தமிழ்நாட்டில் சிறப்புமிக்க 8 கோயில்களின் விஷேசங்கள்..!

விழாக்களை ஆராதிக்கும் மரபு, நம் தமிழ் மரபு. ஆண்டுதோறும் விழாக்கள், ஆராதனைகள் என்று களைகட்டும் பல்வேறு நிகழ்வுகளால் சிறப்பு பெறுகிறது, தமிழகம். அதில் சில சிறப்புமிக்க 8 கோயில்களின் விஷேசங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
தஞ்சை, ஶ்ரீ பெருவுடையார் திருக்கோயில்:
கோயில் நந்தி
இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும்,பொங்கல் பண்டிகையை ஒட்டி, மஹர சங்கராந்தி பெருவிழா நடப்பது வழக்கம். இத்திருவிழாவை ஒட்டி, நந்திதேவருக்கு காய்கறி மற்றும் பழங்களால் ஆன சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.  மேலும், அன்று இத்திருத்தலத்தில் 108 பசுக்களுக்கு கோ பூஜை நடப்பது சிறப்பு வாய்ந்தது. 
ராமேஸ்வரம், ஶ்ரீ ராமநாதசுவாமி திருக்கோயில்:
ராமநாதசுவாமி கோயில்
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத் திருத்தலங்களுள் முக்கியமானது,இக்கோயில். வடக்கே காசியும், தெற்கே ராமேஸ்வரமும் மிகுந்த புனிதமிக்க இடங்களாகக் கருதப்படுகின்றன.  இங்கு ராவணனை வதம் செய்த பாவம் தீர, ராமன்  எம்பெருமான் சிவபெருமானை மணலில் லிங்கம் அமைத்து வழிபட்டார் என்பது ஐதீகம். 
குலசை, முத்தாரம்மன் திருக்கோயில்:
முத்தாரம்மன் கோயில் 
இங்கு ஆண்டுதோறும் நவராத்திரியின் இறுதியில் நடக்கும் 'தசரா' பண்டிகை சிறப்பு வாய்ந்தது. இத்தல இறைவனின் திருநாமம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன். இந்த தசரா விழாவில் வேஷமிட்டு நேர்த்திக்கடன் செலுத்த, பக்தர்கள் சுமார் 40  நாட்கள் விரதம் இருக்கின்றனர். இவ்விழாவில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
பழனி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்:
தண்டாயுதபாணி சுவாமி ஆலயம்
ஞானப்பழம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு, எம்பெருமான் முருகன் குடும்பம் துறந்து, ஆண்டியாக நின்ற தலம் இது. அதனால் தான், இத்திருத்தல மூலவர் தண்டாயுதபாணி சுவாமி எனப்படுகிறார். இத்தலம்  கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 அடி உயரத்தில் இருக்கிறது. இங்குள்ள முருகனின் சிலை, நவபாஷாணத்தால் ஆனது. இச்சிலையை போகர் உருவாக்கியுள்ளார்.
 மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோயில்:
கபாலீஸ்வரர் ஆலயம்
மயிலையில் இருந்த  'சிவநேசர்' என்னும் சிவத்தொண்டர், தன் மகள் பூம்பாவையை வளர்த்து  திருஞானசம்பந்தருக்கு மணம்முடித்து கொடுக்க எண்ணினார். ஆனால்,விதியின் சதியால் பாம்புதீண்டி இறந்து போனாள், பூம்பாவை. திடீரென, ஒருநாள் மயிலைக்குச் சம்பந்தர் வருகைதந்த போது, தன் மகள் குறித்துக் கூறி,  தான்  பாதுகாத்து வைத்திருந்த மகளின் எரித்த சாம்பலை சம்பந்தரிடம்  நீட்டுகிறார், சிவநேசர். உடனே, மயிலை ஈசன் மீது தேவாரப்பதிகம் பாடி, பூம்பாவையின் உயிரை மீட்டு எடுக்கிறார் சம்பந்தர். பின், பூம்பாவை மயிலைத்தலத்தில் ஈசனுக்கு தொண்டாற்றியதாக அமைகிறது இத்தலச் சிறப்பு.
 

ஶ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி திருக்கோயில்:
ராஜகோபுரம்
இத்தலத்தில் 21 கோபுரங்கள் உள்ளன. தென்னிந்தியாவிலேயே 220 அடியில்,பிரமாண்ட ராஜகோபுரத்தை பெற்றிருக்கிறது, இத்தலம். இத்திருத்தலத்தில் அரங்கநாத சுவாமிக்கு மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியின்  போது, கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வாய்ந்தது. அதுபோல், இங்கு  மூன்று பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.இத்தலத்தில் தலவிருட்சம் ஆக புன்னை மரம் உள்ளது.
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்:
தேரோட்டம்
இத்தலத்தில்  எம்பெருமான் சிவனுக்கு நைவேத்தியம் படைக்க, அனுதினமும் ஒவ்வொரு வீடாகச் சென்று நெல் சேகரித்து வருவார், ஒரு  ஏழை  சிவனடியார். அப்படி ஒருநாள், சேகரித்த நெல்லை சந்நிதிமுன், உலர வைத்துவிட்டு குளிக்கச் சென்றார், அந்த ஏழை சிவனடியார். அத்தருணம், திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. அதை உணர்ந்த அடியார், சந்நிதி நோக்கி விரைந்தார். ஆனால், அந்த ஏழை சிவனடியார், உலர்த்திய நெல் பாதிப்படையாதவாறு, வேலி அமைத்து மழைபெய்து காத்தது. இதைக்கண்டு நெக்குருகி போனார், அந்த ஏழை சிவனடியார். இவ்வாறு நெல் இருக்கும் இடத்தில் மட்டும் மழை பெய்யாமல், நெல்லை காத்ததால்,இத்தல இறைவனை 'நெல்வேலி நாதர்' எனவும்,'நெல்லையப்பர்' எனவும் அழைப்பர்.  இங்கு ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழாவும், அத்திருவிழாவில் நிகழ்த்தப்படும் தேரோட்டமும் பிரசித்தி பெற்றவை.

திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்:
மணக்கோலத்தில் சுப்பிரமணியசுவாமி
இவ்விடம் தான், தமிழ்க்கடவுளான முருகப்பெருமான், தெய்வானையை திருமணம் செய்துகொண்டதாகக் கூறுவர்.  அகநானூறு, திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரை காஞ்சி ஆகிய சங்க இலக்கியங்கள், திருப்பரங்குன்றத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றன. புலவர் நக்கீரர், மணக்கோலத்தில் காட்சியருளும், இத்தல முருகனை வணங்கி, தனது குறை நீங்கப்பெற்றார் என்பது வரலாறு.

Comments