கரம் தந்த கந்தவேள்!

திருமுருகனுக்குத் திருமணம் நடந்த திருத்தலம் திருப்பரங்குன்றம். பறவைகள் மட்டுமல்லாது, மலர்களிலுள்ள தேனைப் பருகிய வண்டுகள்கூடப் பன்னிருகைப் பரமனைப் பண்ணோடு ரீங்கார மிட்டுப் பாடிப் பரவும் திருத்தலம்.
அங்கு, பெருங்குடி வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் தலைவராக, அந்தக் காலத்து ஆட்சியாளர்களால், ‘எட்டிப்பூ’ எனும் பட்டம் பெற்ற, சோமேசன் செட்டியார் என்பவர் இருந்தார். செல்வ வசதி குவிந்திருந்தும், மறந்து போக்கூட முறையற்ற வழியில் செல்லாத அவர், கலைகளில் மிகுந்த ஆர்வமும் சிறிது பயிற்சியும் பெற்றிருந்தார். அதன் பலனாக, எப்போதுமே இனிமையுடன் கனிந்த உள்ளம் கொண்டவராக விளங்கினார். சோமேசருக்கு மனைவியாக, வாத்தாள் சாலி. இப்பெயர் அருந்ததியின் மற்றொரு பெயர். பெயருக்குத் தகுந்தாற்போல் சாலி, தலைசிறந்த குணவதியாக விளங்கினாள்.
இருந்தாலும், பெரீ... ஈ.......ய பலூனில் சிறு ஓட்டை விழுந்ததைப்போல,
சோமேசருக்கு மகவில்லாக் குறை இருந்தது. வருந்தினார் அவர். ‘தம்பொருள் என்பர் தம் மக்கள் என்று வள்ளுவர் சொல்வாரே! அப்படிப்பட்ட மழலைச் செல்வம் அடியேனுக்கு வாக்கவில்லையே முருகா! செல்வத்தைக் குவித்தளித்த தெய்வமே! என் மனக் குறை தீர, அருள் செய்ய மாட்டாயா ஐயா!’ என்று மனதுக்குள்ளாகவே மறுகினார்.
சோமேசரின் மனத்துயரறிந்த சாலியோ, ஸ்வாமி! நம் மனத்துயரை நமக்குள் போட்டுத் திணித்து மறுகுவதை விட, பாம்பணை மேல் பள்ளிகொண்ட மாலோன் மருகனான பரங்குன்றப் பரமனிடம் போய் முறையிடுவோம். வாருங்களேன்" என்று கூற, சோமேசரும் அதை ஏற்றார். ஆனி மாதம் முதல் நாளன்று, குறை தீர்க்கும் குன்றத்து இறைவனிடம் முறையீடும் வழிபாடும் தொடங்கின. உள்ளம் உருகும் வழிபாடுகள், நாள்தோறும் நடந்தன. புரட்டாசி மாத முதல் நாள்! பகல் நேர உணவு முடித்து ஊஞ்சலில் இருந்தார் சோமேசர். தாம்பூலம் மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள் சாலி. அவள் முகம் எதையோ நினைத்ததைப் போல, முன்பைவிடச் சற்று பூசி மெழுகியதைப்போல இருந்தது. அப்போது, பணிப்பெண் அங்கு வந்து, ஐயா! அம்மா மொகத்தப் பாத்தீங்களா? ஒரு பூரிப்பு தெரீல! நாலு மாசமாறது. அம்மா முழுகாம இருக்காங்க" என்று சொல்லிவிட்டு ஓடி விட்டாள்.
சோமேசருக்குச் சிந்தை குளிர்ந்தது; சாலியின் முகத்தைப் பார்க்க, அவள் தலையை ஆட்டியபடி கீழே குனிந்தாள்.
சோமேசர் பரபரத்தார். விறுவிறு வென்று மாடியிலேறி, எதிரில் தெரிந்த பரங்குன்றன் கோயிலைக் கும்பிட்டார். கண்கள் கசியக் கீழே இறங்கியவர், அடியார் மனங்குளிரும்படியாக அனேக தானங்களை அளித்தார்.
பங்குனி மாதம்! ரேவதி நட்சத்திரத்தன்று, சாலி பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். முருகன் அருளால் பிறந்த குழந்தைக்கு, ‘முருகம்மை’ எனப் பெயர் சூட்டினார்கள். நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும், முருக நாமம் தான். விளையாட்டுக்குத் தோழிகளை அழைக்கும் போதுகூட, முருகா! வருகிறீர்களா? விளையாடலாம்" என முருக நாமம் சொல்லித்தான் அழைப்பாள்.
பன்னிரு கையன் திருநாமங்களைச் சொல்லியே வளர்ந்த முருகம்மை, பருவமடைந்தாள். இயற்கை அழகுடன் ஜொலித்த முருகம்மைக்குச் செயற்கை யழகாக ஆபரணங்களைப் போட்டு அழகு பார்த்தார்கள் பெற்றோர்கள். கோபுரத்தின் மீது தீபங்களை ஏற்றி வைத்ததைப் போல ஒளி வீசினாள் முருகம்மை. ஒரு வருடமானது. மணம் பேச வந்தார்கள் பலர். அழகைப் பார்த்து வியந்தாலும், எப்போது பார்த்தாலும் ‘முருக’ நாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் முருகம்மையைப் பார்த்து, இது நம்ம குடும்பத்துக்கு சரி வராது" எனச் சென்றனர்.
அந்த நேரத்தில், ஒரே நாளில் பெற்றோர்களை ஒருசேர இழந்த தனஞ்ஜயன் என்பவன் மனவருத்தம் தீரும் பொருட்டு, தன் தூரத்து உற வினரான சோமேசரைப் பார்க்க வந்தான். துயரத்தைச் சொல்லிப் புலம்பிய தனஞ் ஜயனிடம், எனக்கோ, முருகம்மையைத் தவிர வேறு சேகளில்லை. உனக்கோ, பெற்றோர்களில்லை. என் மகளை நீ மணக்கிறாயா?" எனக் கேட்க, தனஞ்ஜயனும் சம்மதம் தெரிவித்தான். திருமணம் முடிந்தது. மகிழ்ச்சியில் மிதந்த சோமேசர், தன் மனைவி சாலியுடன், திருத்தல யாத்திரை புறப்பட்டார். அவர் புறப்பட்ட ஒருசில மாதங்களிலேயே, தனஞ்ஜயனும் புறப்படத் தீர்மானித்தான். வியாபாரத்தில் கைதேர்ந்த தனஞ்ஜயன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
கப்பலேறிக் கடல் கடந்து செல்லத் தீர்மானித்த அவன், அதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்து முடித்தான். ‘திடீரென்று நாம் வெளியூர் செல்வதை அறிந்தால், முருகம்மை தடை போடுவாளே! என்ன செய்யலாம்?’ என்று தனஞ்ஜயனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அதை மாற்றுவதற்காகவோ என்னவோ, அந்தப் பக்கமாகத் தலைமை குமாஸ்தா முருகப்பர் சென்றார். அவரைப் பார்த்ததும் தனஞ்ஜயனுக்கு முகம் மலர்ந்தது. உடனே அவரை அழைத்து, ஐயா! பெரிய வரே! என் மனைவி முருகம்மையைச் சிறுவயது முதலே, தூக்கி வளர்த்தவர் நீங்கள். பாசத்தோடு வளர்த்த நீங்கள் சொன்னால், அவள் கேட்பாள். நான் வெளிநாடு சென்று திரும்பும்வரை, நீங்கள்தான் முருகம்மைக்குத் தேறுதல் சொல்லி, அவளுக்கு ஆறுதலாகவும் இருக்க வேண்டும்" என விவரித்து வேண்டினான்.


வேறு வழியற்ற நிலையில், முருகப்பரும் ஒப்புக் கொண்டார். நான்கைந்து மாதங்களில் திரும்புவதாக வாக்களித்த தனஞ்ஜயன், கப்பலேறி விட்டான். மறுநாள், காலை முதல் கணவரைக் காணாத முருகம்மை, உணவை நீக்கி சஞ்சலத்தோடு காத்திருந்தாள். இரவு பத்து மணியளவில் முருகப்பர் மூலம் விவரம் அறிந்ததும், மயங்கி அப்படியே பூமியில் விழுந்தாள். மயக்கம் தெளிந்தவளுக்கு, முருகப்பர் பலவாறாக ஆறுதல் கூறினார். சற்று ஆறுதலடைந்த முருகம்மை, மறுநாள் பொழுது விடிந்ததும், ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.


‘முருகா! என் முருகன் (கணவர்) நல்லபடியாகத் திரும்பி வர, அருள்புரி முருகா! அதுவரை நான் ஒரு வேளை, உப்பில்லா உணவை மட்டும் உண்டு, விரதம் இருப்பேன்’ என்று பிரார்த்தித்து அப்படியே விரதமிருந்தாள். அந்த உத்தமியின் உள்ளம் கணவரின் பிரிவை நினைத்து வருந்தியதன் விளைவோ என்னவோ, தனஞ்ஜயனுக்குப் போன இடமெல்லாம் நஷ்டமே விளைந்தது. மனைவியின் மனத்துயரே அதற்குக் காரணம் என உணர்ந்த தனஞ்ஜயன், ஊர் திரும்பினான்.


பாண்டி நாட்டில் கரையிறங்கியதும், பணியாளர்களிடம் செய்ய வேண்டியவற்றைச் சொல்லிவிட்டுத் தான் மட்டும், விரைந்து திருப்பரங்குன்றம் சென்றான். அங்கே வீதியில் போக் கொண்டிருந்தபோது எதிர்ப் பட்ட சிலர், நலம் விசாரித்து விட்டு, போன இடத்தில் வியாபாரம் எப்படி?" எனக் கேட்டனர்.
தனஞ்ஜயனோ உண்மையை மறைத்து, வந்தது! வந்தது! லாபம் வந்தது" என்றான். ஏற்கெனவே தனஞ்ஜயனின் மாமனார் மீது பொறாமையும், முருகம்மையை மணக்க முடியாமல் போன வெறுப்பும் கொண்ட, அந்த வம்பர் கூட்டம், இவருக்கென்னப்பா! வியா பாரத்துல எல்லாம் புத்திசாலிதான். ஆனா, உலக அனுபவம் இல்லை. என்ன செய்ய?" என்று தூண்டில் போட்டது.
தனஞ்ஜயன், ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?" எனக் கேட்டான். நினைத்தது பலித்த வம்பர் கூட்டம், வாக்கு வந்தபடிப் பேசத் தொடங்கியது. அது வேற ஒண்ணுமில்லப்பா! பாலுக்குக் காவலா, பூனைய வெச்சா மாதிரி ஆகிப்போச்சு! கன்னிப் பருவத்துலயே, உன் பெண்டாட்டிக்கும் அந்த முருகப்பனுக்கும் தப்பான தொடர்பு உண்டு. ஊரே சிரிச்சுப் போச்சு. அதுனாலதான் உள்ளூர்ல ஒரு பய கூட, அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாராயில்லை. நீ வெளியூர்க்காரன். விவரம் புரியாம மாட்டிக்கிட்ட. உம் பெண்டாட்டி அப்பப்ப, ‘முருகா! முருகா’ன்னு சொல்றாளே. அது அவன் பேரைத்தான். சாமி பேரு இல்ல. அப்படிப்பட்ட அவனையே போயி காவலா வெச்சிட்டுப் போயிருக்கியே. அவனும் உம் பெண்டாட்டியும் அடிக்கற கூத்து, இப்ப ஊரே சிரிக்கிறது" என்று சொல்லி விட்டுச் சிரித்தார்கள்.
கோபம் தாங்காத தனஞ்ஜயன், விரைவாகப் போய் தன் மாளிகையில் புகுந்தான். அங்கே, முருக பஜனை முழங்கிக் கொண்டிருந்தது. கணவரைப் பார்த்ததும் களிப்போடு எழுந்த முருகம்மை, முருகா! வாருங்கள் முருகா! என்னைப் பிரிந்திருக்க எப்படி முருகா உங்களுக்கு மனம் வந்தது?" என்றாள்.
சீற்றத்தில் இருந்த தனஞ்ஜயன், இனிமேல் இந்த முருகா முருகா என்பதை விடு" என மிரட்டினான். முருகம்மை அதிர்ந்துபோய், ஏன் முருகா? நலந்தரும் அந்த விமல நாமத்தை, எப்படி முருகா விடுவது?" எனக் கேட்டாள். தனஞ்ஜயன், அதெல்லாம் தெரியாது. கூடாதென்றால் கூடாதுதான்" எனக் கத்தினான்.
சரி முருகா! சரி முருகா!" எனச் சலிப்போடு கூறினாள் முருகம்மை. கொதிக்கும் எண்ணெய்யில் தண்ணீர் தெளித்ததைப்போல வெடித்தான் தனஞ்ஜயன். சுற்று முற்றும் பார்த்தவன் கண்களில் இளநீர் சீவப் பயன்படும் பாளைக் கத்தி தென்பட்டது. அதைக் கையில் எடுத்த தனஞ்ஜயன், சொல்லாதே என்று சொல்லியும் மறுபடியும் அதையே சொல்கிறாயா?" என்று கத்தினான். அதைக்கண்ட முருகம்மை, முருகா! வேண்டாம் முருகா! வேண்டாம்! பழக்கத்தின் காரணமாக வருகிறது" எனக்கைகளைக் கூப்பிக் கதறினாள்.
கோபத்தின் உச்சியில் இருந்த தனஞ்ஜயன், மறு படியுமா?" என்று கூடியபடியே, கத்தியை வீச, முருகம்மையின் வலக்கை துண்டிக்கப்பட்டுத் தரையில் விழுந்து துடித்தது. முருகா! முருகா! முருகா" என வீறிட்டுக் கதறி பூமியில் விழுந்து மயக்கமடைந்தாள். முதல் முறை முருகா என்றதும், மயில் மேல் வெளிப்பட்ட முருகன், இரண்டாவது முறை முருகா என்றதும் அறுந்த கரத்தை வளரச் செய்து, மூன்றாவது முறை முருகா என்றதும் திருமுருகாற்றுப் படையைத் தந்து, இந்தா திருமுருகாற்றுப்படை! இதைப் பாராயணம் செய்தவர் எந்த இடையூறும் அடையார்" என்றார். கரம் வளர்ந்த முருகம்மை, முருகா" என்ற படியே கீழே விழுந்து வணங்கினாள். பார்த்துக் கொண்டிருந்த தனஞ்ஜயன் ஆச்சரியம் அடைந்தான்.
முருகம்மையோ, முருகா! தெய்வமே! என் கணவர் நல்லவர்தான். ஏதோ என் வினைதான் இப்படிச் செய்து விட்டது. அவரைத் தண்டித்து விடாதே" என முருகப்பெருமானிடம் வேண்டினாள். அவள் பார்வையிலிருந்து ஆறுமுகப் பெருமான் மறைய, தனஞ்ஜயன் தன் தவறை உணர்ந்தான். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற் கிணங்க கணவனும் மனைவியுமாக, திருமுருகாற்றுப் படையைப் பிரதியெடுத்து, மற்றவரும் பாராயணம் செய்யத் தந்து, தாங்களும் பாராயணம் செய்து நலம் பெற்றார்கள்.
‘முருகா! அயில் முருகா! என மொழியும்
ஒருமாதின்
ஒரு காதலன் அவள் கையினை உதிரம்
பெருகரிகால்
அருளாலது வளரும்படி அயர் தண்ணளியாளா!
மருமாலைகொள் மார்பா! எனை மறவேல் எனை
மறவேல்’
- என இவ்வரலாற்றைப் பாடுகிறார்கள் அடியார்கள். கரம் தந்த கந்தனை சிந்திப்போம்! கவலைகள் நமை விட்டு சிந்திப்போம்!

Comments