மகிமைமிகு மகாநந்தி!

ந்திரப்பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில், நந்தியாலுக்கு அருகிலுள்ள புண்ணிய க்ஷேத்திரம் மகாநந்தி. சிவபெருமான் மகா நந்தீஸ்வரராக அருள்புரியும் இவ்வூர், தலம்-தீர்த்தம்-மூர்த்தி ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்றது.
நந்த வம்சத்தைச் சேர்ந்த  உத்தங்க போஜன் என்பவரின் மகன் இந்தப் பகுதியை அரசாண்ட காலம். அப்போது இப்பகுதிக்கு அருகில் உள்ள கோபவரம் (முன்பு கோபிடவரம் என்று அழைக்கப்பட்டது) என்ற கிராமத்தில் இடையர் ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் மேய்ச்சலுக்கு அவர் அழைத்துச் செல்லும் மாடுகளில் ஒன்று மட்டும், தினமும் மடியில் பால் சுரக்காது இருப்பதைக் கவனித்தார். அதற்கான காரணத்தை அறிய விரும்பியவர், ஒருநாள் அந்தப் பசுவைப் பின்தொடர்ந்தார். அந்தப் பசு புதர் மண்டிய இடத்துக்குச் சென்று அங்கிருந்த புற்றின் மீது பாலைச் சொரிந்தது. புற்றுக்குள் இருந்து சிறுவன் ஒருவன் தலையை நீட்டி பாலை அருந்தினான். இந்த அதிசயத்தை மன்னனின் கவனத்துக்குக் கொண்டுசென்றார் இடையர். மறுநாள் மன்னரும் இடையருடன் பசுவைப் பின்தொடர்ந்தார். குறிப்பிட்ட இடம் வந்ததும் காட்சியைத் தெளிவாகக் காண விரும்பி, பசுவை இன்னும் அருகில் நெருங்க முயற்சித்தார் மன்னர். அதனால் பசு மிரண்டு ஓட, அதன் குளம்படிகள் புற்றின் மீது பதிந்தன. வெளியே தலை நீட்டிய சிறுவனோ மறைந்து போனான்!

எல்லாவற்றையும் கண்ட மன்னர் சிலிர்த்துப்போனார். அன்று இரவே அவர் கனவில் தோன்றிய ஈசன், ‘நாமே சிறுவன் உருவில் வந்து பாலருந்தினோம். அங்கேயே எமக்கு ஒரு கோயில் கட்டுக’ என்று அருள்புரிந்ததுடன், அந்தப் பகுதியைக் கங்கை செழிப்பாக்குவாள் என்றும், அந்த இடத்தைச் சுற்றிலும் (சுமார் 80 கி.மீ சுற்றளவில்) நவநந்திகளில், தான் வியாபித்திருப்பதாகவும்  திருவாக்கு தந்தார்.

மறுநாள் புற்று இருந்த இடத்துக்குச் சென்றார் மன்னர். அங்கே  புற்றானது பெரியலிங்க உருவாக மாறியிருந்தது. அதைக் கண்டு மெய்சிலிர்த்த மன்னர், அந்த இடத்தில் கோயில் எழுப்பி, திருக்குளங்களையும் வெட்டினார். அவற்றுக்கு முறையே `விஷ்ணு குண்டம்' என்றும் `பிரம்ம குண்டம்' என்றும் பெயர் சூட்டினார்.  வருடம் முழுவதும் நீர் நிறைந்திருக்கும் இந்த நீர்நிலைகளால் சுமார் 2000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறதாம். இந்தத் தலத்துக்கு மன்னர் சூட்டிய பெயர் மகாநந்தி.

மகாநந்தியில் உள்ள லிங்கம் சுயம்புவாகும். தரைமட்டத்துக்கும் கீழாக ஒரு தொட்டி போன்ற அமைப்பில் காட்சிதரும் இந்த லிங்க மூர்த்திக்கு, பக்தர்களே அபிஷேகம் செய்யலாம் என்பது விசேஷம். இந்த லிங்கத் திருமேனியில் பசுவின் குளம்படிகளை இன்றைக்கும் காணலாம். இந்த லிங்க மூர்த்தத்தின் அடிப்பகுதியில் சுரக்கும் தீர்த்தமே இத்தலத்தின் குளங்களில் நிரம்புவதாக நம்பிக்கை!

அம்பாளின் திருநாமம் காமேஸ்வரி தேவி. அம்பாளின் விக்கிரகம் அந்நியர் களால் சேதப்படுத்தப்பட்டதாகவும், பிற்காலத்தில் கறுப்பு பளிங்குக் கல்லால் ஆன புதிய சிலை பக்தர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தாகவும் சொல்கிறார்கள். ஸ்வாமி சந்நிதிக்கு தெற்கில் அமைந்துள்ளது அம்பாளின் சந்நிதி.

இந்தப் பகுதியையும் சேர்த்து நந்தாவரம், நந்தியால், நந்திகோட்டுர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்த நந்தர்கள், கி.மு. 303-ல் சந்திர குப்த மௌரியரால் அகற்றப்பட்டார்கள் என்கிறது சரித்திரம்.

இந்தத் திருக்கோயிலில் மூலஸ்தானத்துக்கு வடகிழக்கில் அருள்மிகு கோதண்டராமரின் சந்நிதி உள்ளது. அவருடன் சீதா, லட்சுமணன் மற்றும் அனுமனையும் தரிசிக்கலாம். மேலும், வீர பக்த அனுமனுக்கும் நவகிரகங்களுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

இந்தத் தலத்தைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் அவசியம் நவ நந்திகளைத் தரிசித்து வர வேண்டும். அவை: பிரதம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, கருட நந்தி, ருத்ர நந்தி, மகா நந்தி, சூரிய நந்தி, விஷ்ணு நந்தி மற்றும் சோம நந்தி. இவற்றில் மூன்று மகா நந்திகள் ஆலயத்தின் வளாகத்திலும், மற்றவை ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன.

புண்ணிய யாத்திரையாக ஆந்திர மாநிலம் செல்லும் அன்பர்கள், புராண - புராதனச் சிறப்புகளுடன் திகழும் மகாநந்தி திருத் தலத்துக்கும் சென்று, நந்தீஸ்வரரின் பேரருளைப் பெற்று வாருங்கள்.

Comments