ரகுநாதன், புரந்தரதாசர் ஆன கதை!

ண்டரிபுரத்தில் தோன்றியவர் ரகுநாதன். ஆரம்பத்தில் பணத்தின் மீது மட்டுமே  அதீத ஆசை வைத்திருந்த அவரை, மக்கள் வெறுத்து ஒதுக்கினர்.
ஆனால், அவருடைய பூர்வபுண்ணியத்தின் பயனாக, பிற்காலத்தில் பண்டரிபுர விட்டலனின் திருவருள் கிடைத்தது. மக்கள் எல்லோரும், `ரகுநாத தாசர்' என்று மரியாதையுடன் அழைக்கும்
அளவுக்குப் புகழ்பெற்றார்.

ஒருமுறை அவர், தன் மனைவி லட்சுமிபாயுடன் திருப்பதிக்கு வந்தார். அங்கே அவர்களை வரவேற்று உபசரித்தவள் புரந்தரி. அவள், தேவதாசி குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், தெய்வ பக்தி மிகுந்தவள். மிகுந்த ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தாள். அதன் காரணமாகவே ரகுநாததாசரும் அவளது வீட்டில் தங்க சம்மதித்தார்.

இரவு நேரமாயிற்று. தன்னை அழகாக அலங்கரித்துக்கொண்டு ரகசியமாக வெளியே கிளம்பினாள் புரந்தரி. அதைக்கண்ட ரகுநாத தாசரின் மனம் கசந்தது. ‘தனது குலத்தொழிலை அவள் இன்னும் விடவில்லையே?’ என்று எண்ணி மனம் நொந்தவராய் அவளைப் பின்தொடர்ந்தார்.

நேராகக் கோயிலுக்குச் சென்றாள் புரந்தரி.அந்த அர்த்தஜாம வேளையிலும் மூலஸ்தானத்தின் கதவு மட்டும் திறந்திருந்தது. புரந்தரி உள்ளே சென்றதும் கதவு மூடிக்கொண்டது.

கதவின் துவாரம் வழியே பார்த்தார் தாசர். அழகான இளைஞன் ஒருவன் வீணை இசைக்க, புரந்தரி நடனமாடினாள்; பிறகு புரந்தரி வீணை வாசிக்க அவன் நடனமாடினான். இதைக் கண்ட தாசரின் மனம் கொதித்தது.

மறுநாள் காலை வீடு திரும்பிய புரந்தரியை, “இது என்ன விஷயம்?” என்று கேட்டார். “இன்று தெரிந்துகொள்வீர் தாசரே!” என்று கூறிச்சென்றவள், அன்று இரவு அதேபோலக் கிளம்பியபோது, அவரையும் அழைத்துச் சென்றாள். அன்றும் அதேபோல நடந்தது. ஆனால் வீணை வாசிக்கும்போது அந்த இளைஞன் அபஸ்வரமாக வாசிக்க ஆரம்பித்தான்.

“ஐயோ! அபஸ்வரம் தாங்கவில்லையே?” என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே ஓடிவந்தார் ரகுநாததாசர். அந்த திவ்யரூப சுந்தரன் எழுந்து ஓடினான். பின்னாலேயே ஓடினார் அவர். கருவறைக்குள் சென்றதும் அந்த சுந்தர ரூபம் மறைந்துவிட்டது. புரந்தரிக்கு அருள் புரிந்து, ஆடவும் பாடவும் வந்தது இறைவனே என்பது தாசருக்குப் புரிந்தது!

“அம்மா! உனக்காக இறைவனே வீணை இசைக்க நீ ஆடினாய்; நீ இசைக்க அவர் ஆடினார்; என்னே உன் பெருமை!’' என்று கூறிக் கண்களில் நீர் பெருக, அந்த பக்தையின் காலில் விழுந்தார் ரகுநாததாசர்.

பக்தை புரந்தரியின் மூலம் இறைவனால்  ஆட்கொள்ளப்பட்ட ரகுநாததாசரே, இசை உலகில் பெரும்புகழ் பெற்ற புரந்தரதாசராக மாறினார்.

Comments