சித்தர் சிவவாக்கியர்

புமியில் பிறக்கும் ஜீவன், முதன் முதலில் எழுப்பும் நாதம் ‘ம்மா’ என்பது. ஆனால், தை மாத மக நட்சத்திரத்தில் பிறந்த இந்த சீவனோ, ‘சிவ சிவ’ எனத் தம் முதல் வார்த்தையை முழங்கியது. சீவனே சிவமெனத் திகழ்ந்த வாக்கியத்தைக் கொண்டதால், ‘சிவவாக்கியர்’ என்றே அழைக்கப்பட்டார் இந்த சித்த புருஷர். ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளி ருக்கையில்!’ நம்மில் பலருக்கும் பழக்கமான வாக்கியம்தான்! சித்தத்தை சிவத்தில் வைத்துச் சீவனே சிவமாகும் தன்மையைப் புரிய வைத்த சித்த மரபில், இப்படியும் ஒரு கருத்து இருக்குமோ?
‘நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம்
சாற்றியே சுற்றி வந்து முணு முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்..!’
நாத்திகப் பாடல் போல், உருவ வழிபாட்டை கேலி பேசும் விதமா இருக்கும் இந்தப் பாடலில்தான் என்னவொரு பக்திச்சுவை! பாடலைப் பாடியவர் சித்தர் சிவவாக்கியர் ஆயிற்றே.
தம் பாடல்களில் சித்த வித்தையை அற்புதங்களாக்கி அதனுள்ளே அடக்கிக் காட்டியவர் சிவவாக்கியர். கறியைச் சமைக்கின்றபோது, சட்டியில் இட்டுக் கிளறும் சட்டுவம் அதன் சுவையை அறியுமோ? என்று உலகியல் நடப்பை எளிமையாகப் புரிய வைத்தவர். ‘ஓசை உள்ள கல்லை உடைத்து இரண்டாச் செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர், பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர். ஈசனுக்கு உகந்த கல் எந்தக் கல்லு சொல்லுமே!’ என்று வேதாந்த விசாரத்தை விளக்கமாக் கேட்கும் இவரின் வார்த்தைச் சித்து தனி ரகம்தான்! எனவேதான் இவர் பாடல்கள், ‘சிவ வாக்கியம்’ என தனி ரகத்துடன் அழைக்கப்படுகிறது.
சித்தர் சிவவாக்கியர் போகருக்கு முந்தைய காலத்தவர் என்பர். சிவவாக்கியரைக் குறித்து, போகர் தம் சத்த காண்டத்தில் குறிப்பிட்டிருப்பதால், அவ்வாறு கூறுவர். ‘சிவ சிவ’ எனும் சொல் கொண்டு சிவத்தைச் சித்தத்தில் வைத்துப் பிறந்த இவர், இளமைக் காலத்தில் தகுந்த பெரியோர் மூலம் வேதங்களைக் கற்று, தம் உள்ளத்துக்கு உகந்தபடி சித்த வித்தையைக்கற்க, தக்க குருவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அப்போது தான், காசியில் சித்தர் ஒருவர் உள்ளதாகக் கேள்விப் பட்டு, அவரை அடைய காசிக்குச் சென்றார்.
சித்தரென்று கேள்விப்பட்டு அங்கே சென்றால், அவர் செருப்புத் தைக்கும் தொழிலாளராக வீற்றிருந்தார். ஆயினும், அவரைக் கண்டதும் ஏதோ ஒரு ஞான வொளி வெளிச்சத்தில் தாமும் புகுந்திருப்பதா உணர்ந்தார். இவர் செருப்புத் தைப்பவரே அல்லர், ஞானத்தைத் தைத்து நமக்கு வழங்குவதற்காகவே உள்ளவர். இங்கே செருப்புத் தைப்பவர் போல் நாடக மாடிக் கொண்டிருக்கிறார். இவரே தம் ஞானகுரு என்று தமக்குள் தீர்மானித்துக் கொண்டார். சீடர் குருவைத் தேர்ந்தெடுத்து விட்டார். ஆனால், அந்த குருவோ, அவ்வளவு எளிதில் சிவவாக்கியரைத் தம் சீடராக ஏற்கவில்லை. இருப்பினும், சிவவாக்கியரைக் கண்ட மாத்திரத்தில், இவரே தம் ஞானத்தை உலகுக்கு எடுத்துச் செல்லப்போகும் ஞானவான் என்று அவர் மனத்திலும் புரிந்து விட்டது. இருந்தாலும், சீடரின் மனத்தையும் நம்பிக்கை உறுதியையும் சொதிக்க விரும்பினார். செருப்புத் தைத்து தாம் சம்பாதித்து வைத்திருந்த காசுகளைக் கொடுத்து, இதை என் தங்கை கங்காதேவியிடம் கொடுத்துவிட்டு வா" என்றார். அருகில் வைத்திருந்த பேச் சுரைக்காயை எடுத்துக் கொடுத்து, கசப்பாக இருக்கும் இதனை நீரில் கழுவி, கசப்பை நீக்கிக் கொண்டு வா" என்றார். அந்தச் சித்தரின் வாக்கிலும் செயலிலும் தம்மை மறந்திருந்த சிவவாக்கியர் அவ்வாறே கங்கைக் கரைக்குச் சென்றார்.
‘ஏதோ சாதாரண செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு கங்கை தங்கையாம்! இந்தப் பேச்சுரைக் காயை நீரில் கழுவினால் கசப்பு போவிடுமாம்! யாரிடம் கதை விடுகிறார்’ என்று பகுத்தறிவு வேலையையெல்லாம் அவர் அப்போது பார்க்க வில்லை. குருவின் மீதான முழு நம்பிக்கை, பக்தி. சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற அடிபணிதல் எல்லாமாகச் சேர்ந்து கொண்டு, கங்கையில் இறங்கி நீரைத் தொட்டார்.
அதிசயமாக அவர் கண் முன்னே நீருக்குள் இருந்து வளைக்கரம் ஒன்று மேலெழுந்தது. அது இவரிடம் கை நீட்டி விரல்களை விரித்து, யாசிப்பதைப் போல் நின்றது. இந்த நிகழ்வால் அணு அளவும் ஆச்சரியப் பட்டோ பிரமித்தோ நிற்காத சிவவாக்கியர், தாம் கொண்டு வந்திருந்த காசுகளை அந்தக் கரத்தில் வைத்தார். விரல்களை மடக்கி காசைப் பெற்றுக் கொண்ட அந்தக் கரம்,சடாரென நீருக்குள் மூழ்கி மறைந்தது.
அதன்பின், தம்மிடம் இருந்த பேச்சுரைக்காயை எடுத்து, கழுவிக் கொண்டு, அந்தச் சித்தர் இருக்குமிடம் சென்றார் சிவவாக்கியர். பின் நடந்தவற்றை குருவிடம் விவரித்தார். இருப்பினும், சிவவாக்கியரின் மனத்தை அறிய விரும்பிய அவர், மீண்டும் அவரை சொதித்தார். தாம் செருப்பு தைப்பதற்காக அருகே வைத்திருந்த தோல் பையில் நீர் இருந்தது. சித்தர் சொன்னார், அடடா! நான் அவசரப்பட்டு விட்டேன். என் தங்கை கங்கை வைதீகமானவள். அவள் இதோ இந்தத் தோல் பையிலுள்ள நீரிலும் இருப்பாள். நீ கங்கையில் முன்பு அவளிடம் கொடுத்த காசுகளைக்கேள். அவள் மறுக்காமல் கொடுப்பாள்" என்றார். குருவின் வாக்கை சிரமேற்கொண்ட
சிவவாக்கியரும் அவ்வாறே கேட்டார்.
அந்தத் தோல் பை நீரில் இருந்து கலகலவென்ற வளையொலியுடன் கங்கையில் பார்த்த அதே வளைக் கரம் தோன்றியது. சிவவாக்கியரின் கைகளில் அவர் கொடுத்த அதே காசுகளைக் கொடுத்துவிட்டு மறைந்தது. அதை ஏதோ சாதாரண ஒரு நிகழ்வு போல் சலனமின்றிப் பார்த்தபடி, அந்தக் காசுகளை குருவிடம் கொடுத்தார் சிவவாக்கியர். இதைக் கண்ட காசி சித்தர், சிவவாக்கியர் பக்குவம் அடைந்துவிட்டார் என்பதை அறிந்தார். அவருக்கு சித்த வித்யையை உபதேசிக்க ஆரம்பித்தார். இருப்பினும் கங்காதேவி யின் வளைக்கரமானது கை நீட்டிக் காசு கொடுத்த போது, அந்த விரல்கள் அவரைத் தீண்டிய அந்த ஸ்பரிசத்தால், சிவவாக்கியரின் உடல் சிலிர்த்ததைக் கண்டு கொண்டார் காசி சித்தர். எனவே, சிவவாக்கியருக்கு இல்லறத்தில் இன்னும் ஆசை மிச்சம் இருக்கிறது என்பதை உணர்ந்தார்.
உனக்கு முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் சில காலம் இருக்க வேண்டும்" என்று அன்புக் கட்டளை பிறப்பித்து, அவர் இல்லறத்தில் ஈடுபடுவ தற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் கையில் ஓர் ஆழாக்கு மணலையும், பேச்சுரைக்கா ஒன்றையும் கொடுத்தார். இதை எடுத்துக் கொண்டு செல். இவற்றை வைத்துக் கொண்டு, உனக்கு எந்தப் பெண் சமைத்துப்போட ஒப்புக் கொள்கிறாளோ அவளையே நீ மணம் செய்துகொள்" என அருளினார்.
காசி சித்தர் கொடுத்த பேச்சுரைக்கா, மணல் ஆகியவற்றை வைத்தபடி, பெண் தேடிப் புறப்பட்டார். அவரது நிபந்தனையைக் கேட்டு பலர் அவரைப் பரிகாசம் செய்தனர். இவரது உடல் வனப்பைக் கண்டு பெண்கள் பெருமூச்சு விட்டனர். ஆயினும், இவர் சமைக்கக் கொடுக்கும் பேச்சுரைக்கா, மணலைப் பார்த்து மிரண்டு ஓடினர். உமக்கு பைத்தியம் முற்றிவிட்டது" என்று பெண்கள் ஏளனம் செய்தனர். அவர்களிடம் அவர், என் குருநாதர் இட்ட கட்டளை இது. இவற்றைக் கொண்டு சமைத்துத் தரும் பெண்ணே எனக்கு மனைவியாக அமைவாள்" என்று எடுத்துக் கூறினார். இதைக் கேட்டதும், அவர்கள் தலைதெறிக்க ஓடினர்.
தம் குருநாதர் கற்றுக்கொடுத்த வித்யையை சிரத்தையாகக் கடைப்பிடித்தார் சிவவாக்கியர். அவரது அனுபவங்கள் பாடல்களாக வெளிப்பட்டன. அதுவும் சந்த நயம் மிக்க பாடல்கள். ஏற்ற இறக்கத்துடன் அவர் பாடும் பாடல்கள், மக்களைக் கவர்ந்திழுத்தன. ஆயினும், அவரது கொள்கைகளையோ சொன்ன நல்லவற்றையோ எவரும் கடைபிடிக்கத் தயாராக இல்லை.
இப்படியே ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்தவர், ஒரு நாள் நரிக்குறவர்கள் கூடாரங்களை அமைத்திருந்த பகுதியின் வழியே சென்றார். நரிக்குறவ ஆண்கள் எல்லாம் கூடை முடைவதற்கான மூங்கில் அறுக்க வெளியில் சென்றிருந்தனர். அதுவோ நண்பகல் நேரம். சிவவாக்கியருக்கோ கடும் பசி. சுற்றுமுற்றும் பார்த்தார். அப்போது கூடாரம் ஒன்றில் இருந்த அந்த இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி, இவர் தேஜஸைப் பார்த்து, உள்ளுணர்வுகள் மீட்ட விரகம்ததும்ப வணங்கி நின்றாள். சிவவாக்கியரும் ஒரே ஒரு விநாடிதான் நிமிர்ந்து பார்த்தார். பின் அவளிடம், எனக்குப் பசிக்கிறது. அதற்குப் பெண்ணே உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும்?" என்றார்.
பதிலுக்கு அவளும் ஆவல் மேலிட, கேளுங்கள் சுவாமி. செய்து தர சித்தமாக இருக்கிறேன்" என்றாள். சிவவாக்கியர் தன்னிடம் இருந்த பேச்சுரைக்காயையும், மணலையும் கொடுத்து, அவற்றைக் கொண்டு சமைத்துத் தருமாறு சொன்னார். பெரிதும் கல்வியறிவு அற்ற அந்தக் குறப்பெண், அவர் சொன்னதைக் கேட்டு கொஞ்சமும் தயங்கவில்லை. இரண்டையும் பெற்றுக் கொண்டு, பேச்சுரைக்காயைக் கழுவி, மணலைக் கலந்து சமைக்கத் தொடங்கினாள்.
என்ன ஆச்சர்யம்? மணல் அருமையான சாதமாக வெந்து போயிருந்தது. பேச்சுரைக்காருசிமிக்க கறி உணவானது. சாப்பாடு தயாரானதும், சுவாமி சாப்பிட வாருங்கள்" என்று அழைத்தாள். அவள் அளித்த உணவை உண்டு சிவவாக்கியர் களைப்பாறினார். மூங்கில் வெட்டச் சென்றிருந்த குறப்பெண்ணின் பெற்றோர் தங்கள் கூடாரம் திரும்பினர். அவர்களிடம், நடந்த சங்கதிகளைச் சொல்லி அவர்களின் பெண் ணைத் தமக்குத் திருமணம் செய்து தருமாறு கோரினார். அவர்களும் மகிழ்ந்தார்கள். இருப்பினும், உங்களுக்கு எம் பெண்ணைத் தருவது நாங்கள் செய்த பாக்கியம். ஆனால் ஒன்று... எங்கள் குல வழக்கப்படி, நீங்கள் எங்களோடு தங்கி எங்கள் வேலைகளைப் பார்ப்பதாக இருந்தால் அதற்கு தடையில்லை" என்றனர்.
சிவவாக்கியர் அவர்களின் நிபந்தனைகளை ஏற்றார். அதன் பின்னர், அவர்களின் குல வழக்கப் படியே அந்தக் குறப்பெண்ணை மணந்து கொண்டார். அவர்களின் கட்டளைப்படி, அவர்களுடனேயே தங்கி, அவர்களது குலத்தொழிலையே செய்யத் துவங்கினார். சிவவாக்கியரின் இல்லற வாழ்க்கை அங்கே துவங்கியது. அவரின் சித்தயோக சாதனைக்கு, அவர் மனைவியும் உறுதுணையாக இருந்தாள். இருந்தாலும், வாழ்க்கையை ஓட்ட காசு வேண்டுமே! குறவர்களின் தொழிலான மூங்கில் வெட்டுதல், பிளத்தல், கூடை முடைதல் என்று வாழ்க்கையை நகர்த்தத் தொடங்கினார். சித்த வித்யை கற்று பெருஞ்சித்தராக வேண்டியவர், தம் குருநாதரின் கட்டளைப்படி, அவர் கொடுத் தவற்றைக் கொண்டு, இல்லற வாழ்க்கையில் இறங்கி விட்டார். இருந்தாலும், அவரின் மகிமையை அங்கிருந்தோர் உணரும் காலமும் வந்தது.

Comments