சரண்புகுந்தோர்க்கு சஞ்சலங்கள் இல்லை!

புல்லாரண்யம், தர்ப்ப சயனம் ஆகிய சிறப்புப் பெயர்களால் போற்றப்படும் திருத்தலம் திருப்புல்லாணி. 108 திவ்ய தேசங்களில் 44-வது க்ஷேத்திரம்; திருமங்கையாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற தலம். ராமநாதபுரத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் இருக்கும் இந்தத் தலம், மகரிஷிகள் பலராலும் போற்றப்பட்டதாகும். கிருத யுகத்தில் புல்லவர், கால்வர், கண்வர் ஆகிய மூன்று மகரிஷிகளும், தர்ப்பைப் புற்கள் நிரம்பிய திருப்புல்லாணிக் காட்டில் உலக நன்மைக்காகத் தவம் இருந்தனர். அவர்களுக்கு அசுரர்கள் பலவிதங்களில் துன்பத்தைத் தந்தனர். 
அப்போது, அரசமர ரூபத்தில் தோன்றி அவர்களைக் காப்பாற்றினார் மகாவிஷ்ணு. மேலும், அந்த மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று, சங்கு சக்ரதாரியாக அபய முத்திரையுடன் திருக்காட்சியும் தந்தார். அவரைத் தரிசித்த முனிபுங்கவர்கள் நெகிழ்ந்து போனார்கள். அதே திருக்கோலத்தில் அங்கேயே கோயில்கொண்டு, இன்றைக்கும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, அவர்கள் வேண்டும் வரங்களை அளித்து அருள்பாலிக்கிறார் பெருமாள். தாயாரின் திருநாமம் அருள்மிகு பத்மாசனி தாயார்.

இதிகாசத்தில் திருப்புல்லாணி...

அயோத்தியை ஆண்ட தசரத மன்னன், புத்திரபாக்கியம் பெறுவதற்காக இங்குள்ள பெருமாளின்  மூலமந்திர உபதேசத்தைப் பெற்று, ஸ்ரீராமபிரானை மகனாகப் பெற்றதாகச் சொல்கிறார்கள்.  ஸ்ரீராமபிரான் சயனகோலத்தில் அருள்வது, இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சம். ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையைத் தேடிப் பயணித்த ஸ்ரீராமன்,  திருப்புல்லாணி அருகில் உள்ள சேதுக்கரை வரை வந்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.

கடற்கரையை அடைந்த ராமன், கண்ணுக் கெதிரில் விரிந்து பரந்து கிடக்கும் கடற்பரப்பைக் கண்டு, ‘எப்படி இதைக்  கடந்து செல்வது, யார் உதவியை நாடுவது’ என்ற ஆயாசத்துடனும் சோகத்துடனும் தன்னுடைய தம்பி லட்சுமணன் மடியில் தலை சாய்த்துப் படுத்தார். தர்ப்பைப் புல் பரப்பி, அதிலேயே மூன்று நாள்கள் உபவாசம் இருந்தார். அவரது திருமேனியைத் தர்ப்பைப் புற்கள் தாங்கி பெரும் புண்ணியம் பெற்றதால், ‘திருப்புல்லாணி’ எனப் பெயர் பெற்றதாம் இந்தத் திருத்தலம்.  

ஸ்ரீராமனின் இந்த தர்ப்ப சயனக் கோலத்தை, ‘‘குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி’’ என்று பாடியுள்ளார் ஆழ்வார். இதனடிப்படையிலேயே, இங்கே ஆதிசேஷனின் மீது தர்ப்பை விரித்து அதில் சயனிக்கும் கோலத் தில் ஸ்ரீராமனின் திருமேனி வடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
சரண் புகுவோருக்கு அபயம் அளிக்கும் தெய்வம்


ஸ்ரீராமன் இந்தத் தலத்தில் இருந்தபோது, ராவணனின் தம்பி விபீஷணன் அங்கு வந்தான். ‘‘என் அண்ணன் ராவணனால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டேன். ரகுராமா! உன்னைச் சரணடைந்தேன்’’ எனக் கூறி, சரணாகதி அடைந்தார். அதேபோல், ராவணனால் ராமனை வேவு பார்க்க அனுப்பப்பட்ட சுகன், சாரணன் ஆகியோரும் இங்கே ராமனைக் கண்டதும் அவரிடம் சரணடைந்தனர்.

ஸ்ரீராமன் கடலின் நடுவே பாலம் அமைக்க, கடலரசனிடம் அனுமதி கேட்டார். ஆனால், கடலரசனோ ராமரின் முன் தோன்றவில்லை. இதனால், கோபம்கொண்ட ஸ்ரீராமன் சமுத்திரத்தை நோக்கி பாணம் தொடுக்க முனைந் தார். அதனால் பயந்து போன சமுத்திரராஜன் தன் மனைவியுடன் ஸ்ரீராமனிடம் சரணடைந்தார்.

அவர்கள் அனைவருக்கும் அபயம் அளித்து அருள்புரிந்தார் ஸ்ரீராமபிரான். ஆகவே, 108 திவ்ய தேசங்களில் சரணாகதி தேசமாக விளங்குவது திருப்புல்லாணி மட்டும்தான். இங்கு வந்து பகவானிடம் சரணடையும் பக்தர்களுக்கு எப்போதும் துன்பங்கள் நேராது என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். இங்கு குடிகொண்டுள்ள ஜெகந்நாதப் பெருமாளிடம், சீதையை மீட்க அருளும்படி வேண்டிக்கொண்டாராம் ராமன். பெருமாளும் ஸ்ரீராமனுக்குப் பாணம் ஒன்றை அளித்து அருள்பாலித்தார். அதைக்கொண்டே ஸ்ரீராமன், ராவணனை அழித்தார் என்பர்.

சீதையை மீட்கச் செல்லும்முன் தங்கிச் சென்ற தலம் என்பதால், இங்குச் சீதை இல்லை. லட்சுமண ரின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயருடன் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் ஆகியோர் உள்ளனர்.

திருப்புல்லாணியில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சேதுக்கரை என்ற இடத்தின் வழியாகத்தான் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்றார் ராமர். அங்கிருந்து சீதையை மீட்டு வந்தவர், ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த பின்னர், திருப்புல்லாணிக்கு வந்து சுவாமியைத் தரிசனம் செய்தார். அதன் பிறகே அவர் அயோத்திக்குச் சென்று முடிசூடிக் கொண்டார். இதைக் குறிக்கும் வகையில், சீதை லட்சுமணருடன் கொடி மரத்துடன் கூடிய சந்நிதியில் ஸ்ரீபட்டாபிராமன்  காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் இவருக்குப் பிரமோற்ஸவம் நடக்கிறது. பங்குனியில் ஸ்ரீராமஜயந்தியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

குழந்தை வரம் கிடைக்கும்


தசரதர் குழந்தை பாக்கியத்துக்காக இங்கு வந்து புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தியுள்ளார். அப்போது, யாகக்குண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயசத்தை மனைவியருக்குக் கொடுத்தார். அதைப் பருகிய தசரதரின் பத்தினியருக்கு ராமனும் அவன் சகோதரர்களும் குழந்தைகளாகப் பிறந்தனர்.
குழந்தையில்லாமல் தவிக்கும் அன்பர்கள், இந்தத் தலத்துக்கு வந்து அதிகாலையில் சேதுக்கரைக்குச் சென்று நீராடிவிட்டு, பிறகு திருப்புல்லாணி கோயிலுக்கு வந்து வழிபட்டால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தங்களாக ஹேம தீர்த்தம், சக்ர தீர்த்தம், ரத்னாகர தீர்த்தம் ஆகியவையும் உள்ளன. காலை 7 முதல் 12:30 மணி வரையிலும், மாலை 3:30 முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். விரைவில், குடமுழுக்கு நடக்க உள்ள இக்கோயிலில் தற்போது அதற்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன.

வாழ்வில் புதிய திருப்பங்கள் காண விரும்பும் அன்பர்கள், ஒருமுறை திருப்புல்லாணிக்குச் சென்று ஸ்ரீராமனை வழிபட்டு வாருங்கள். சரண்புகுந்தாருக்கு சந்தோஷம் அளிக்கும் ராமன், உங்களது சஞ்சலங்களையெல்லாம் களைந்து சந்தோஷத்தை வாரி வழங்குவார்.

எப்படிச் செல்வது?

ரயில், பஸ் மற்றும் காரில் ராமநாதபுரம் வருபவர்கள், அங்கிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருப்புல்லாணிக்கு, வாடகைக் கார்களிலோ,  அரசுப் பேருந்துகளிலோ செல்லலாம்.
ராமேஸ்வரத்தைத் தரிசிக்க வரும் அன்பர்கள், அங்கிருந்து சுற்றுலா வாகனங்கள் மூலம் சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள திருப்புல்லாணி மற்றும் ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள திருஉத்ரகோசமங்கை, தேவிப்பட்டினம் ஆகிய தலங்களையும் தரிசித்து வரலாம்.

Comments