன்னதியிலும், கிழக்கு பிராகாரத்தில் பைரவர், காலபைரவர், சூரியன், சனீஸ்வரன் ஆகியோரும், பிராகாரத்தின் டகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர்.
பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஹத்தி எனும் தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். இதனால் இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்த ஊருக்கு பரசுராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு.
சண்டிகேஸ்வரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்க பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார். இருந்தும் அவரைப் பற்றிய தோஷம் நீங்கவில்லை. இறைவன் இத்தலத்தில் வந்து தன்னை வணங்கும்படி கூற, சண்டிகேசுவரரும் இறைவனின் சன்னதியின் இடதுபுறம் இருந்து இறைவனை வணங்கினார். அவரது தோஷம் விலகி இறைவனடி சேர்ந்தார்.
இறைவனின் அர்த்த மண்டப நுழைவாயிலில் சண்டிகேசுவரரின் திருமேனியை நாம் காணலாம். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சமாகும். இத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகபெருமான் ஆறுமுகமும் நான்கு கைகளுமாக காட்சி தருகிறார். தவிர முருகன் வள்ளியை மணந்தபின் இத்தலம் வந்ததால் முருகனும் தேவசேனாவும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க, வள்ளி மட்டும் மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது ஓர் அற்புத காட்சியாகும்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி வழக்கம் போல் சின்முத்திரை காட்டாமல் அபயமுத்திரை காட்டுகிறார். இதனால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இறைவன் தோஷ நிவர்த்தி தருவதுடன் கல்வி செல்வத்தையும் வாரி வழங்குகிறாராம்.
விஷ்ணு துர்க்கை வழக்கமான மகிஷ வாகனத்தில் அமராது, சிம்ம வாகனத்தில் காட்சி தருகிறாள். திருமணமாகாத பெண்கள் 11 வௌ்ளிக் கிழமை விஷ்ணு துர்க்கையை வழிபட அவர்கள் திருமணம் தடையின்றி நடைபெறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். மணமானதும் தங்கள் கணவருடன் வந்து துர்க்கைக்கு மஞ்சள்காப்பு அணிவித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இழந்த செல்வத்தை மீண்டும் பெற வழி செய்யும் தெய்வம் மகாலட்சுமி மற்றும் பாணலிங்கேஸ்வரர் ஆவர். மகாலட்சுமிக்க வௌ்ளைக் காப்பு அணிவித்து, பாணலிங்கத்தக்கு அர்ச்சனை செய்தால் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சனிபகவானின் வாகனம் காகம் பொதுவாக தெற்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்கு வடக்க திசை நோக்கி அமர்ந்திருப்பது ஓர் அதிசய அமைப்பாகும். சனி பெயர்ச்சியின் போது இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும். ஜன்ம சனி, பாத சனி, அஷ்டமசனி ஆகியவை சனிபகவானை வழிபடுவதால் விலகி ஓடும் என்பது அனைவரும் அறிந்த நிஜம்.
இந்த ஆலயத்தில் பைரவரும் காலபைரவரும் சேர்ந்து இருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும். அர்த்தஜாமப் பூஜையின் போது பைரவர் பாதத்தில் வைத்த விபூதியை பூசுவதால் தீயசக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குகிறதாம்.
ஆனாய நாயனார் அவதரித்த தலம் இது. இவர் கார்த்திகை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அந்த நாளை அவரது குருபூஜை நாளாக இந்த ஆலயத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.
மகம் நட்சத்திரத்தன்றும் சனிக்கிழமையன்றும், இக்கோயிலை 11 முறை வலம் வந்து தேனில் ஊறிய பலாச்சுளைகளை தானம் செய்தால் ஆயுள் அபிவிருத்தி அடையலாம் என்பது இந்த ஊர் மக்களின் நம்பிக்கை.
எங்கே இருக்கு: திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம்.

தரிசன நேரம்: காலை 6-11; மாலை 4-8

Comments