பங்குனியும் திருவரங்கரும்!

வைணவ ராஜதானியான திருவரங்கத்துக்கும் பங்குனி மாதத்துக்கும் ஏராளமான தொடர்புகள் உண்டு. பன்னிரெண்டு மாதங்களும் விழாக்கோலம் பூணும் திருவரங்கநாதரை விபீஷணர் கொண்டு வந்தார் என்பது தெரிந்த விஷயம். ஆனால், அதற்கு முன்னரே பங்குனிக்கும் திருவரங்கருக்கும் தொடர்புகள் ஏற்பட்டு உள்ளன. இட்சுவாகு வம்சத்தவர்களின் குலதனமான திருவரங்கரை, இட்சுவாகு குலத்திலக மான ஸ்ரீராமர், விபீஷணருக்குக் கொடுத்தார்.
திருவரங்கநாதரின் உத்ஸவத்துக்கு வேண்டியவற்றையும், பூஜைக்கு உரியவற்றையும், சாஸ்திரம் அறிந்த அனுபவசாலிகளான சிற்பிகளையும், தவத்தில் சிறந்த வேதியர்களையும் சேர்த்தே விபீஷணருடன் அனுப்பிவைத்தார் ஸ்ரீராமர். பங்குனி மாதம், வசந்த காலம், ரோஹிணி நட்சத்திரம், பஞ்சமி திதி கூடிய சனிக்கிழமை அதிகாலை சுபமுகூர்த்த காலத்தில் திருவரங்கரை விபீஷணருக்கு, ஸ்ரீராமர் கொடுத்தார்.
தாம் பெற்ற திருவரங்கரையும், அவரைத்தன்னுள் கொண்ட திரு அரங்க விமானத்தையும் விபீஷணன் இப்போது நாம் தரிசிக்கும் இடத்தில் வைத்ததும் ஒரு பங்குனி மாத சனிக்கிழமை அன்றுதான். ‘பங்குனி மாதம், வளர்பிறை சப்தமி திதி, சனிக்கிழமை, சந்திரன் ரோஹிணியிலும் குரு ரேவதியிலும் இருக்கும் மத்தியான காலத்தில் திருவரங்க விமானம் காவிரி தீரத்தில் விபீஷணரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது’ என, 1935ம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீரங்க மாஹாத்மியம்’ எனும் நூல் கூறுகிறது. திருவரங்கரை எதிர்பார்த்து திருவரங்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த மகரிஷிகள், தர்மவர்மா எனும் மன்னரிடம் திருவரங்கரின் வருகையை அறிவித்தார்கள். காரணம்? இதை அறிய, தசரதர் காலத்துக்குப் போக வேண்டும்.
தசரத சக்ரவர்த்தி புத்திரப் பேறுக்காக யாகம் செய்தார். அனைத்து அரசர்களும் அங்கே குழுமி இருந்தனர். சோழ தேசத்திலிருந்து, தர்மவர்மா என்ற மன்னரும் அதற்குச் சென்றிருந்தார். அங்கே, திருவரங்க விமானத்தை தரிசித்து, திருவரங்கருக்கு நடந்த பூஜைகளையும் பார்த்தார் தர்மவர்மா. ‘அயோத்தியின் பெருமைக்கும் செல்வ வளத்துக்கும் இந்த ஸ்வாமியே காரணம். போக மோட் சங்களைக் கொடுக்கவல்ல இந்த விமானத்தை ஸ்வாமியுடன் தவம் செய்தாவது நான் பெறுவேன்’ என்று தீர் மானித்த தர்மவர்மா, நாடு திரும்பியதும் அதற்காக தவம் செய்ய ஆரம்பித்தார்.
அப்போது, அங்கிருந்த மகரிஷிகள் தர்மவர்மாவிடம், அவரது தவத்துக்கான காரணத்தை விசாரித்து அறிந்தனர். ‘மன்னா, நீ தவம் செய்ய வேண்டாம். தவத்தை நிறுத்து. உனது ராஜ்யத்தை நல்லபடியாக நிர்வாகம் செய்து வந்தாலே, நீ தரிசிக்க விரும்பிய திருவரங்கர், திருவரங்க விமானத்தோடு இங்கே எழுந்தருளுவார். அப்படி வரும் போது நாங்கள் உனக்குத் தகவல் சொல்கிறோம்’ என்று தர்மவர்மாவை அனுப்பிவைத்தனர். எனவே, இப்போது விபீஷணர் வருகையை தர்மவர்மாவுக்குத் தெரியப் படுத்தினர்.
தர்மவர்மா வெகு வேகமாக அங்கு வந்து சேர்ந்தார். அவரும் முனிவர்களுமாக விபீஷணரை உபசரித்தார்கள். பிறகு அனைவரும் திருவரங்கநாதரை பூஜை செய்தார்கள்.
பின்னர், ‘விபீஷணரே! நீங்கள் சிலகாலம் இங்கே வசிக்க வேண்டும்’ என்று வேண்டினார் தர்மவர்மா.
விபீஷணர் மறுத்தார். ‘இட்சுவாகு நடத்திய மகோத்ஸவம் (இப்போது பங்குனி உத்திரம் என்று நடக்கும் ஆதி பிரம்மோத்ஸவம்) நாளை ஆரம்பிக்கிறது. ஆகவே, நான் சீக்கிரமே இலங்கை செல்ல வேண்டும்’ என்றார்.
‘அந்த உத்ஸவத்தை இங்கேயே நடத்தலாமே’ என்று தர்மவர்மா கேட்டுக்கொள்ள, விபீஷணர் அங்கு தங்கத் தீர்மானித்தார். பிரம்ம தேவரின் சீடர்களாக ஐந்து வேதி யர்களையும் தர்மவர்மாவின் பொருட்களையும் கொண்டு முறைப்படி, பங்குனி உத்திர மகோத்ஸவத்தை இங்கு தொடங்கி வைத்தார் விபீஷணர். அன்று தொடங்கிய அந்தத் திருவிழா இன்றும் இத்தலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Comments