மனத்துன்பம்!

”ராமாயணத்தில் எங்கு தொட்டாலும், சாஸ்திரப் பேச்சு தவிர, வேதத்துக்குப் புறம்பான விஷயம் எங்கும் இல்லை. மனத்துன்பம் (வ்யஸனம்) என்றுகூட ஒரு தர்மம் சொல்லப்பட்டுள்ளது. எல்லோருக்கும் மனத்துன்பம் உண்டு. அதைக் கொடுத்து, பின்னர் நம்மைத் திருத்தி ஆட்கொள்கிறார் பரமாத்மா" என்றார் தமது சொற்பொழிவில் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் ஸ்வாமிகள்.
துக்கத்தையும் சுகத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். சுகம் வரும்போது ஆர்ப்பாட்டமாக ஆரவாரம் செய்வது கூடாது. துக்கம் வந்தால் துன்பப்பட்டு அழுது, கடவுளை நிந்தனை செய்வது கூடாது. துன்பம் நேர்ந்தால், ‘பகவான் அந்தத் துன்பத்தை அனுபவிக்க நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்’ என்று பொறுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீராமபிரான் சுகம், துக்கம் இரண்டையும் சம மாகப்பாவித்தான். ‘காட்டுக்குப் போய்’ என்றபோதும், ‘அரசாட்சியை ஏற்றுக்கொள்’ என்றபோதும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தான். ‘சீதையைப் பிரிந்த போது வருந்தி அரற்றினானே’ என்றால், கடவுள்களுக்கும் மனத் துன்பம் உண்டு என்பதை இது காட்டுகிறது. பகவானும் மனத் துன்பம் (வ்யஸனம்) அடைந்தான் என்பதற்கு ஒரு கதை உண்டு.
பெருமாளுக்கு பூமா தேவியோடு கல்யாணம் ஆயிற்று. பரமசிவனும் பார்வதியும் வந்து அவர்களை விருந்துக்கு அழைத்தார்களாம். பூமா தேவியிடம், விருந்துக்குப் போகலாமா?" என்கிறார் பகவான். அவள் சொல்கிறாள், நீங்கள் போகும் இடத்துக்கெல்லாம் நான் கூடவே வர இயலாது. என் பெயர் என்னவென்று தெரியுமா? அசலா. அதாவது, அசைவற்றவள். அசையாப் பொருட்களெல்லாம் (சராசரங்கள்) நான் உங்களோடு வந்தால் என்ன ஆகும்? எனவே, என்னால் வர முடியாது" என்கிறாள்.
அதன் பிறகு, பகவான் எல்லா இடங்களுக்கும் தனியாகவே போய் வருகிறான். அவனுக்கு மிகவும் வெட்கமாகி விடுகிறது. போகும் இடங்களில் எல்லாம் தவறாமல் ஒரு கேள்வி எழுகிறது. ‘மனைவி எங்கே? மனைவி ஏன் வரவில்லை?’ அவனால் பதில் கூறவே முடியவில்லை.
ஆகவேதான், சமுத்திர ராஜனின் பெண்ணான லக்ஷ்மியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்கிறான். அவளோ, ஓரிடத்திலும் தங்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறாள். பகவானால் அவளோடு சேர்ந்து ஓட முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. ‘போதும் இந்த ஓட்டம்’ என்று தீர்மானித்துப் பிள்ளையுடன் சில நாட்கள் இருக்கலாம் என்று கிளம்புகிறான். பிள்ளை மன்மதன்.
போகும் வழியில் எதிரே வந்த ஒருவர், மன்மதன் பரம சிவனிடம் அபசாரப்பட்டு, அவருடைய நெற்றிக் கண் ணுக்கு ஆளாகி, இப்போது தான் பஸ்மமாகிப் போனான்" என்கிறார். பகவான் புத்திரனை இழந்த சொகம் தாங்காமல், மாமனார் வீட்டுக்குச் சென்று ஆறுதல் பெறலாம் என்று நினைக்கிறார். மாமனார் வீட்டுக்கு மனைவியுடன் செல்வதே உசிதம். இருந்தாலும், பரவாயில்லை என்று கௌரவம் பார்க்காமல் சமுத்திர ராஜனிடம் செல்கிறார்.
அங்கு போனால், பெரிய அலை எழும்பி பகவானைத் தூக்கித் தள்ளி விட்டதாம். ‘உள்ளே நுழையும் முன்பே இந்த மரியாதை. போனால் என்ன ஆகுமோ என்று நினைத்துப் பின்வாங்கி விடுகிறார் பரமாத்மா. படுத்து ஓவெடுக்கலாம் என்று ஆதிசேஷன் மீது சாந்தால் அவன், ‘புஸ்... புஸ்... என்று விஷம்கக்குகிறான். சரி, நாம் காசிக்குப் போ விடலாம் என்று கிளம்பி, கருடனின் மீதேறி பறந்து கொண்டிருக்கிறான். புரி என்ற ஊரின் மேல் பறக்கும் போது, கீழே ஒரு பாம்பு ஊர்வதைப் பார்த்து விடுகிறான் கருடன்.
நாராயணா, கீழே என் உணவு தெரிகிறது. அதைச் சாப்பிட வேண்டும். உன்னை இங்கே இறக்கி விடுகிறேன்.
நீங்கள் நடந்து போக்கொண்டே இருங்கள். சாப்பிட்டு விட்டு வந்து உங்களை ஏற்றிப் போகிறேன்" என்று கருடன் போய் விடுகிறான். பகவான், ‘நம் நிலை இப்படி ஆகிவிட்டதே’ என்று கஷ்டப் பட்டானாம். தன் வீட்டுக் கஷ்டத்தை நினைத்து மன வேதனைப்பட்டு, பகவான் கட்டையாகவே போய், அப்படியே புரிகே்ஷத்ரத்திலே காட்சி கொடுத்தானாம்.
இப்படி ஒரு வேடிக்கையான கதை உருவானதே (வ்யஸனம்) மனத்துன்பம் யாரையும் விட்டு வைக்காது என்று நமக்கு உணர்த்துவதற்காகவே."
சரம் உண்டாக்கிய சரயு நதி!
ஒரு சமயம் வைவஸ்வத மனு அயோத்தியில் யாகம் செய்ய விரும்பினார். அப்போது அயோத்தியின் அருகில் புண்ணிய நதி ஏதும் இல்லாமலிருந்ததால் குல குருவான வசிஷ்டர் இமயத்தில் உள்ள மானஸரோவரிலிருந்து ஒரு நதியைக் கொண்டு வரும்படி ஆலோசனை கூறினார். மனுவும் குருவின் கட்டளைப்படி மானஸரோவரை நோக்கி அம்பு விடுத்தார். அம்பு மானஸ ரோவரத்தில் ஒரு பகுதியைச் சேதப்படுத்தி அதிலிருந்து அயோத்தியை நோக்கி நீர் பெருகும்படி செய்தது. ஸரோவரிலிருந்து வெளிவருவதால் ‘சரயு’ என்று சிலரும், சரம் எனப்படும் அம்பு உண்டாக்கியதால் சரயு என்று சிலரும் அந்த நதியைக் கூறுவர். கங்கையைப் போன்று புனிதத் தன்மையுடைய சரயு நதியை கங்கையின் ஒரு கிளை நதியாகக் கருதுகிறார்கள். ஸ்ரீராம பிரான் உலகைத் துறக்கும்போது தன் பரிவாரங்களுடன் இந்த நதியில் மூழ்கி விஷ்ணு பதத்தை அடைந்தார்.

Comments