நன்மையும் செல்வமும் நல்கும் நாமம்!

அன்மையும் செல்வமும் நாளும் நல்குமே என ராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால், எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு, பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜனன, மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்’ என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
திருமாலின் ஏழாவது அவதாரமான ஸ்ரீராமரின் திருப்பிறப்பு, சித்திரை மாதம், நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில், கடக லக்னத்தில் ஏற்பட்டது. அதுவும், நடுப்பகல் கோடை வெயிலில் ஸ்ரீ ராமபிரானின் அவதாரம் அயோத்தியில் நிகழ்ந்தது. அவர் ஏற்றுக்கொண்ட வனவாசமும் உஷ்ணத்திலேயே பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்தது. பரந்தாமனின் வெப்பத்தை ஆற்றும் பொருட்டே பக்தர்கள், ராம நவமி நன்னாளில் பானகமும் நீர் மோரும் படைத்து மகிழ்கிறார்கள். ஸ்ரீ ராமரின் சரித்திரமான ராமாயண விரிவுரையைக் கேட்டுப் பயன் பெறுகிறார்கள். மூல மந்திரமான, ராம நாமத்தை எழுதியும், உச்சரித்தும், உருவேற்றியும் மகிழ்கிறார்கள்.
ராம நாமத்தின் பெருமையை கம்பர் எப்படிச் சொல்கிறார் தெரியுமா?
‘மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரம்’
‘தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்’
‘எழுமை நோய்க்கும் மருந்து’ என்கிறார்.
தேசப்பிதா காந்தியடிகள் சொல்கிறார், ‘நான் உணவின்றி பல நாட்கள் இருந்தாலும் இருப்பேன். ராம நாம ஜபம் இன்றி இமைப்பொழுதும், ஒரு கணமும் இருக்க மாட்டேன்’ என்கிறார்.
‘எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, ராமரின் திருக்கதை எவ்விடங்களில் எல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அழுத கண்ணும், தொழுத கையும் உடையவனாக அனுமன் விளங்குகிறான் என்பதை நாம் அறிந்திருப்போம்.
ராம நாமம் கூறியே அனுமன் கடலைக் கடந்தான். ஆனால், மூல மந்திரத்துக்கு உரிய மூர்த்தியோ, அணை கட்டி, ‘சேது ராமனாக’ ஆகியே இலங்கை சென்றார். ஆக, மூர்த்தியைவிட மூல மந்திர ஜபமே சாலச் சிறந்தது என்று கண்டு, பாரத ஞானிகள் அனைவரும் அப்பாதையில்தான் சென்றார்கள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் ராம பக்தி ஆன்மிக உலகம் அறிந்த ஒன்று. திருமால் பக்தர்களின் எட்டெழுத்தும், சிவநேயச் செல்வர்களின் ஐந்தெழுத்தும் சேர்ந்தே, ‘ராம’ என்ற இரண்டெழுத்து மந்திரம் உருவானது என்கிறார், ‘எவரநி’ என்று தொடங்கும் கீர்த்தனையில் தியாகராஜர். ஆம்! ‘நாராயணாய’ மந்திரத்தில் ஜீவ அட்சரம் ‘ரா.’ அவ்வெழுத்து இல்லையேல், ‘ந’ அயனாய என்று ‘வழி’ காட்டாதவன்’ எனப் பொருள் மாறிவிடும்.
அவ்வாறே, ‘நமசிவாய’ மந்திரத்தில் ஜீவ அட்சரம் ‘ம’ அவ்வெழுத்தை எடுத்து விட்டால் ‘ந சிவாய’ என ‘மங்கலத்தை வழங்காதவன்’ எனப் பொருள்படும். ஆக, இரு மூல மந்திரங்களிலும் உயிர் எழுத்தாக உள்ள, ‘ரா, ம’ என்ற இரண்டு எழுத்துக்களும் இணைந்து, ‘ராம’ என்ற அற்புதச் சொற்பதம் பிறந்தது. அதுவே, நாற்பதம் அருளும் என்கிறார் தியாகராஜர். ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் கூறி பெருமாளை வழிபட்ட பலன் ராம நாமத்தைக் கூறுவதாலேயே சித்திக்கும் என்பதை ‘ஸகஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே’ என்ற சுலோகம் உணர்த்துகிறது.
ராமர் என்ற பதமே பலருக்கும் பிடித்திருக்கிறது. அதனால்தான், கல்யாணராமன், சீதாராமன், ராஜா ராமன், யக்ஞராமன், சந்தானராமன், ஜெயராமன்,
சிவராமன் என்று அனந்தராமர் நாமங்கள். நமக்கு மட்டுமல்ல, பெருமாளுக்கே அந்த நாமம் பிடித்திருப் பதால்தான் இதுவரை எடுத்த ஒன்பது அவதாரங்களில் மூன்று அவதாரப் பெயர்கள் பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர் என விளங்குகிறது.
‘தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான்
புகுந்த...
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே!’
என இளங்கோவடிகள் பாடுகிறார்.
‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும்
கற்பரோ’ என நம்மாழ்வார் நவில்கிறார்.
‘அந்தி காலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் ஜபங்களும் தபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் ஜபிக்கும்
மந்திரமும்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே!’
எனச் சிறப்பாகக் கூறுகிறது தனிப்பாடல் ஒன்று!
‘உலக சகோதரத்துவம்’ என்ற வார்த்தைக்கு உயர்ந்த சரித்திரமாக விளங்குவது ராமாயணம் தான்.
கங்கைக் கரையில் வேடுவன் குகன், கிஷ்கிந்தையில் குரங்கினத் தலைவன் சுக்ரீவன், இலங்கையில் அரக்கரினத்தைச் சேர்ந்த வீபிஷணன் அனைவரையும் தம்பியராக ராமர் ஏற்றுக் கொண்ட தனிப்பெரும் வரலாறுதானே ராமாயணம்.
நவமியில் பிறந்த நாயகரான ராமர் உபதேசம் மூலமாக தன் கொள்கைகளை விளக்காமல், உதாரண புருஷராக, தானே வாழ்ந்து காட்டினார். ‘இன்று போய் போருக்கு நாளை வா’ என பகைவனுக்கும் கருணை காட்டினார். வானரங்கள், பறவை ஜடாயு, கரடி ஜாம்ப வான், அணில் என ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்ற மேலான சமத்துவத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த இதிகாச நாயகரே ஸ்ரீராமர்.
ஸ்ரீரங்கம் திருவரங்கநாதப் பெருமான், சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். இவர், இக்ஷ்வாகு குல தனம் என்று கொண்டாடப்படுபவர். ராமன் தன் குலத்தில் ஆராதித்து வந்த பெருமானை, பக்தன் விபீஷணனுக்கு அருளினான். அவ்வாறு வந்த பெருமான் இங்கே சயனித்தார். அதனால்தானோ என்னவோ, ஸ்ரீரங்கம் திருக்கோயிலில், ராமபிரான் பல சன்னிதிகளில் காட்சி தருகிறார். கோதண்ட ராமனாக, பட்டாபிராமனாக என்றெல்லாம்! கோதண்ட ராமர் சன்னிதியில் பெருமாள் பிரமாண்ட விக்ரஹ ரூபியா, கையில் கோதண்டத்தை ஏந்தி, அகல விரித்த கண்களுடன் ஆச்சரிய எழில் கோலத்தில் காட்சி தருகிறார். இவர் சன்னிதியில், ராம பிரானை அதிகம் ஆராதித்த குலசேகராழ்வார் சன்னிதி கொண்டுள்ளார். இந்த ஸ்ரீராம நவமி நாளில்
ஸ்ரீகோதண்டராமனை தரிசித்து உயர்வோம்!
நன்மையும் செல்வமும் நாளும் கைகூடும்!

Comments