வித்தகத் தேவர்!

செம்பிலிருந்து களிம்பு தோன்றாநிலை வந்தால் செம்பு தங்கமாகி விடுகிறது. அதுபோல், நல்வினை, தீவினை என்ற களிம்பு இன்றி ஒளிரும்போது ஜீவன் சிவனாகிவிடுகிறது. இந்தச் செம்பைத் தங்கமாக்கும் ரசவாதம் செய்வதே உண்மையான குருவின் வேலை.
உறவுகளிலேயே சிறந்த உறவு எது என்று கேட்டால் எல்லோரும் (பலர்?) தாயைச் சுட்டுகிறார்கள். ஆனால், அது சுய நலத்தின் வெளிப்பாடு என்றே கருதுகிறேன். ‘எனக்கு நன்மை செய்த நபர், என் தவறுகளைப் பொறுத்துக் கொண்ட அல்லது பெரிதுபடுத்தாத நபர், என் பொருட்டு பட முடியாத கஷ்டங்களை எல்லாம் பட்ட மனிதர்’ தாய் என்பதால்தான் அவரவர் தாயை அவரவர் கொண்டாடுகிறார்கள். ஆனால், படைப்பைக் கூர்ந்து கவனித்தால் பெருவாரியான விலங்குகள் தாய்மையில் இப்படித்தான் ஜொலிக்கின்றன என்பது புரியவரும். அதாவது, தாய்மைக் குணங்கள் தனிமனித சிறப்பன்று; உயிர்க்குலக் கொடை; படைப்பின் தீர்மானம். Programmed... அதாவது, இயற்கையின் வடிவமைப்பு. இதுகுறித்து தனிநபர் பெருமைப்பட என்ன இருக்கிறது? தாய்ப்பாசத்தில் சுய பங்களிப்பு அதிகம் இல்லை என்பது கவனிக்க வேண்டிய நுட்பங்களில் ஒன்று.
உண்மையில் மாதாவை விட, பிதாவை விட சிலாகிக்கத்தக்க உறவு சரியான குரு. பலருக்கும் அப்படியொரு பாக்யம் வாய்க்காத காரணத்தால்தான் தாய், தகப்பனை (உடல் வழி உறவை) ‘ஆஹா ஓஹோ’ என்று பாராட்டுகிறார்கள். சுவாமி விவேகானந்தர் தம் குருநாதரைப் பற்றி பல இடங்களில் பேசி இருப்பதை ஓரளவு தொகுத்து ஒரு புத்தகத்தில் படிக்க முடியும். மயிலை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள, ‘விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர்’ என்கிற புத்தகத்தில் பக்கம் அறுபது முதல் தொண்ணூற்றி ஐந்து வரை ஒருமுறை படித்துப் பாருங்கள். உத்தம குரு அமைந்துவிட்ட ஒருவன், மாதா, பிதா, ஏன் கடவுளைவிட குருவையே நேசிப்பான் என்பதை வரிக்கு வரி விவேகானந்தர் விளக்கு வதை விளங்கிக்கொள்ள முடியும். உடலையும் உள்ளத்தையும் தாய் உருவாக்குகிறாள். உள்ளத்தையும் அறிவையும் தகப்பன் செப்பனிடுகிறான். உடல், உள்ளம், அறிவு, ஆத்மா அனைத்தையும் குருவல்லவா சீரமைக்கிறார். குருவுடனான உறவை வாழ்வில் உணர்ந்தவர்கள் வேறு உறவுகளைச் சிலாகிக்க முடியாது.
ஒரு சின்ன நுட்பம். மற்றெந்த நூலையும் விட திருவாசகத்தில் குருவின் தாக்கம் தூக்கலாக இருப்பதை நன்கு படித்தவர் உணர முடியும். ஏனெனில். களிம் புடன் கூடிய செம்பாகக் கிடந்த வாதவூரரை, குருவாக வந்த சிவன்தான் சுடச்சுடரும் தங்கமாக்கினான்.
இதனை, ‘போற்றித் திருவகவலில்’ மணிவாசகர்,
‘அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரனாகி யருளிய பெருமையை...’
என்று பதிவு செய்கிறார்.
திருவண்டப் பகுதியிலும்,
‘புவனியில் சேவடி தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க
அவன் எனை ஆட்கொண்டருளினன் காண்க’என்றே உறுதி செய்கிறார். அவரைக் குருந்த மரத்தடியில் தாம் தரிசித்தருள் பெற்றதை, கீர்த்தித் திருவகவலில், ‘குருந்தின் கீழன்றிருந்த கொள்கையும்’ என்று தெளிவு செய்கிறார்.
குரு அப்படி என்ன செய்து விடுகிறார்? உண்மையான குருவை ஒருவர் தரிசித்த பின் அதற்கு முன்பிருந்த மாதிரி அவரால் இருக்கவே முடியாது. காதலில் விழுந்து விட்டவன் எப்படி காதலிக்கும் முன்... காதலித்த பின்... என்று வேறு நிலைக்குப் போய் விடுகிறானோ, அப்படியே ஒரு சீடனும் குருவால் பாதிக்கப்படுகிறான். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சந்திப்பு, பார்வை, தொடுகை இவை கிடைத்தபின் நரேந்திரன் பட்ட அவஸ்தைகள் என்ன என்பதைப் படித்தாவது இதனை ஒருவர் உணர வேண்டும்.
பூனை வாய் அகப்பட்ட எலி, பாம்பு வாய் அகப் பட்ட தவளை எல்லாம் கூட சுமாரான உதாரணங்கள் தான். நெருப்பு தொட்ட பஞ்சு, நெருப்பைப் பற்றி பகிர்ந்து கொள்ள நினைத்தால் அது முடியாது. காரணம், அது மிஞ்சுவதில்லை. குருவிடம் சிக்கிய சீடன் நிலையும் இப்படித்தான். காரணம், நம்முடைய, ‘நான்’ ஒரு சேகரிக்கப்பட்ட ‘நான் (accumulated I) அது வெறும் குப்பை. அதன் பலத்தில்தான் ஜன்ம ஜன்மமாக நம் செயல்கள் நடைபெறுகின்றன. அதை ஒரு நொடியில் பறக்க விடுகிறவன் குரு. அடித்து நொறுக்கிவிடுகிறான். அந்த ஞான சூரியன் சீடனில் அந்தகார இருளை ஒரு சொட்டு விடாமல் குடித்து விடுகிறான்.
மகாராஷ்டிரத்தை ஆண்டு முகலாயப் பேரரசின் சிம்ம சொப்பனமாய் விளங்கிய வீரசிவாஜி பற்றி ஒரு சம்பவம் கேள்விப்பட்டிருக்கிறேன். பிரம்மாண்டமான கோட்டை ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தார் சிவாஜி. தம் குருநாதர் சமர்த்த ராமதாசரை அழைத்துச் சென்று அந்தக் கோட்டையைக் காட்ட விரும்பினார். பல நூறு சிற்பிகள், பணியாட்கள் பரபரப்புடன் வேலையில் ஈடுபட்டிருப்பதை ரசித்துக் கொண்டிருந்தார் சமர்த்த ராமதாசர். வீரசிவாஜிக்கு மனதில் ஒரு மெல்லிய அகங்காரம் முளைவிட்டது. இத்தனை பேர் இங்கே பணிபுரிந்து தம் வாழ்வாதாரத்தை நடத்துவதற்குத் தாமே காரணம் என்கிற தலைக்கனம் சிறிது தளிர் விட்டது. பேச்சில் பெருமிதம். பலருக்கும் படியளக்கும் பாக்கியம் தமக்கே என்ற நினைப்பில் மனம் போதையடைந்தது. குரு கவனித்தார். எதிரில் தெரிந்த சிறிய கல்லைக் காட்டி சிற்பியிடம், இதனை ஏன் கட்டடத்தில் பயன்படுத்தவில்லை?" என்று வினவினார். சிற்பியோ, அது பலமுள்ள கல்லன்று... ஊளைக் கல்... உள்ளீடு குறைந்த கல் வீக்கம் அது" என்று சொன்னார். குரு, எங்கே அதை உடைத்துக் காட்டு" என்று கட்டளையிட, உள்ளிருந்த காலியிடத்தில் சிறிது தண்ணீர்... அதிலிருந்து ஒரு தேரை (கல்லுள் வாழும் தவளை) துள்ளி வெளியில் குதித்தது. வியப்புடன் அதை வீரசிவாஜியின் விழிகள் நோக்கியதும், குரு கேலிச் சிரிப்புடன், பரவாயில்லையே சிவாஜி... இந்தப் பணியாட்களுக்கு மட்டும்தான் நீ படியளக்கிறாய் என்று நினைத்தேன். அடடே... கல்லினுள் தேரைக்கும் நீரூற்றி உணவிட்டு நீதான் பாதுகாக்கிறாய் என்று இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்" என்றார். ஆணவம் தூள் தூளானது. சிவாஜி தலை கவிழ்ந்தார். குருவின் பாதங்களில் விழுந்து வணங்கி, மன்னிக்க வேண்டும். கடவுள்தான் சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கிறார் என்பதை இப்போது உணர்ந்தேன். நான் வெறும் கருவி. கடவுளே கர்த்தா" என்று கண்ணீர் சிந்தினார். ஆணவத்தின் முளையோ, மூளையோ எதுவானாலும் அதனை அடியோடு அழிக்க குரு நியமிக்கப்பட்டிருக்கிறார். பணம், பதவி, வழி விரிகிற, ‘நான்’ அவரால் நசுக்கப்படுகிறது.
போதி தருமர் தம் ஊர் வருவதறிந்து அவரை வரவேற்க தமது ஊர் எல்லையில் காத்திருந்தார் சீனப் பேரரசர். போதி தருமரைப் பார்த்ததும் திகைத்துப் போனார். காரணம், அவர் தமது செருப்புகளைக் கைளால் சுமந்தபடி வந்தார். இதென்ன... செருப்பு களை யாராவது சுமப்பார்களா?" என்று பேரரசர் கேலியாகக் கேட்டதும், நம்மை எத்தனையோ நாட்கள் சுமந்த செருப்பை ஒரு நாள் நன்றிக்காக நாம் சுமக்கக் கூடாதா?" என்று போதி தருமர் திருப்பிக் கேட்டதும், அரசர் தடுமாறினார். சுதாரித்துக் கொண்டு, எதையும் வைக்க வேண்டிய இடத்தில் அல்லவா வைக்க வேண்டும்" என்று கால்களைக் காட்டியதும் அடடா... தவறு செய்துவிட்டேன்..." என்றபடி செருப்பைத் தலையில் வைத்துக் கொண்டார் போதி தருமர்.
சீனப் பேரரசர் சங்கடத்தில் ஆழ்ந்தார். என்ன செய்கிறீர்கள். செருப்பை ஏன் தலைமேல் வைத்துக் கொள்கிறீர்கள். தாங்கள் தெளிவானவர்தானா?" என்று வருத்தப்பட்டார். போதி தருமர் அலட்சியமாக நீர் ஏன் உமது தலையில் கிரீடம் வைத்திருக்கிறீர்? பிறரிடமிருந்து உம்மை வேறுபடுத்திக்காட்ட, வேண்டும் என்கிற வேட்கையால்தானே. எல்லோர் போலவும் அரசர் சாதாரணமாக இருந்து விடக்கூடாது என்கிற எண்ணம்தானே. நீர் உம் தலையில் கிரீடம் வைக்கலாம் என்றால், நான் ஏன் என் தலையில் செருப்பை வைக்கக்கூடாது?" என்று கேட்டார். ‘பொளேர்’ என்று கன்னத்தில் அறைந்த மாதிரி அவமானப்பட்டார் அரசர். குருவின் முன் சீடரின் அகந்தை அடி வாங்கும். அடித்து நொறுக்கப்படும். ஆணவத்தின் வேர் அதன் அடி ஆழத்திலிருந்து கிள்ளி எறியப்படும் என்பதற்கு இவையெல்லாம் அடையாளங்கள்.
மனதின் போலி ஆடைகளைத்துகில் உரிந்து நிஜத் தின் தரிசனத்தை ஒளிவு மறைவின்றி உணர்த்துவதே குருவின் வேலை. அமைச்சர், உயர் வகுப்பினர், மரியாதைமிக்க மாமனிதர், புலவர், கவிஞர், அரசனது நம்பிக்கைக்குரியவர், அழகான ஆண் என்கிற பொய் அடையாளங்களுடன் உலவிய மாணிக்கவாசகரை, அவரது மனதை குரு துகிலுரிந்து, ‘நீ ஓர் ஆன்மா... பரமாத்மாவின் சிறுதுளி... மூலத்தில் ஒடுங்க வேண் டிய முகிழ்... ஆதியில் கரைய வேண்டிய ஆர்ப்பரிக்கும் அலை’ என்று நிர்த்தாட்சண்யமாய் உணர்த்தியதால்தான் மணிவாசகரால் குருவை மறக்க முடியவில்லை. எங்கும், எதிலும் அவரே தெரிகிறார். கீர்த்தித் திருவகவல், ‘அந்தணனாகி ஆண்டுகொண்டருளி இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்’ என்றும் போற்றித் திருவகவல், ‘மெய்தரு வேதியனாகி வினை கெடக்கைதர வல்ல கடவுள் போற்றி’ என்றும் குரு செய்த ரசவாதத்தைப் பாடுகின்றன.
செம்பிலிருந்து(Copper) களிம்பு தோன்றாநிலை வந்தால் செம்பு தங்கமாகி விடுகிறது. அதுபோல், நல்வினை, தீவினை என்ற களிம்பு இன்றி ஒளிரும் போது ஜீவன் சிவனாகி விடுகிறது. இந்தச் செம்பைத் தங்கமாக்கும் ரசவாதம் செய்வதே உண்மையான குருவின் உருப்படியான வேலை.
சிறையில் இருப்பவர்கள்தான் கைதிகள். வெளியில் உலவும் நாமெல்லாம் சுதந்திரமானவர்கள் என்றொரு தவறான கருத்து நம்மிடம் உள்ளது. உண்மை அது வல்ல. நாம் அனைவரும் சிறைப்பட்டிருக்கிறோம். கடந்த காலத்தின் கைதிகள் நாம். நம் கோப தாபங்கள், எதிர்பார்ப்பு ஏக்கங்கள், பிறர் மீதான முடிவுகள் எல்லாமே கடந்த காலத்தின் பதிவுகள் மூலமே மேற் கொள்ளப்படுகிறது. கடந்த காலத்தின் ஆளுமைதான் நமது விதி, நிகழ்கால முயற்சிகள் ஓரளவு இருக்கும் என்றாலும், மனித குலம் முழுவதும் கடந்த காலத்தின் கைதிகளே. கடந்த கால, நிகழ்கால ஆளுமையை வேர் அறுத்து முற்றிலும் மாறான எதிர்காலத்தில் பிரவேசித்தலே முக்தி. இதுவே, ஆன்ம இலட்சியம். வாழ்க்கை அதற்கான ஜன்ம ஜன்மாந்திர பெரும் பயணம். ஆனால், முடிவில்லாத அந்த நெடும்பயணத்தில் குருவின் தலையீடு ஓர் அற்புதம் நிகழ்த்துகிறது.
கடந்த காலம், நிகழ் காலம் இரண்டிலிருந்தும் ஆன்மாவை வாரி வழித்தெடுத்து எதிர்காலத்தில் வீசும் அதி அற்புத வேலையைத்தான் ஒரு குரு செய்கிறார். மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து வாழுகிற அதிமுட்டாள்தனமான வாழ்க்கை விளையாட்டிலிருந்து குரு மட்டுமே நம்மைப் பிரித்தெடுத்து உய்யச் செய்கிறார். மணிவாசகர் சொல்கிறார்...
‘வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி எனும்
பித்த உலகிற் பிறப்போடிறப் பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே சென்றுதாய் கோத்தும்பீ’
என்று சித்த விகாரம் நீங்கி, தாம் ‘சித்தம் அழகியார்’ ஆனது சிவனருளால் - சிவனால் என்று ஓங்கி உரைக்கிறார். குருவின் பணியே அதுதான். குருதான் அந்தப் பணியைச் செய்ய முடியும்.
ஞானிகளின் வாழ்வில் குருவைச் சந்திக்குமுன், குருவைச் சந்தித்தபின் என்கிற இருபெரும் பிளவு நிச்சயம் இருக்கும். ‘ஏன்... குருவின்றி ஞானமடைய முடியாதா?’ எனப் பலர் சவுடால் அடிக்கலாம். முடியும். ஆனால், அது கடலைக் கையால் கடக்க நினைக்கும் கவலை. கப்பல் போல குரு கிடைக்கையில், பிறவிக் கடலை ஏன் கையால் நீந்திக் கஷ்டப்பட வேண்டும்?
‘குரு... எதற்கு குரு? சாஸ்திர புத்தகங்களைச் சரியாகப் படித்து அதன்வழி நடந்தால், பர ஞானம் பெற முடியாதா?’ என்று வாதாடலாம். இதற்கு சைவ நூலான, ‘திருக்களிற்றுப்படியார்’ வெண்பா அருமையான பதில் தருகிறது. தாகம் தாகம் என்று கடல் தண்ணீரைக் குடித்தால் (உப்பு நீரால்) தாகம் அதிகரிக் குமே ஒழிய, குறையாது. குவளை நீரானாலும் குடிநீர் வேண்டும். சாஸ்திர புத்தகம் கடல் நீர். குரு பார்வை குடிநீர் என்கிறது.
‘சாத்திரத்தை ஓதினார்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாக்குநலம் வந்துறுமே-ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு’
ஒரு குருவையும் சீடரையும் தரமறியாது அரசர் ஒருவர் சிறையில் வைத்தார். பிறகு, உண்மை அறிந்து விடுதலை செய்து விட்டார். இது நடந்து சில நாட்கள் கழித்து, ஆனாலும், அந்த அரசன் நம்மைச் சிறை வைத்தது தவறு. வைத்திருக்கக்கூடாது" என்று சீடர் புலம்பினார். குரு கேட்டார், இன்னுமா நீ அந்தச்
சிறையில் இருக்கிறாய்?" புதுவாசல் திறக்க, புதுப் பாதை காட்ட குருவால் மட்டுமே முடியும்.

Comments