தீமையை நீக்கி திருவை அருளும் திருமுருகாற்றுப்படை!

நூற்று எட்டு யுகங்கள், ஆயிரத்தெட்டு அண்டங்களையும் ஆண்டு, தேவாதி தேவர்களையெல்லாம் ஆட்டிப்படைத்த சூரனையே சம்ஹாரம் செய்த முருகப்பெருமான், நம்மைக் கைவிட்டுவிடுவாரா என்ன?

திரு. கி.வா.ஜ. அவர்கள் திருமுருகாற்றுப் படைக்கு ‘வழிகாட்டி’ எனும் தலைப்பில் எழுதிய அபூர்வ உரை நூல், பழைய பதிப்பாக இருந்தது, புதுப் பதிப்பாக வெளிவந்தது. பழம்பெரும் நிறுவனம் பதிப்பித்த அந்நூலின் வெளியீட்டு விழா, சென்னையிலுள்ள பிரபலமான அரங்கில் நடந்தது. தமிழறிஞர்கள் பலர் மேடையை அலங்கரிக்க, அரங்கம் நிறைந்திருந்தது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் திருமுருகாற்றுப் படையின் பெருமையைச் சொல்லத் துவங்கி... காஞ்சி மஹா ஸ்வாமிகள் சென்னையிலுள்ள மணலி - எண்ணூர் பகுதியில் முகாமிட்டிருந்த நேரம். பிரபலமான பதிப்பாளர் ஒருவர், தன் மகளின் நோயைப் பற்றி, மஹா ஸ்வாமிகளிடம் முறையிட்டு,‘பெரிய பெரிய டாக்டருங்க கூட, கைய விரிச்சிட்டாங்க. புள்ள துடிக்கிறது; சாமிதான் ஆசீர்வாதம் பண்ணனும்’னு வேண்டினார்.
ஸ்ரீமஹா ஸ்வாமிகள், ‘திருமுருகாற்றுப்படையைப் படிக்கச் சொல்லு! அவளால முடியலேன்னாக்க, நீ பாராயணம் பண்ணு! எல்லாம் சரியாயிடும்’என்று கூறிப் பிரசாதம் அளித்தார்.
அதன்படியே, அந்தப் பதிப்பாளர் திருமுருகாற்றுப் படை நூலைப் பாராயணம் செய்ய, அவர் மகள் நோயிலிருந்து மீண்டார். திருமுருகாற்றுப் படை நம் காலத்தில் நிகழ்த்திய அற்புதம் இது. அந்தப் பதிப்பாளர்... இதோ! இங்கே முதல் வரிசையில் அமர்ந்திருக்கும்..." என்று கூற, முன்வரிசையில் இருந்த பதிப்பாளர் சற்று முன் வந்து, ஐயா சொன்னது அவ்வளவும் உண்மை" என்று சொன்னார்.
திருமுருகாற்றுப்படைக்கு கி.வா.ஜ. எழுதிய உரை நூலை வெளியிட்டது - அல்லயன்ஸ் பதிப்பகம். திரு முருகாற்றுப்படையைப் பாராயணம் செய்து நோய் நீங்கப்பெற்ற அனுபவத்தைச் சொன்ன பதிப்பாளர் - வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு அவர்கள்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் - அடியேன்.
திருமுருகாற்றுப்படை எனும் அந்நூலை இயற்றி, ஆறுபடை வீடுகள் என்பதை நமக்கு உணர்த்தியவர்; சிவபெருமானையும் முருகப்பெருமானையும் நேருக்கு நேராகத் தரிசித்தவர் எனப் பற்பலப் பெருமைகளையும் பெற்றவர் நக்கீரர். தமிழ் நூல்கள் பலவும் இவருடைய பெருமைகளை விரிவாகவே பேசுகின்றன.
இப்படிப்பட்ட நக்கீரருக்குத் துயரம் விளைவித்து, அதிலிருந்து காத்தும் அருள் செய்த கந்தக் கடவுள், அதன் மூலம் நமக்கு அளித்தது என்ன?
மதுரை முதல் திருப்பரங்குன்றம் வரை, தரிசிக்க லாம் வாருங்கள்!
மதுரையில் தருமிக்குப் பொற்கிழி அளிப்பதற்காக, சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்தியதும்; நக்கீரர் வாதம் செய்ய, இறைவன் நெற்றிக்கண்ணைத் திறந்ததும்; பிறகு நக்கீரர் பொற்றாமரைக் குளத்திலிருந்து வெளிப்பட்டதும் அறிந்திருப்போம். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வே இது.
பொற்றாமரைக் குளத்திலிருந்து வெளிப்பட்ட நக்கீரருக்கு, அகத்தியர் மூலம் தமிழ் இலக்கணங்களைத் தெளிவாகப் போதிக்கச் செய்தார் சிவபெருமான். நக்கீரருக்கு உள்ளம் உருகியது; தான் செய்த தவறை நினைத்து வருந்தினார்.
‘இலக்கணத்தை முழுமையாக அறியாமல், இறைவனுடனேயே வாதாடி, நிந்தை செய்து பாவத்தைச் செய்து விட்டேனே’ என வருந்தியவர், தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். உள்ளம் முழுவதும் உமைகேள்வனின் எண்ணமே ஓங்கியிருந்தது. திருப்பரங்குன்றத்தை நெருங்கினார்.

தேவானை திருமணம் நடந்த அத்திருத்தலத்தை அடைந்ததும், நக் கீரருக்கு மெசிலிர்த்தது.
‘தேவானை மணாளா! இங்கு வந்ததும் என் மனம் தானாகவே, அடங்குகின்றதே! முருகா! உன்னை எப்படித் தரிசிப்பேன்?’ என்று பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தவர், சிவ பூஜைக்கான நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்தார்.
நீராடி, அங்கேயே ஒரு குளக்கரையில் அரச மரத்தினடியில் சிவ பூஜையைத் தொடங்கினார். அவர் அன்று செய்த சிவ பூஜையின் பலன்தான் நமக்கு ‘அறுபடை வீடு’ கிடைத் தது. நக்கீரர் சிவ வழி பாட்டில் முழுமையாக ஈடுபட்டிருந்தபோது, அவருடைய கவனத்தைச் சிதற அடிக்கும்படியான நிகழ்வு ஒன்று நடந்தது.
அரச மரத்திலிருந்த இலை ஒன்று குளத்தில் விழுந்து, பாதி நீரிலும் பாதி நீருக்கு மேலாகவும் இருந்தது. ஆச்சரியகரமாக, தண்ணீருக்குள் இருந்த பகுதி மீனாகவும், தண்ணீருக்கு மேலாக இருந்த பகுதி பறவையாகவும் மாறியது.
அவ்வாறு மாறியதில், மீன் தண்ணீருக்குள் இழுக்க; பறவை மேலே பறந்து இழுக்க; அங்கே ஒரு களேபரம் நிகழ்ந்தது. கூச்சல் கேட்டு, அப்பக்கம் திரும்பினார் நக்கீரர்.பறவை மேலே இழுக்க, மீன் கீழே இழுக்க நிகழ்ந்து கொண்டிருந்த அந்த ஆச்சரியத்தைக் கண்ட நக்கீரர், வழிபாட்டை விடுத்து எழுந்துபோய், தன் கை நகத்தால் பறவையையும் மீனையும், தனித்தனியாகப் பிரித்து விட்டார். இரண்டுமே இறந்தன.
அதற்காகவே காத்திருந்ததைப் போலத் திடீரென்று அங்கே, ஒரு பூதம் தோன்றி, நக்கீரரை அப்படியே தூக்கிக் கொண்டு போய், ஒரு குகையில் அடைத்தது.(இது அயக்கிரீவன் எனும் பிரம்மரக்ஷஸ் - என அபிதான சிந்தாமணி கூறுகிறது.)
நக்கீரரை அடைத்த பூதம் அங்கிருந்து வெளியேற, அக்குகையில் ஏற்கனவே இருந்த 999 பேர்கள், ‘ஓ’வென்று அழுதார்கள். கூடவே, ஐயா! வழிபாட்டில் தவறுபவர்களைக் கொண்டு வந்து, அடைத்து வைக்கும் அப்பூதம், ஆயிரம் பேர்கள் சேர்ந்தவுடன் அத்தனை பேர்களையும் சாப்பிடுவதாகச் சொல்லியிருக்கிறது. இப்பொழுது நீங்கள் வந்ததும், எண்ணிக்கை ஆயிரம் ஆகிவிட்டது. உங்களால் எங்கள் அனைவரின் வாழ்வும் இன்றோடு முடிந்து விடும். எங்களைக் கொன்ற பாவம், உங்களையே சேரும்" என்றார்கள்.

நக்கீரரோ, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, கவலைப் படாதீர்கள்! நூற்று எட்டுயுகங்கள், ஆயிரத்தெட்டு அண்டங்களையும் ஆண்டு, தேவாதி தேவர்களையெல்லாம் ஆட்டிப் படைத்த சூரனையே சம்ஹாரம் செய்த முருகப்பெருமான், நம்மைக் கை விட்டுவிடுவாரா என்ன? தைரியமாக இருங்கள்! அறுமுகன் நாமத்தை உருவேற்றுங்கள்" என்றார்.
அத்துடன், தானும் முருகப்பெருமான் திருவடிகளை மனத்தில் பதித்து, துதித்து முறையிட்டுப் பாடத் தொடங்கினார். அப்பாடல்களே ‘திரு முருகாற்றுப்படை’ என அழைக்கப் படுகிறது.
நக்கீரர் பாடியதும், முருகப் பெருமான் திருவடிவம் அவர் மனக் கண்முன் நின்றது. அதே விநாடியில், அண்டங்கள் எல்லாம் ஆடி உடைந்ததைப் போல, குகையில் இருந்த அனைவருக்கும் குலை நடுக்கம் ஏற்பட்டது. முருகப்பெருமானின் திருக்கை வேல் குகையைப் பிளந்து, பூதத்தையும் கொன்று, அனைவரையும் விடுதலை செய்தது.
குகையில் இருந்தவர்கள், நக்கீரர் வந்ததால் தாங்கள் பூதத்துக்கு இரையாகப் போகிறோம் என்றிருந்த அழுகையை மாற்றி, ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.
முருகப்பெருமான் தரிசனம் தந்து, திருமுரு காற்றுப்படை பாடிய நக்கீரரை, தமிழ் மொழி உள்ளளவும் உலகத்தவர் பாராட்டுவார்கள். திருமுரு காற்றுப்படையைப் பாராயணம் செய்பவர்களுக்கு,
சர்வ மங்கலங்களையும் யாம் அருளுவோம்" என ஆசி கூறி, அவர்கள் பார்வையில் இருந்து மறைந்தார்.
அது, இன்றளவும் நிறைவேறி வருவதைக் கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம். நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படையின் அடிப்படையிலேயே ‘அறுபடை வீடு’ என வழங்கப்படுகிறது.
திருப்பரங்குன்றக் கோயிலில், நக்கீரருக்கு உத்ஸவ மூர்த்தம் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவில், நான்காம் திருநாளன்று, முருகப்பெருமான் நக்கீரரைச் சிறை மீட்டருளிய திருவிளையாடல் நடைபெறும்போது, இந்த உத்ஸவ மூர்த்தி எழுந்தருளுவார்.
மதுரை, மேலமாசி வீதியில் நக்கீரருக்குக் கோயிலே உள்ளது. இதை, ‘சங்கத்தார் கோயில்’ என அழைக்கிறார்கள். திருமுருகாற்றுப்படை தீமையை நீக்கி, திருவை அருளும்!

Comments