மங்கலம் பெருக்கும் ஸ்ரீராம நவமி!

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்’
ஸ்ரீராமனால், சிறந்த பக்தன் என்று போற்றப்பட்ட அனுமனுக்கு வீரம், தைரியம், வாக்கு வன்மை என அனைத்துமே ராம நாமத்தின் மகிமையால்தான் கிடைத்தது. மேலும், கடல் தாண்டிச் சென்ற அனுமனை, சிம்ஹிகை எனும் அரக்கி வழிமறித்த போது, சிறிய உரு எடுத்து அவள் வாய்க்குள் புகுந்து வெளி யேறிச் செல்ல அனுமனுக்குக் கைகொடுத்தது, ‘ராம நாமம்’தான் என்றால், அது மிகையல்ல. ஏன்? ஸ்ரீராம பிரான் அருகில் இருந்தபோதே, அவரது நாமத்தின் மகிமையால் பெரும்பாறைகளையும் கடலில் மிதக்கச் செய்து, பாலம் அமைத்தனரே வானர வீரர்கள்.
ஸ்ரீராம நவமி, பங்குனி அல்லது சித்திரை மாதம் வளர்பிறை திதியில் அமைகிறது. ராமபிரானின் ஜனன காலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின. அதனால், ஸ்ரீ ராமச்சந்திரனின் ஜாதகத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் நல்ல பலன் பெறலாம் என்பது ஐதீகம். ஸ்ரீராம நவமி உத்ஸவம் இருவிதமாகக் கொண்டாடப்படுகிறது: ஒன்று, ஜனன உத்ஸவம், மற்றொன்று கர்ப்ப உத்ஸவம்.
ஸ்ரீராம நவமிக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பே தொடங்கப்படுவது கர்ப்ப உத்ஸவம். இந்நாட்களில் தினமும் ஸ்ரீராமர் படத்தை அலங்கரித்து, அர்ச்சனை செய்து, ராம நாமத்தை ஜபித்து விரதமிருந்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல் போன்றவற்றை சுவாமிக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பர். ஸ்ரீராம நவமி அன்று பானகமும் நீர்மோரும் கட்டாயம் நிவேதனம் செய்ய வேண்டும். காரணம், கானகத்தில் விசுவாமித்திரரோடு வாழ்ந்தபோது அவர்கள் தாகத்துக்கு நீர்மோரும் பானகமும் பருகினார்கள். அதையொட்டியே இவை நிவேதனம் செய்யப்படுகின்றன. அன்று முழுவதும் ராம நாமத்தை ஜபித்து உபவாசம் இருந்தால், சகல சம்பத்துக்களோடு வாழ்வில் வெற்றியும் நிம்மதியும் உண்டாவது திண்ணம்.
ஸ்ரீராம நவமி அன்று தொடங்கி, பத்து நாட்கள் அனுஷ்டிக்கப்படுவது ஜனன உத்ஸவம். பத்தாம் நாள் சீதா கல்யாணமும் பட்டாபிஷேகமும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பத்து நாட்களையும் பஜனை, ராமாயண சொற்பொழிவு என மிக விமர்சையாகக் கொண்டாடுவார்கள். பத்தாம் நாள் திருக்கல்யாண வைபவத்தோடு இந்த வழிபாடு நிறைவடையும். அன்று, மானிடத் திருமணத்துக்குச் செய்வது போன்றே அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்தக் கல்யாணச் சாப்பாட்டை உண்டால் மனச்சோர்வு, கவலை நீங்கி, உடலில் ஆரோக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. உத்ஸவத்தின் கடைசி தினத்தன்று அதிகாலை முதல், பொழுது சாய்யும் வரை பக்தர்கள் ராம நாமத்தை உச்சரித்தபடியே இருப்பர். இதனை, ‘அகண்ட ராம நாம ஜபம்’ என்று சொல்வார்கள்.
‘இந்தச் செயல் நிறைவேற விரதம் இருக்கிறேன். அதனை நல்லபடியாக முடித்துக் கொடு ராமா’ என்று வேண்டிக் கொண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அவரவர் வசதிப்படி, கர்ப்ப கால விரதம் அல்லது ஜனன கால விரதம் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எதைத் தேர்ந்தெடுத்தாலும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து அனுசரிப்பதே நல்லது. கர்ப்ப கால விரதம் அனுஷ்டிப்பவர் ராமநவமிக்கு முந்தைய அமாவாசை அன்றிலிருந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். அதி காலை நீராடி, ஸ்ரீராமர் படத்துக்கு பூச்சூட்டி, திலகமிட்டு வணங்க வேண்டும். குறைந்தது 108 முறை ஸ்ரீராம ஜபத்தை மனதார உச்சரிக்க வேண்டும். பின்னர், வழக்க மான பணிகளைச் செய்யலாம். பகலில் ஒருமுறை மட்டும் சைவ உணவை உட்கொள்ளலாம். மற்ற வேளைகளில் பழம், பால், மோர் அருந்தலாம். புகையிலை, வெற்றிலைப் பாக்கு போன்ற வற்றைத் தவிர்க்கவேண்டும்.
ராம நவமி அன்று ஸ்ரீராமர் படத்தை அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபட வேண்டும். பின்னர் மனதை அலைபாய விடாமல், ‘ஸ்ரீராம ஜயம்’ என்று 108 அல்லது 1008 முறை என அவரவர் வசதிப்படி எழுதலாம், படிக்கலாம். நீர் மோர், பானகம் ஆகியவற்றோடு, விருந்து சமையலும் செய்து ஸ்ரீ ராம பிரானுக்குப் படைக்க வேண்டும். நிறைவாக, வடையையும், வெற்றிலையையும் அனுமனுக்குப் படைக்கவேண்டும். பின்னர், ‘விரதத்தை நிறைவு செய்து விட்டேன். நல்லவை யாவையும் அருளிக் காப்பாயாக’ என்று வேண்டிக் கொண்டு உணவு அருந்தலாம். அன்றைய தினம் கட்டாயம் நீர்மோரும் பானகமும் பருகி, இரவு மிதமான உணவை எடுத்துக் கொள்வது நலம். இந்த ராம நவமி விரதத்தைக் கடைபிடித்து வந்தால், மன நிம்மதி, வெற்றி, செல்வம் ஆகியவை பெருகும்.
ஜனன கால விரதமாக அனுஷ்டிக்க நினைப்பவர்கள், ஸ்ரீராம நவமியிலிருந்து தொடங்கி, ஒன்பது நாட்கள் மேற்சொன்னபடி விரதம் இருக்க வேண்டும். பத்தாம் நாளன்று காலை ஸ்ரீராமருக்கு வழிபாடுகள் செய்து, கல்யாண சமையல் செய்து படைக்க வேண்டும். நிறைவில், அனுமனுக்கு வடையும், வெற்றிலையும் படைத்து விரதத்தை முடிக்க வேண்டும். இந்த வகையில் விரதத்தைக் கடைப்பிடித்தால் வாழ்வில் இன்பம் பெருகும். எனவே, ஸ்ரீராம நவமி விரதத்தை அனுசரிப்போம். ஸ்ரீ ராமபிரான் அருளால் நலமுடன் வாழ்வோம்

Comments