மீசையே நேர்த்திக்கடன்!

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் மெபூபாபாத் நகர், குரவி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பத்ரகாளி தேவி சமேத ஸ்ரீ வீரபத்ர சுவாமி திருக்கோயில். சுமார், 1100 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், ஸ்ரீவீரபத்ரருக்கு நேர்த்திக்கடனாக மீசையை உலோகத்தால் செய்து, அதை காணிக்கையாக செலுத்தும் விநோத வழக்கம் உள்ளது. சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரபலமான கிராமக் கோயில் இது! ஸ்ரீவீரபத்ர சுவாமியிடம் வேண்டிக் கொண்டால் எந்த வேண்டுதலும் நிச்சயம் பலித்து விடும் என்பது பக்தர்களின் பூரண நம்பிக்கை. வேண்டுதல் பலித்தவர்கள்தான், ஸ்ரீவீரபத்ர சுவாமிக்கு இந்த மீசை நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.
ஸ்ரீபத்ரகாளி தேவி சாட்சாத் பார்வதி தேவியாக அருள்பாலிக்கிறாள். அதேபோல், ஸ்ரீவீரபத்ர சுவாமியும் சிவபெருமானின் அம்சமே. இத்தல சிவபெருமானுக்கு , ‘கோரிவீரன்னா’ என்ற திருநாமமும் உண்டு. இவர், இப்பகுதி மலைவாசி மக்களின் குல தெய்வமாக வணங்கப்படுகிறார். கோயிலில் ஸ்ரீபத்ர காளிதான் முதன்மை தெய்வமாக வணங்கப்படுகிறாள். இருந்தாலும், ஸ்ரீவீரபத்ர சுவாமியே பக்தர்களால் முதன்மைப்படுத்தப்பட்டு பேசப்படுகிறார்.
அன்னை பார்வதியின் தந்தை தட்சன் நடத்தியயாகமும், அதற்கு ஈசன் அழைக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்த புராண வரலாறு. மேலும், ஈசன் தடுத்தும் கேளாமல் நியாயம் கேட்கச் சென்ற தேவி அவமானப்படுத்தப்பட, அன்னை பார்வதி, உயிரைத் துறக்கிறாள். இதனை அறிந்த சிவபெருமான் சினம் கொண்டு, பார்வதியை தனது தலையின் மேல்வைத்துக்கொண்டு தாண்டவ மாடுகிறார். அப்போது, தங்கை பார்வதிக்கு நிகழ்ந்த அவலத்தைக் கண்ட மகாவிஷ்ணு, தமது சக்ராயுதத்தால் தேவியின் உடலை துண்டு துண்டுகளாக அறுத் தெறிகிறார். அத்துண்டுகள் விழுந்த இடங்களிலெல்லாம் பத்ரகாளியாக எழுகிறாள் அன்னை பார்வதி.
இதனிடையே, ஈசனின் கோபம் உச்சத்தை அடைய, மிரட்டுகின்ற மூன்று கண்களும், பல கைகளும், முறுக்கி விடப்பட்ட மீசையுமாய் ஸ்ரீவீரபத்ரராக வடிவம் எடுக்கிறார். பிறகு, எங்கெல்லாம் அன்னை பார்வதியின் உடல் பாகங்கள் விழுந்து பத்ரகாளியாக எழுந்தருளினாரோ, அங்கெல்லாம் அன்னையோடு தாமும் இணைந்து கொள்கிறார். அப்படி உருவானதுதான், குரவி ஸ்ரீபத்ரகாளி சமேத ஸ்ரீவீரபத்ர சுவாமி திருக்கோயில்!
சிற்பங்களே இல்லாத, நான்கு கலசங்களைத் தாங்கிய கோபுரம். இதனைக் கடந்து உள்ளே சென்றால், முதலில் துவஜஸ்தம்பம், அடுத்து நந்தி பகவான் சன்னிதி. முன் மண்டபத்தைக் கடந்து சென்றால் கர்ப்பக்கிரகம். அங்கே எட்டு கரங்களில் பலவித ஆயுதங்களைத் தாங்கி, கண்களில் கருணை பொழிய, ‘அபயம் தந்து காக்க நான் இருக்கிறேன்’ என்று
கூறும் விதமாக, சிரசை கிரீடம் அலங்கரிக்க,
அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள் தேவி ஸ்ரீபத்ரகாளி.
அருகில் வெள்ளிக்கவசம் அணிந்து, நன்கு முறுக்கி விடப்பட்ட மீசையோடு, ஆக்ரோஷமான கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீவீரபத்ர சுவாமி. பல வகையான மலர் அலங்காரத்தில் ஜொலிக்கும் இப் பெருமான், பக்தர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றித் தருபவர் என்பதால், பக்தர்களின் காணிக்கையாக இவரைத் தேடி நிறைய மாலைகள் வந்தவண்ணம் உள்ளன. ஸ்ரீபத்ரகாளி மற்றும் ஸ்ரீவீரபத்ர சுவாமியின் மேல் வெளிப்புறம் மண்ட பங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதில் கடவுள் சார்ந்த பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீபத்ரகாளி மற்றும் ஸ்ரீவீரபத்ர சுவாமியைத் தவிர, கணேசர் மற்றும் ஆஞ்சனேயருக்கும் தனிச் சன்னிதிகள் உண்டு. இக்கோயிலை எழுப்பிய பீமாராஜி, ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த, வெங்கிய சாளுக்கிய வம்சத்தை சேர்ந்த மன்னன். அடுத்து, ககாடியா வம்சத்தினிடம் ஆட்சி மாறியபோது, அதன் முதல் மன்னன் பெத்தராஜ் கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளார்.
மகா சிவராத்திரி இங்கு விசேஷ வழிபாடாகக் கொண்டாடப்படுகிறது. அன்று ஸ்ரீ பத்ரகாளி - ஸ்ரீ வீரபத்ர சுவாமி திருக்கல்யாண வைபவம் மற்றும் ரத உத்ஸவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இது தவிர, யுகாதி, விநாயகர் சதுர்த்தி, சங்கராந்தி, கார்த்திகை மகோத்ஸவம், தசரா மற்றும் தீபாவளியும் மிகச் சிற்பாகக் கொண்டாடப்படுகிறது. வழக்கமான பக்தர்கள் கூட்டத்தோடு, இந்த ஆலயத்துக்கு ஆதிவாசி இன மக்களும் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால், அவர்கள் சார்ந்த கைவினைப் பொருட்களும் இங்கே நிறையவே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆக, கோயிலில் கூட்டம் எப்போதும் நிறைந்து வழிகிறது. தேவஸ்தானத்தால் பக்தர்களுக்கு தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அமைவிடம்: ஹைதராபாத்திலிருந்து 200 கி.மீ., வாரங் கல்லிருந்து சுமார் 75 கி.மீ., ஹைதராபாத், கம்மம் சாலை வழியில் மெபூபாபாத்தில் இறங்கி ஆட்டோ மூலம் 20 நிமிட பயணத்தில் கோயிலை அடையலாம்!
தரிசன நேரம்: காலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை.
தகவலுக்கு: 0871 9277232 / 94910 00704

Comments