குடும்பம் செழிக்க அருள் வழங்கும் கும்பாசி பிள்ளையார்!

விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனாகத் திகழ்பவர், மஞ்சளால் பிடித்து வைத்தாலும் மங்கலத்தினை அளவில்லாமல் அருள்பவர் யாராக இருக்க முடியும்? உமை மைந்தனான வேழமுகத்தோன்தான்.

அரச மரத்தடியிலும், குளக்கரையிலும் அமர்ந்துகொண்டு, குன்றாத வளமையை வழிப்போக்கர்களுக்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளலான விநாயகர், கும்பாசி விநாயகர் என்னும் திருநாமத்துடன் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், கும்பாசி - ஆனைகுட்டே பகுதியில் அருள்பாலிக்கிறார். துவாபர யுகத்தில் நடந்த இதன் பின்னணியைப் பார்ப்போம்.

கும்பன் என்கிற அசுரன், சிவபெருமானிடம் ஓர் அரிய வரத்தைப் பெற்றிருந்தான். அதாவது, தான் எல்லாரையும்விட மிகுந்த பலசாலியாக விளங்க வேண்டும் என்பதுதான். அவ்வரம் பெற்றதால், ஆணவத்தில் எல்லாருக்கும் மிகுந்த தொல்லைகள் கொடுத்து வந்தான். முனி சிரேஷ்டர் களையும் அவன் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில், நாகாசலம் என்னும் இடத்தில் ஆஸ்ரமம் அமைத்துத் தங்கியிருந்தார் கௌதம முனிவர். அவர், தன் குடிலுக்கு வந்த பஞ்சபாண்டவர்களில் யுதிஷ்டிரரிடம், அசுரனால் ஏற்பட்டிருக்கும் இன்னல்களைப் பற்றி எடுத்துக் கூறி, தங்களுக்கு உதவுமாறு  கேட்டுக்கொண்டார்.


கும்பனை வதம் செய்யும் பொறுப்பை யுதிஷ்டிரர், பீமனிடம் ஒப்படைத் தார். மிகவும் போராடியும் கும்பனை அழிக்க முடியாமல் போனது. அப்போது, விநாயகப் பெருமானிடம் இருந்து பெற்ற ஆயுதம் ஒன்றால் மட்டுமே  கும்பாசுரனை ஜெயிக்க முடியும் என்று ஓர் அசரீரி கேட்டது. பீமனும் விநாயகரைத் துதித்து நின்றான். விநாயகர், யானை வடிவில் அவன்முன் தோன்றி, கும்பனை அழிக்கவல்ல ஒரு வாளையும் (அசி)  அவனுக்குத் தந்து அருளினார். அந்த வாளின் உதவியுடன் கும்பனை பீமன் அழித்து நாகாசலத்தில் அமைதியை நிலவச் செய்தான். பின்னர், கௌதமரின் வேண்டுகோளுக்கிரங்கிய பிள்ளையார் அங்கேயே தங்கி, அடியவர்களுக்கு வேண்டும் வரம் அருளுவதாக வாக்களித்தார்.

சம்ஸ்கிருதத்தில் கஜகிரி என்றும் கன்னடத்தில் ஆனகுட்டே என்றும் வழங்கப்படுகிறது இத்தலம். இங்கு அருள்பாலிக்கும் விநாயகர், கும்பாசி விநாயகர் என்று போற்றப்படுகிறார். சுமார் 12 அடி உயரமுள்ள சுயம்பு மூர்த்தி இவர். முழுமையான ஓர் உருவம் இல்லாத சுயம்பு என்றாலும் இவர் மேனியில் தும்பிக்கை தென்படுவதை வியப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். எப்போதுமே வெள்ளி கவசத்துடன் காணப்படும் அர்ச்சாவதாரி, காலையில் நின்ற கோலத்திலும் மற்ற நேரங்களில் அமர்ந்த கோலத் திலும் காட்சி அளிக்கிறார். இவருக்கு வைஷ்ணவ சம்பிரதாயப்படி நாமம் சார்த்தப்படுகிறது. ஆகவே, `விஷ்ணு ரூப விநாயகர்' என்று இவரைச் சிறப்பிக்கிறார்கள். வேண்டும் வரத்தை அளிப்பவராதலால் `சர்வ ஸித்தி ப்ரதாயகன்' என்றும் வணங்கப்படுகிறார்.

கும்பாசி விநாயகருக்கு ஏகாதசி தவிர மற்ற நாள்களில்,  108 முதல் 1,008 தேங்காய்கள் வரை பக்தர்களால் வேண்டுதலுக்காகச் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்தத் தேங்காய்களை இரண்டாக உடைத்து மலை போல் குவித்து, பகவானுக்கு முன் அர்ப்பணம் செய்கின்றனர்.


இங்கு, அருகில் அமைந்திருக்கும் மகாலிங்கேஸ்வரர் கோயில் பிராகாரத்தில் உள்ள கிணற்றில் இருந்துதான்  விநாயகரின் அபிஷேகத்துக்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. அதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. அந்தக் காலத்தில் கௌதம மகரிஷியின் உயிரற்ற பசுவினை சிவபெருமானின் அருளாசியோடு அவரால் தருவிக்கப்பட்ட கங்கை நீரைத் தெளித்ததால், அப்பசு மீண்டும் உயிர்பெற்றதாம். இன்றும் அந்த இடத்தில் கங்கை வாசம் செய்வதாகக் கருதுகிறார்கள். அதனால் அந்த இடத்தில் கிணற்றை உண்டாக்கி இருக்கிறார்கள்.

இங்கு முக்கியமாக பூக்களுக்குப் பதில், பாக்கு மரத்துக் குருத்துகளையே ஆண்டவனுக்குச் சமர்ப்பித்துவிட்டு, அதையே பிரசாதமாகப் பெற்றுச் செல்கிறார்கள்.

திருமணமா, பேறு பாக்கியமா, வேலையில் தடங்கலா, குடும்பத்தில் குழப்பமா, கணவன் மனைவி உறவில் விரிசல் எதுவாக இருந்தாலும் இருக்கவே இருக்கிறார், கும்பாசி விநாயகர் என்கிறார்கள். ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று விநாயகரை வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்.



கும்பாசி விநாயகரைத் தரிசிக்க எப்படி செல்வது?

கர்நாடகா மாநிலம் - உடுப்பியிலிருந்து சுமார் 26 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கும்பாசி. தமிழகத்தில் இருந்து செல்பவர்கள், மங்களூருக்கு ரயிலில் பயணித்து, அங்கிருந்து கும்பாசிக்குச் செல்லலாம். மங்களூரிலிருந்து உடுப்பிக்குப் பேருந்து வசதி உண்டு.

கோயில் திறந்திருக்கும் நேரம்- காலை 5.30 முதல் 12.30 மணி வரை; மாலை 4.30 முதல் 9 மணி வரை.

Comments