ஆயுதம் ஏந்தா அழகன்!

ஒக மாட, ஒக பாண, ஒக பத்னி’ என்று (ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்) போற்றப்பட்ட ஒரே கடவுள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. ஏனைய கடவுளர் தத்தம் மனைவியருடன் மட்டுமே காட்சி தரும்போது, ஸ்ரீராமன் மட்டும், தம் பத்னி தவிர, தம்பி லக்ஷ்மணன், தொண்டன் ஹனுமன் மற்றும் உற்றார், உறவினர் என அனைவரையும் தம்முடன் இணைத்து நட்புக்கும் உறவுக்கும் பாசத்துக்கும் உதாரணமாகக் காட்சி தருகிறார்.
ஸ்ரீராமனை எண்ணும்போதே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது 14 ஆண்டு கால வனவாசம்தான். அதில் பெரும்பகுதியை அவர்கள் நாசிக்கிலுள்ள பஞ்சவடியில் கழித்ததாக வரலாறு கூறுகிறது. கோதாவரியின் கரையில் அமைந்துள்ள நாசிக்கில் பல இடங்கள் ராமாயண நிகழ்ச்சிகளை நம் கண் முன் கொண்டு வருகின்றன. இங்குள்ள சீதா குகையில், சீதையின் சமையலறை உள்ளது. இங்கிருந்துதான் சீதையை ராவணன் அபகரித்துச் சென்றான். லக்ஷ்மணர் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததால் இவ்விடம், ‘நாசிகா’ (மூக்கு) எனப்பட்டு,
‘நாசிக்’காக மாறியது.
கோதாவரி மிகவும் புனிதமான நதியாகும். இங்கு பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுகிறது. தேவர்களும், அசுரர்களும் பாற் கடலைக் கடைந்தபோது இந்நதியில் சில துளிகள் அமிர்தம் விழுந்ததாம். இதில் ஒருமுறை நீராடினால் கங்கையில் 60,000 முறை நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். கோதாவரி நதிக்கரையிலுள்ள ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.
பஞ்சவடியில் முக்கியமான அழகும், கம்பீரமும் கலைத்திறனும் கொண்டு விளங்கும், ‘காலாராம் ஆலயம்’ 83 அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. 1,788ம் ஆண்டு ரங்கராவ் ஓடேகர் என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. அவரது கனவில் தோன்றிய ராமர், தன்னை கோதாவரி நதியிலிருந்து கொண்டு வந்து ஆலயம் அமைக்குமாறு கூற, மூன்று விக்ரகங்களும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்டு ஆலயம் எழுப்பப்பட்டது. அருகிலுள்ள ‘ராம்ஷேஜ்’ என்ற மலைச் சுரங்கங்களிலிருந்து வெட்டிக் கொண்டு வரப்பட்ட உயர் ரக கரு நிறக் கல்லால், 2,000 பேர் 12 ஆண்டுகளில் உருவாக்கிய இவ்வாலயத்துக்கு, அன்றே 23 லட்சம் ரூபாய் செலவானதாம். கோபுர உச்சியிலுள்ள கலசம் 32 டன் தங்கத்தால் உருவாக்கப்பட்டது. சிறந்த கலையழகுடன் உருவாக்கப்பட்ட இவ்வாலயத்தில், 96 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கர்ப்பக்கிரஹம் அழகிய அலங்காரங்களுடன் காட்சியளிக்கிறது. வெள்ளியாலான திருவாசியின் உச்சியில் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அழகிய வெள்ளிக் குடைகளின் கீழ் ஸ்ரீராமன், சீதை, லக்ஷ்மணன் மூவரும் வித்தியாசமான கோலங்களில் காட்சி தருகின்றனர். ஸ்ரீராம பிரானின் வலக்கரம் அவரது இதயத்திலும், இடக்கரம் அவரது பாதத்தை நோக்கியும் உள்ளது. ‘என் பாதத்தைப் பணிந்தவர்களை நான் கைவிட மாட்டேன்’ என்று உணர்த்தும் இத்தோற்றம் மிக விசேஷ மானது. சீதையாகிய மகாலட்சுமியின் இரு கைகளுமே கீழ் நோக்கி, ‘என்னைச் சரணடைந்தால், வேண்டியது எல்லாம் பெறலாம்’ என்பது போலுள்ளது. ஸ்ரீராம, லக்ஷ்மணர்கள் இத்தலத்தில் வில் மற்றும் அம்பு போன்ற ஆயுதங்களைத் தாங்காமல் காட்சியளிப்பது சிறப்பம்சம். தவிர, ஹனுமனும் இக்கோயிலில் இல்லை! பஞ்சவடியிலிருந்து சென்றபின்தானே ஹனுமனின் நட்பு ஸ்ரீராமருக்குக் கிடைக்கிறது! ஸ்ரீராமபிரானுடன் ஹனுமன் காட்சி தரவில்லையெனினும், கோயில் நுழைவாயிலில் கருநிறக் கல்லிலான ஹனுமான் சிலை மிக அழகாகக் காட்சி தருகிறது.
இம்மூன்று விக்ரகங்களும் பஞ்சவடியில் கிடைத்த தாகவும், காலத்தால் மதிப்பிட முடியாத அளவு பழைமையான சுயம்பு என்றும் ஆலயத்தார் கூறுகின்றனர். வேண்டியோர்க்கு வேண்டுவன தரும் வரப்பிரசாதியாம் இம்மூவரும் சொக்க வைக்கும் அழகுடன் அருள்பாலிக்கின்றர். இவ்வாலயத்தில் ஸ்ரீராம நவமி, தசரா, சித்திரை வருடப் பிறப்பு போன்றவை விசேஷமான விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. வாழ்வில் ஒருமுறையேனும் அவசியம் தரிசிக்க வேண்டியது காலாராமர் ஆலயம்.
செல்லும் வழி: மும்பையிலிருந்து நாசிக்குக்கு விமானம்,பேருந்து மற்றும் புகைவண்டியில் செல்லலாம்.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.
தொடர்புக்கு: 0253 2621730

Comments