கனவில் முருகன்... சிவன்மலை உண்டியலில் காணிக்கை..!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் என்ற ஊரில் அமைந்துள்ளது சிவன்மலை.  மேருமலையின் உச்சி பாகம் விழுந்த இடம்தான் சிவன்மலை என்று தலபுராணம் கூறுகின்றது. இந்த மலையின் உச்சியில் பார்வதி தேவி தவம் இருந்ததாகவும், அதன் காரணமாக இந்த மலைக்கு சக்திமலை என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.மேலும் சிவகிரி, சிவசைலம், வெள்ளிமலை, செம்புமலை, பணமலை ஆகிய பெயர்களாலும் இந்த மலையைப் போற்றுகின்றன புராணங்கள். 
சிவன்மலை
ஆகமங்கள் குறித்து அறிய விரும்பிய அகத்தியர் இங்கு வந்து தவம் செய்ததாகவும், அப்போது அவர் தமது கமண்டல நீரைக் கொண்டு இங்குள்ள தீர்த்தத்தை (நீர்ச்சுனையை) உருவாக்கினார் என்றும் சொல்லப்படுகிறது.இது தொடர்பான ஐதீக விழா கார்த்திகை பெளர்ணமியில் கொண்டாடப்படுகிறது.
சிவ வாக்கியரும் இங்கு தவம் செய்திருக்கிறார். அவர் பூஜித்த ஆத்ம லிங்கம் இத்தலத்தில் போகசக்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவத் தலம் என்றாலும், முருகப்பெருமான் இங்கு சிறப்பிடம் பெற்றிருக்கிறார். வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணந்த முருகக்கடவுள் நாரதரின் அறிவுரைப்படி, அங்கிருந்து சிவன் மலைக்கு எழுந்தருளியதாகத் தலபுராணம் சொல்கிறது. இங்கே, சுப்ரமணிய ஸ்வாமியாக வள்ளிதேவியுடன் மணக் கோலத்தில் அருள்கிறார் முருகன். பல வருடங்களாக இந்த கோயிலில் இருக்கக்கூடிய ஒரு வழக்கத்தை பக்தர்கள் அனைவரும் அதிதீவிரமாக நம்பி வருகிறார்கள். அதாவது இந்த கோயிலில் "ஆண்டவன் உத்தரவு பெட்டி" என்ற கண்ணாடி பொருத்தப்பட்ட பெட்டி ஒன்று இருக்கிறது. யாரேனும் ஒரு பக்தரின் கனவில் தோன்றும் சிவன்மலை ஆண்டவர் ஒரு பொருளை குறிப்பிட்டு அதை உடனே ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்குமாறு கூறுவாராம்.  
கனவில் ஆண்டவன் தோன்றி உத்தரவிட்டதாக அந்த பக்தர் திருக்கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தால், உடனே ஆண்டவனிடம் பூ கேட்டு அனுமதி கிடைக்கும்பட்சத்தில், கனவில் ஆண்டவர் குறிப்பிட்ட பொருளை உடனடியாக அந்த உத்தரவு பெட்டியில் வைத்து பூட்டி பூஜிக்க துவங்கிவிடுவர். அடுத்த சில நாட்களில் அந்த பொருளைச் சார்ந்த ஏதாவது சம்பவங்கள் நாட்டில் நடந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. துப்பாக்கி வைத்து பூஜை செய்தபோது சீனா - இந்தியா இடையில் போர் ஏற்பட்டது. சைக்கிள் வைத்து பூஜை செய்தபோது சைக்கிள்களின் பயன்பாடு குறைந்து, மொபெட், டி.வி.எஸ்.50 போன்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மணல் வைத்து பூஜை செய்தபோது மணல் விலை ஏறியது. மஞ்சள், தங்கம், நெல் என்று வைத்து பூஜை செய்தபோது அவற்றின் விலை ஏறியது. சில வருடங்களுக்கு முன்பு  பக்தரின் கனவில் தண்ணீர் தோன்றிய சமயம் சுனாமி வந்தது, தேங்காய் தோன்றியபோது அதன் விலை கிடுகிடுவென அதிகரித்தது என இக்கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் ஆண்டவன் உத்தரவு பெட்டி குறித்து பக்தர்கள் சிலாகிப்பது வழக்கம்.  
சிவன் மலை
இந்நிலையில் தற்போது  சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.சங்கர் சுப்பிரமணியம் என்ற பக்தரின் கனவில் கடந்த செவ்வாய்க்கிழமை சிவன்மலை முருகன் தோன்றி 108 ருத்ராட்சம் வைத்து சிறப்பு பூஜை செய்யுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த இரும்புச் சங்கிலி நீக்கப்பட்டு, தற்போது ஒரு சிறிய பையில் 108 ருத்ராட்சங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நாட்டில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறதோ என்ற ஆர்வத்தில் பக்தர்கள் சிவன்மலை கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியை  ஆச்சரியத்துடன் தரிசித்து வருகின்றனர்.

Comments