பண்டிதராக வந்த காசி விஸ்வநாதர்!

யதேவரின் கீதகோவிந்தத்தில் ‘கண்ணன் தன் முடியில் ராதையின் திருவடி களை வைத்து மகிழ்விக்கவேண்டும்’ என்ற வரிகள் வரும்.
“ஸ்மரகரள கண்டனம் மமசிரஸிமண்டனம்
தேஹிபதபல்லவமுதாரம் சாருசீலே
பிரியே சாருசீலே”

- என்ற இந்த அடிகள் பகவானுக்குப் பெருமைச் சேர்க்குமா என்ற சந்தேகம் ஜயதேவருக்கு எழுந்தது. உடனே காசிக்குச் சென்று, ஸ்ரீவிஸ்வநாதரிடம் தன் சந்தேகத்தைத் தீர்க்குமாறு வேண்டினார். அன்றிரவு ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஜயதேவரின் கனவில் தோன்றி, தன் மீது ‘பஞ்சாஷ்டகம்’ பாட உத்தரவிட்டார். அப்படியே செய்து முடித்தார் ஜயதேவர்.

இந்த நிலையில், பண்டிதர் சபையில் சலசலப்பு உண்டாயிற்று. குடார பண்டிதர் என்ற பெரியவர், மேற்காணும் அடிகளை எடுத்துக்காட்டி, `இது நாராயணனை அவமதிப்பதாகும்' என்று குற்றம் சாட்டினார். ஜயதேவர் திகைத்துப் போனார்; தயக்கத்தின் காரணமாக தான் வெளியிடாத அந்த வரிகள், எப்படி அந்தப் பண்டிதருக்குத் தெரியவந்தது என்று வியந்தார்!

பண்டிதர் அத்துடன் விடவில்லை. “இந்த நூலை கங்கையில் எறிவோம். இது, பக்தி சிரத்தையுடன் எழுதப்பட்டதாயின், கங்கை ஏற்றுக்கொள்வாள்” என்று ஒரு பரீட்சையும் வைத்தார். அதன்படியே செய்தனர். கீதகோவிந்தத்தைக் கங்கையில் எறிந்த மறுகணமே, அதைக் கையில் ஏந்திக் கொண்டு, சிறுமி ஒருத்தி வெளியே வந்தாள். அவள் யார்? சாட்சாத் கங்காதேவியேதான்!

“என் திருவடி ஈசன் முடியில் எப்போதும் படுவது குற்றமில்லையே? அப்படியானால், ராதையின் திருவடி கண்ணனின் திருமுடியில் படுவது எப்படிக் குற்றமாகும்?” என்று கேட்டாள் கங்காதேவி.

அதை கையில் வாங்கிக்கொண்ட பண்டிதர், மீண்டும் அதைக் கங்கையில் எறியும் பாவனையில் கையை உயர்த்தினார். மறுகணம், விண்ணிலிருந்து இறங்கி அதை ஏந்திக்கொண்டான் கண்ணன். அப்போதே கங்கையும், பண்டிதரும் மறைந்தனர்.  அங்கே காசிவிஸ்வநாதர் காட்சிதந்து அருள் பாலித்தார். ஆம்! ஜயதேவரின் சிருங்கார வர்ணனையை ஈசனே ஏற்று, உலகுக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்!

Comments