பாப விமோசனமருளும் பரமசிவன்!

தென் தமிழகத்தின் வற்றாத ஜீவ நதி தாமிரபரணி கரையோரங்களில் ஒன்பது இடங்களில் சிவபெருமானுக்கு நவகயிலாய கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் முதல் கோயில் பிரம்மதேசம் கைலாசநாதர் திருக்கோயில். தன்னை நாடி வந்து வணங்கும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தினை வழங்கி காத்தருளும் ஆனந்த நாயகராக பிரம்மதேசம் கைலாசநாதர், சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
பிரம்மஹத்தி தோஷத்தால் அவதிப்பட்ட பிரம்மனின் பேரன், ரோமஸ மஹரிஷி தனது தோஷம் நீங்க சிவாலயங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார். இருந்த போதும் அவரது தோஷம் நிவர்த்தியாகவில்லை. மனம் தளராத ரோமஸ மஹரிஷி, ஒரு நாள் இலந்தை மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டின் வழியாகச்
சென்று கொண்டிருந்தார். அப்போது, அடர்ந்து வளர்ந் திருந்த ஒரு இலந்தை மரத்தின் அடியில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி இருந்ததைக் கண்டு மகிழ்ந்து, இறைவனை வழிபடுவதற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அந்நீரால் அபிஷேகம் செய்து இறைவனை வணங்கினார். வழிபாட்டில் மனம் நெகிழ்ந்த சிவபெருமான் அவரது பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி அருளினார். ரோமச மஹரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈசனே தற்போது பிரம்ம தேசத்தில், ஸ்ரீப்ருஹந்நாயகி அம்பாள் சமேத கைலாச நாதராக வீற்றிருந்து, தம்மை நாடிவரும் அன்பர்களுக்கு அருளாசி வழங்குகிறார் என்பது தல வரலாறு.
இதுபோன்று, பார்வதி தேவியின் தந்தை தட்சன் பிரம்மாண்டயாகம் ஒன்றினை நடத்தினான். இதில் பங்கேற்க சிவபெருமானுக்கு மட்டும் அழைப்பு இல்லை. ஆனால், இந்த யாகத்தில் பிரம்மன் பங்கேற்றார். ஈசனை அழைக்காத யாகத்தில் பங்கேற்ற பிரம்மன், தாம் தவறு செய்து விட்டோமே என்று எண்ணி மனம் வருந்தினார். தனது தவறுக்கு பிராயச் சித்தமாக இலந்தை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவபெருமானை வணங்கினார். அவரது அபிஷேகத்துக்காக பிரம்ம தீர்த்தத்தை உருவாக்கி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜ ராஜ சோழன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்து கைப்பற்றிய இப்பகுதிகளை எல்லாம் சோழ நாட்டுடன் இணைத்தான். அப்போது இங்கு சிவபெருமான் கைலாசநாதராக பிருஹந்நாயகி அம்பாளுடன் எழுந்தருளியிருப்பதை அறிந்தான். உடனே, இறைவனைத் தேடி வந்து வணங்கிய மன்னன் ராஜராஜ சோழன், தான் போருக்குச் செல்வதற்கு முன்பு இறைவனை வணங்கியே சென்றான். இறைவன் அருளால் அவனுக்கு வெற்றிகளும் மக்கள் ஆதரவும் செல்வமும் பெருகியது. இதனால் மகிழ்ந்த ராஜராஜ சோழன் கைலாசநாதருக்கு பிரமாண்ட ஆலயத்தை உருவாக்கினான்.
சோழர்கள் ஆட்சிக்காலத்தில் சிறப்புப் பெற்று விளங்கிய இந்நாட்டின் மீது, சிறு குறு மன்னர்கள் அடிக்கடி படையெடுத்து வந்தனர். மேலும், இங்குள்ள செல்வங்களை கொள்ளையடிக்கவும் திருடர்கள் வந்தனர். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மக்களையும், ஆலயத்தையும் பாதுகாக்க, மன்னன் ராஜராஜசோழன் நாலாயிரம் படை வீரர்களை இவ்வூரில் நிரந்தரமாக பாதுகாப்புக்காக வைத்தான். இங்கு தங்கியிருந்த படை வீரர்கள் சிவபெருமான் ஆலயத்துக்கு அருகே இருந்த துர்கை அம்மனை வழிபட்டு வந்தனர். நாலாயிரம் படை வீரர்கள் வழிபட்ட காரணத்தினால் இந்த துர்கையம்மன், ‘நாலாயிரத்தம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள். இன்றும் சிவபெருமான் கோயிலுக்கு அருகே நாலாயிரத்தம்மன் கோயில் இருப்பதைக் காணலாம்.
பன்னிரெண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலின் ராஜ கோபுரம் ஏழு அடுக்குகளுடன் அமைந்துள்ளது. ராஜகோபுரம் நெல்லையை ஆண்ட விஸ்வ நாத நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாம். ராஜகோபுரத்தின் நிழல் கோயில் தெப்பக் குளத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்பிராகாரத்திலுள்ள பூக்கள் தளத்தில் இருந்து பார்த்தால் கோயிலிலுள்ள இரண்டு கோபுரங்களையும், ஏழு விமானங்களையும் ஒருசேர தரிசிக்கலாம் என்பது வேறு எங்கும் இல்லாத தனிச் சிறப்பு.
தஞ்சை பெரிய கோயிலை நினைவுபடுத்தும் பிரம்மாண்டமான ஒரே கல்லால் ஆன சலங்கை, சங்கிலி மற்றும் ஆபரணங்கள் அணிந்த நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட நந்திகேஸ்வரர், கொடிமரம், மண்டபத்தின் மேற்கூரையில் ஒரே கல்லில் செய்துக்கப்பட்ட மணி, ஆய கலைகள் அறுபத்து நான்கையும் விளக்கும் சிற்பங்கள், வாயினுள் கல் உருண்டை உருளும் வகையிலான யாழி, வசந்த மண்டபம் என ஒவ்வொன்றும் கட்டடக் கலைக்கு உதாரணமாகும். தவிர, நுட்பமான மர வேலைப்பாடு கொண்ட கற்கூரை, ஏழு அடி உயரமும், அதிக எடையும் கொண்ட பிச்சாடனர் சிலை பாதத்தின் பிடியைத் தவிர எந்த விதமான பிடிப்பும் இன்றி அப்படியே நிற்பது அனைவரையும் ஆச்சரியத்தில் வியக்க வைக்கும்.
இருபது யாளிகள் தாங்கி நிற்கும் தூண்களைக் கொண்டுள்ள திருவாதிரை மண்டபத்தில் ஒரு தூணில் ராமர் அம்புடன் மறைந்து நிற்கும் காட்சியும், இன்னொரு தூணில் வாலியும் சுக்ரீவனும் சண்டையிடும் காட்சியும் அற்புதமாகச் செய்துக்கப்பட்டுள்ளது. இதிலும், ராமர் உருவ தூண் அருகே இருந்து பார்த்தால் வாலி - சுக்ரீவன் உருவமும், அந்தத் தூணும் நன்கு தெரிகிறது. ஆனால், வாலி - சுக்ரீவன் உருவமுள்ள தூணிலிருந்து பார்த்தால் ராமர் உருவ தூண் தெரிவதில்லை. அற்புதமான இந்த சிற்பக்கலை வேறு எந்த ஆலயத்திலும் காண இயலாத அதிசயம்.
கருவறையில் மூலவர் கைலாச நாதர் பிரமாண்டமாக சுயம்பு லிங்க வடிவில் காட்சி தருகிறார். இப்பெருமானை வணங்கினால் திருமணத்தடை அகலும், செல்வங்கள் பெருகும், எதிரிகள் தொல்லை தீரும், பதவி உயர்வு, புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம். கருவறையைச் சுற்றி, வல்லப கணபதி, முருகர், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், கோமதி சங்கரர், பால சுப்பிரமணியர், மீனாட்சி, சுந்தரேஸ் வரர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். அம்பாள் ஸ்ரீபிருஹந்நாயகி, பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். மதுரை மீனாட்சியை போன்று வலது கரத்தில் கிளியைத் தாங்கி நிற்கும் அம்பாளின் கொள்ளை அழகை, கருணைப் பார்வையை திருவிளக்கு ஒளியில் தரிசிப்பது பெரும் பாக்கியம். தீராத நோயால் அவதிப் படுவர்கள் அம்பாளுக்கு புடைவை சாத்துவதாக வேண்டி, வணங்கினால் நோ தீர்ந்து பூரண நலம் கிட்டும்.
தல விருட்சம் இலந்தை மரத்தின் அடியில் ஆதி மூலவராக எழுந்தருளியுள்ள இலந்தையடிநாதரை பக்தர்கள், ‘ஸ்ரீபதரிவ னேஸ்வரர்’ என்றும் அழைக்கின்றனர். புத்திர பாக்கியம் வேண்டுவோர், தாமிரபரணியில் நீராடி, இலந்தையடிநாதரை வணங்கி, இலந்தைப் பழத்தை உட்கொண்டால் அறிவில் சிறந்த அழகான குழந்தை பிறக்கும். இலந்தையடிநாதரையும், இலந்தை மரத்தையும் பிரதட்சணம் செய்து வணங்கினால் சகல தோஷங்கள் நிவர்த்தியாவதுடன், விதி வசத்தால் ஏற்படுகின்ற துன்பங்கள் நீங்கி வாழ்வில் இன்பங்கள் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இக்கோயில் நடராஜர், ‘புனுகு நடராஜர்’ எனப்படுகிறார். ‘ஓம்’ என்ற பிரணவத்துக்குள் வீற்றிருக்கும் நடராஜருக்கு வருடத்தில் மார்கழி மாதம் திருவாதிரை அன்று மட்டும் அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் வெறும் புனுகுக்காப்பு மட்டுமே. தட்சிணாமூர்த்திப் பெருமான் கால் மாற்றிய வகையில் தனக்குத்தானே உபதேசம் செய்து அருளும் ஸ்ரீஆத்ம வியாக்கிய தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
இக்கோயிலில் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ள சரஸ்வதி தேவியை வணங்கினால் புத்திக் கூர்மை, நல்ல நினைவாற்றல், கல்வித்திறன், தன்னம்பிக்கை பெருகும் என்பதால் மாணவ, மாணவியர் அதிகளவில் வழிபட்டுச் செல்கின்றனர். கருணையின் உருவமாக, தம்மை நாடி வரும் பக்தர்களைக் காத்தருளும் காளியாக நாலாயிரத்தம்மன் அருள்பாலித்து வருகிறாள்.
பங்குனி உத்திரம், ஐப்பசி திருக்கல்யாணம், பவித்ரோத்ஸவம், வசந்த விழா, பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, சித்திரை வருடப் பிறப்பு, கார்த்திகை தீப வழிபாடு, மார்கழி வழிபாடுகள் மிகவும் விசேஷம்.
இலந்தை மரத்தடியில் எழுந்தருளி, தம்மை நாடி வரும் பக்தர்களின் பாவங்களையும், தீராத நோய்களையும் நீக்கியருளும் பிரம்மதேசம் கைலாசநாதரை நாமும் தரிசித்து நல்வாழ்வு பெற்றிடுவோம்.
அமைவிடம்: திருநெல்வேலியி லிருந்து பாபநாசம் செல்லும்
சாலையில் அம்பாசமுத்திரத்தில் இருந்து 4 கி.மீ.
அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது.
தரிசன நேரம்: காலை 7.30 மணி முதல் 9 வரை. மாலை 5 மணி முதல் இரவு 7 வரை. பௌர்ணமி, பிரதோஷம் வழிபாட்டுக்கு உகந்த நாட்கள்.
தகவலுக்கு: 94428 94094

Comments