சிவகங்கை மாவட்டத்தில், இயற்கை எழில் சூழ அமைந்திருக்கும் சிற்றூர் உலகம்பட்டி. நகரத்தார் அதிகம் வசிக்கும் இவ்வூரின் எல்லையில் அமைந்துள்ள ஞானியார்மடம் திருக்கோயிலும், அங்கே அருள்பாலிக்கும் தண்டாயுதபாணி தெய்வத்துக்கு ஊர்மக்கள் நடத்தும் தைப்பூசத் திருவிழாவும் இந்தச் சிற்றூரின் சிறப்பம்சங்கள்!
ஞானியார் மடம் உருவான வரலாறு மற்றும் திருவிழாவைப் பற்றித் தெரிந்துகொள்ள, உலகம் பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற பெரியவரிடம் பேசினோம்.
‘‘எனக்கு 80 வயசாகுது. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து இந்தத் திருவிழா இப்படித்தான் நடந்து வருது. எங்க ஊரின் கோடியில் இருக்கும் ஞானியார் மடம், செட்டிநாட்டுப் பகுதியில் ரொம்பப் பிரசித்தமான முருகன் கோயில். சுமார் 300 வருடங்களுக்கு முன்னால், இங்கே வாழ்ந்த சேவுகானந்த ஞானியார் என்பவர், இப்போது ஞானியார் மடம் இருக்கும் இடத்தில் தண்டாயுதபாணியைப் பிரதிஷ்டை பண்ணி, வழிபட்டு வந்திருக்கிறார். 1790-ம் வருஷம் அவர் ஜீவசமாதி அடைஞ்சதும், அவர் சமாதியின் மீது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினாங்க எங்க முன்னோர்கள். பக்கத்திலேயே ஸ்ரீமீனாட்சி அம்மன் சந்நிதியை பிற்காலத்தில் நாங்கக் கட்டினோம். சேவுகானந்த ஞானியின் தவப்பயனும் ஸ்ரீதண்டாயுதபாணியின் அருளும் சேர்ந்து இந்த தலத்தை சக்திவாய்ந்த கோயிலாக உருவாக்கியிருக்கு. நம்பிக்கையோடு வேண்டிக் கொண்டால், அவர்கள் வேண்டியதைக் கொடுப்பான் இங்கே இருக்கும் முருகன்!’’ என்றவர், இவ்வூரின் தைப்பூசத் திருவிழா குறித்து விவரித்தார்.
‘‘வருடா வருடம் எங்க ஊர் மக்கள் எல்லாம், தைப்பூச நேரத்தில் எந்த ஊரில் இருந்தாலும் நாலு நாள் லீவு போட்டுட்டு இங்கே வந்து கூடிருவாங்க. வீட்டுக்கு வீடு, அவங்கவங்க பிள்ளைகள், உறவினர்கள், சம்பந்திமார்கள், நண்பர்கள்னு ஊரே களை கட்டியிருக்கும். பூசத்துக்கு ஒருநாள் முன்னதாக, சேவுகானந்த ஞானியாருக்கு குரு பூசை போடுவோம். அதிலிருந்து திருவிழா ஆரம்பிக்கும். எங்களில் நிறையப் பேர் வீடுகளில் காவடி வெச்சிருக்கோம். அந்தக் காவடிகளைப் பூசத்துக்கு முதல் நாள் எடுத்து, மயில்தோகை, பல்லாங்கு எல்லாம் வைத்துக்கட்டி அலங்கரித்து, சர்க்கரை நிறைந்த சொம்பு ஒன்றையும் காவடியில் சேர்த்துக் கட்டுவோம். பிறகு, கச்சேரிக்கூடம் எனும் இடத்தில் எல்லோரது காவடிகளையும் சேர்த்து வைப்போம். சுமார் 40, 50 காவடிகள் தயாராக இருக்கும்.
மறுநாள் பூசத்தன்று காலையில் 10 மணிக்கு காவடிக் கட்டினவங்க எல்லாம், காவடிகளை எடுத்து தோள் மேல வைத்துக்கொண்டு ஊர்வலமா வருவாங்க. முதலில் எங்க ஊர் ஊருணிக்கரையில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிடுவாங்க. அடுத்து நகரச் சிவன் கோயில். அங்கே அலங்காரக் கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் சுப்ரமணியர் தயாராக இருப்பார். காவடிகள் வந்து சேர்ந்ததும், உற்சவர் சிவன் கோயிலை வலம் வந்து கிளம்புவார். அங்கிருந்து காவடி ஊர்வலம் மேளதாளத்தோடு, ஞானியார் மடத்துக்கு வந்துசேரும்.
அங்கே உற்சவ மண்டபத்தில் காவடிகளை இறக்கி வைப்பாங்க. ஞானியாருக்கும் தண்டாயுதபாணிக்கும் பூசைகள் நடக்கும். அதே நேரம் அன்னதானத்துக்கான உணவும் தயாராக இருக்கும். பள்ளயம் போட்ட சோத்துக்கு, வேளார் வந்து பூசை போட்டு சாமி அழைச்சு, விபூதி போட்டு ஆசீர்வதிச்ச பிறகு, அன்னதானம் ஆரம்பிக்கும். சாம்பார், ரசம், நாலு வகை காய்கறிகள், பாயசத்தோடு விருந்து நடக்கும்.
ஒவ்வொரு வருஷமும் கிட்டத்தட்ட 12 மூட்டை அரிசி வடிப்போம். பூசை போட்ட சாப்பாட்டுக்குன்னே ஒரு தனி மணமும் ருசியும் இருக்கும். நம்ம ஆளுக எங்கே இருந்தாலும் இந்தப் பூசைச் சோத்தை தவறவிட மாட்டாங்க. அவ்வளவு விசேஷம்! நாட்டார்களும் நகரத்தார்களும் பரிமாற, சுமார் 3000, 4000 பேர் சாப்பிடுவாங்க.
பூசத்துக்கு மறுநாள் அக்னிக்காவடி... ஏதாவது ஒரு பிரார்த்தனைக்காக காவடி எடுத்து அக்னியில் இறங்குறேன்னு வேண்டிக்கிட்டவங்க, பிள்ளையார் கோயிலில் இருந்து காவடி எடுத்து ஆடி வருவாங்க. காவடியுடன் பால் குடங்களும் வரும். ஞானியார் மடத்தில், முருகன் சந்நிதிக்கு முன்னே எட்டு அடி நீளத்துக்கு அக்னி வளர்த்து, தகதகன்னு இருக்கும். கோயிலைச் சுற்றி பால்குடம் எடுத்து வர்றவங்க, காவடி எடுத்து வர்றவங்க, அலகு குத்தி வர்றவங்க எல்லோரும் பக்திப் பரவசத்தோடு அக்னியில் இறங்கி நடப்பது, மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி! அதேபோல், அக்னியில் இறங்காத பால் குடங்கள் தனியாகச் சந்நிதிக்குப் போகும்.
ஸ்வாமிக்குப் பாலபிஷேகம் நடந்தபிறகு, நாங்க எல்லாம் எங்க வீட்டுக் குழந்தைகளுக்கு கரும்புத் தொட்டில் கட்டுவோம். கரும்புத் தொட்டிலில் குழந்தையைப் படுக்கவைத்து, கோயிலை மூணு சுற்றுச் சுற்றி வந்து வணங்குறது எங்க குல வழக்கம். அதன்பிறகு, முருகனுக்கு எல்லோரும் மாவிளக்கு போட்டுக் கும்பிடுவாங்க.
சாயங்காலம் அஞ்சு மணிக்கு, உற்சவ மண்டபத்தில் இறக்கி வச்ச காவடிகளைத் தூக்கி வைத்து, ஊரில் இருக்கும் வீதிகளில் எல்லாம் ஆடிவருவாங்க. மேளதாளத்தோடு தாரைத் தப்பட்டை முழங்க, நாகஸ்வரத்தில் காவடிச் சிந்து வாசிக்க, பக்தர்கள் கால் மாத்தி காவடி எடுத்து ஆடி வர்றதைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்! ஊரைச்சுற்றி வலம் வந்து, திரும்ப ஞானியார் மடத்துக்குக் கொண்டுவர்ற காவடிகளை ஸ்வாமிக்குச் செலுத்திய பின், அதிலிருக்கும் சொம்பை அவிழ்த்து அந்த சர்க்கரையை பெரிய அண்டாக்களில் கொட்டுவாங்க... பஞ்சாமிர்தம் கரைக்கிறதுக்காக!
மலை வாழைப்பழம், சர்க்கரை, பேரீச்சம்பழம், ஆங்குர் திராட்சை, கல்கண்டு, ஏலக்காய், தேன் எல்லாச் சாமான்களும் கிலோ கணக்கில் வாங்கி, தயாராக வெச்சிருப்போம். பஞ்சாமிர்தம் கரைக்கிற வேலைக்கும் சீட்டுப் போட்டு, 6 பேரைத் தேர்ந்தெடுத்திருப்போம். அவங்கதான் பஞ்சாமிர்தம் கரைப்பாங்க பழநிக்கு அடுத்தபடியாக, சுவையாக இருப்பது, எங்க ஊர் பஞ்சாமிர்தம்தான்; ஆறு மாசம் வரைக்கும் கெட்டுப்போகாமல் இருக்கும்! இரண்டு அண்டாக்கள் நிறைய கரைக்கப்படும் அந்தப் பஞ்சாமிர்தத்தை, காவடி எடுத்தவங்களுக்கும் ஊர்ப் புள்ளிகளுக்கும் பிரசாதமாக அளந்து, பிரிச்சுக் கொடுத்திடுவோம்.
ராத்திரி ஏலம் நடக்கும். அதாவது, உப்பு, மஞ்சள், எலுமிச்சை, சர்க்கரை, கல்கண்டு மாதிரியான மங்கலப் பொருட்களை விதம்விதமான பாத்திரங்களில் பக்தர்கள் கொண்டுவந்து வெச்சிருப்பாங்க. அவற்றை ஏலம் விட்டு, அதில் வர்ற பணம் கோயிலுக்குச் சேரும். குழந்தைப்பேறு, கல்யாண வரம், நல்ல வேலை கிடைக்கிறதுக்காகன்னு வேண்டிகிட்டு, பொருட்களை ஏலம் எடுப்பாங்க. வேண்டுதல் நிறைவேறிடுச்சுன்னா, அடுத்த வருடம் ஏதாவது பொருள் வாங்கி வந்து ஏலத்துக்கு வைப்பாங்க. அடுத்த நாள் சாயங்காலம், மகளிர் நடத்தும் விளக்கு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறும்’’ என்கிறார் திருநாவுக்கரசு.
திருவிழா நிறைவு நாளில் விளக்கு பூஜையைச் சிறப்பாக நடத்தி வரும் 80 வயதைக் கடந்த ருக்மணி ஆச்சி, ‘‘விளக்கு பூஜையில் சுமார் 100 பெண்கள் கலந்துக்குவாங்க. என்ன கஷ்டம் வந்தாலும், அவனருளால் விடாமல் தொடர்ந்து நடந்துக்கிட்டிருக்கு! இது 25-வது வருஷம். சிறப்பாக நடத்தணும்னு நினைச்சிருக்கேன். அந்த முருகன்தான் நடத்திக்கொடுக்கணும்’’ என்கிறார்.
‘‘ஆக மொத்தம், எங்க ஊரின் மூத்த தலைமுறையாகிய நாங்களும் சரி... நேத்துப் பிறந்த வாண்டுகளும் சரி... ஒவ்வொரு வருஷமும் தைப்பூசம் எப்படா வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்போம்! அந்த ஞானியார் மடத்து சேவுக மூர்த்தியும், அங்கே அருள்பாலிக்கும் செந்தில் வடிவேலனும் எங்களையும் எங்கள் குலத்தையும் எப்போதும் காத்து நிற்பார்கள் என்பது சத்தியம்!’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் திருநாவுக்கரசு.
தைப்பூசம் மட்டுமல்ல, நாட்டார்கள் நடத்தும் பங்குனி உத்திரம் திருவிழாவும், மாதம்தோறும்வரும் கார்த்திகையும், வளர்பிறை சஷ்டியும், சூரசம்ஹாரமும் ஞானியார்மடம் திருக்கோயிலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
வாய்ப்புக் கிடைத்தால், நீங்களும் இந்த ஆண்டு பூசத்துக்கு உலகம்பட்டி ஞானியார் மடம் கோயிலுக்குச் சென்று முருகனை வணங்கி வாருங்கள்... வாழ்வு செழிக்கும், வளங்கள் கொழிக்கும்!
எப்படிச் செல்வது?: திருச்சி-மதுரை நெடுஞ் சாலையில், சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது புழுதிபட்டி பிரிவு. இங்கிருந்து, இடதுபுறம் பிரியும் சாலையில் 15 கி.மீ. பயணித்தால், உலகம் பட்டியை அடையலாம் (புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து 7 கி.மீ தூரம்).
திருவுளச்சீட்டும் திருவிழாப் பணிகளும்
உலகம்பட்டி தைப்பூசத் திருவிழாவின் வேலைகளைச் சீட்டுப்போட்டுப் பிரித்துக்கொள்வது சுவாரஸ்யமான விஷயம்.
தைப்பூசத்துக்கு முந்தைய மார்கழி பௌர்ணமி தினமான ஆருத்ரா தரிசனத்தன்று, திருவுளச்சீட்டுப் போட்டு எடுக்கும் பணி நடக்கும். திருவிழா வேலைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் துண்டுச்சீட்டுகளில் எழுதிச் சுருட்டி, திருவுளச்சீட்டு போடுவார்கள்.
கோயிலைச் சுத்தம் செய்வது, கொட்டகைப் போடுவது, சந்தைக்குப்போய் காய் வாங்குவது, சமையலுக்கு மிளகாய் மல்லி வாங்கி மிளகாய்த்தூள் அரைப்பது, உக்கிராணம் மேற்பார்த்தல், சமையல் மேற்பார்த்தல், செலவு கணக்குவழக்கு பார்த்தல், கோலம் போடுதல், பஞ்சாமிர்தம் கரைப்பதற்கான பொருட்கள் வாங்குதல், பஞ்சாமிர்தத்துக்கான மலை வாழைப்பழம் வாங்குதல், ஸ்வாமிக்கான அபிஷேகச் சாமான்கள் வாங்குதல்.. இப்படியாக நீள்கிறது திருவிழா வேலைகளின் பட்டியல்.
திருவுளச்சீட்டுப் போடப்படும் நாளில், கிராமத்தில் இருக்கும் நகரத்தாரின் புள்ளிகள் பெரும்பாலானோர் (சுமார் 775 புள்ளிகள்) கோயிலில் கூடிவிடுவார்கள். புள்ளி என்பது திருமணமான ஓர் ஆணைக் குறிக்கும். வயதில் மூத்த பெரியவர் ஒருவர் திருவுளச்சீட்டுக்களை குலுக்கிப்போட, ஒவ்வொருவரும் ஸ்வாமி முன்னிலையில் தனக்கான சீட்டை எடுப்பர். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேலைதான் திருவிழாவில் அவருக்கான வேலை. அதை, எவ்விதமான அபிப்ராய பேதமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, எந்தக் குறையும் இல்லாமல் செய்து முடிப்பார். இப்படியே ஒவ்வொருவரும் தமக்கான வேலையைக் கனகச்சிதமாகச் செய்து முடிக்க, வெகு பிரமாதமாக நடந்தேறுகிறது தைப்பூசத் திருவிழா!
திருவுளச்சீட்டு போடும் அன்றைய தினத்தில் வர முடியாதவர்களுக்காக, யார் யாருக்கு என்ன வேலை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஜெராக்ஸ் எடுத்து, ஊரின் 775 புள்ளிகளுக்கும் தபாலில் அனுப்பும் வேலையும் சிரத்தையாகச் செய்யப்படுகிறது. அவ்வூரின் புள்ளிகள், எந்த நாட்டில் எந்த மாநிலத்தில் இருந்தாலும், பூசத்துக்கு வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை அக்கறையுடன் உற்சாகமாகச் செய்கின்றனர். தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் இந்தப் பழக்கத்தை, இப்போதிருக்கும் அவசர, நவீன உலகிலும் விடாமல் செய்து வருவது சிறப்பு.
Comments
Post a Comment