சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. ஆயர்குலப் பெண் ஒருத்தி, தற்போது ஆலயம் அமைந்திருக்கும் பகுதி வழியாகப் பால் எடுத்துச் செல்வது வழக்கம். ஒருநாள், பாதையில் முளைத்திருந்த கொளஞ்சி செடியால் கால் இடறி நிலைதடுமாறினாள்; அவள் பானையில் வைத்திருந்த பால் முழுவதும் தரையில் சிந்தியது. இதே சம்பவம் அடுத்தடுத்த நாட்களிலும் தொடர, பயந்துபோன ஆயர்குலப் பெண், ஊராரிடம் விஷயத்தைச் சொன்னாள். திரண்டு வந்த ஊர் மக்கள் கொளஞ்சிச் செடியை வெட்ட முனைந்தபோது, பானை ஒன்றைக் கண்டார்கள். அதனுள், சுயம்புவாய் தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள் அம்பிகை.
அம்பிகையைக் கண்டு அகமகிழ்ந்த ஊர் மக்கள், அங்கேயே ஓர் ஆலயம் எழுப்பினர். வெட்டவெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதால், ‘ஸ்ரீவெயிலுகந்த அம்மன்’ என்று இந்த அம்பிகைக்கு திருப்பெயர் சூட்டி வழிபடத் துவங்கினர். அவளின் திருவருளால் ஊர் செழித்தது; ஊர் மக்களின் கண்கண்ட தெய்வமானாள், ‘ஸ்ரீவெயிலுகந்த அம்மன்’.
பிற்காலத்தில், சுயம்பு அம்பிகைக்கு மேலேயே சிலாரூபத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர் கர்ப்பக்கிரகத்தில் நான்கு திருக்கரங்களுடன், அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள் ஸ்ரீவெயிலுகந்த அம்மன். புன்னகையோடு அருட்கோலம் காட்டும் அம்பிகையின் திருமுகத்தைத் தரிசிக்கும் தருணத்தில், அவள் நம்மிடம் பேசுவதாகவே தோன்றும்; அவ்வளவு சாந்நித்தியம். நவகிரகங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து, நவகிரக நாயகியாக வெயிலுகந்தாள் திகழ்வதால், இந்தக் கோயிலில் கிரகங்களுக்கென தனிச் சந்நிதி கிடையாது.
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட அன்பர்கள், சனிக்கிழமைகள் அல்லது மற்ற நாட்களில் சனி ஹோரை வேளையில் அன்னையின் சந்நிதிக்கு வந்து வழிபடுகிறார்கள். இதனால், சனிக் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கி சந்தோஷம் பெருகும் என்பது நம்பிக்கை.
அம்பிகையின் சந்நிதிக்கு முன்புறம் விநாயகர் மற்றும் வீரபத்திரர் காட்சி தருகின்றனர். இங்கே ஸ்ரீபைரவர், சுக்கில பைரவர், வன்னி பைரவர் என மூன்று திருவடிவங்கள் அருள்வது சிறப்பம்சம். தோஷங்கள் நீங்கவும், எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடவும், கடன் நிவர்த்தியாகவும் அஷ்டமி நாட்களில் வந்திருந்து இந்த பைரவ மூர்த்தியரை வழிபட்டுச் செல்கிறார்கள், பக்தர்கள்.
இக்கோயிலின் தல விருட்சமான கருவாகை மரத்தை, அம்பிகையின் வடிவமாகவே கருதி பூஜிக்கிறார்கள், பக்தர்கள். ஒருமுறை, நைவேத்தியம் தயாரிப்பதற்காக, இம்மரத்தின் காய்ந்த கிளை ஒன்றை வெட்டி அடுப்பிலிட்டு எரித்திருக்கிறார், கோயில் பணியாளர் ஒருவர். அன்றிரவு பக்தர் ஒருவரது கனவில் தோன்றிய அம்பிகை, தன் சடைமுடியை அடுப்பில் வைத்து எரிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளாள். மறுநாள் கோயிலுக்கு வந்த பக்தர், அங்கிருந்தவர்களிடம் தனது கனவைத் தெரிவிக்கவே, அன்றிலிருந்து மரத்தின் பாகங்களை வேறு எதற்காகவும் உபயோகப்படுத்துவது இல்லை.
நோய் நீக்கும் சர்வரோக நிவாரணியாகவே இந்த மரத்தைப் பக்தர்கள் பாவிக்கிறார்கள். எனவே, பேச்சு வழக்கில் ‘சஞ்சீவி மரம்’ என்றே அழைக்கிறார்கள். இங்கே வரும் பக்தர்களுக்குப் பிரதான பிரசாதமாக இந்த மரத்தின் இலையையும் பட்டையையும் தருவது உண்டு. இதன் இலை மற்றும் பட்டையை வீட்டில் வைத்திருந்தால், குலம் சிறக்கும், கடன் தொல்லைகள் நீங்கும், ஆரோக்கியமும், ஐஸ்வர்யமும் பெருகும் என்பது நம்பிக்கை. உடற்பிணிகள் தீர, இந்த மரத்தின் இலையை அரைத்து உடலில் பூசும் வழக்கமும் உண்டு.
பருத்து வளர்ந்திருந்த மரம், சில ஆண்டுகளுக்கு முன்னர் வீசிய புயலில் விழுந்துவிட்டதாம். அதன் பின்னர் மற்றொரு மரக்கன்று நட்டு வளர்க்கப்படுகிறது. கன்றாக உள்ளதால் தற்போதைக்கு அதன் இலை, பட்டைகளை எவரும் எடுக்க அனுமதிப்பதில்லை.
தை மாதத்தில் பெருவிழா நடைபெறும் (இந்த ஆண்டு, ஜனவரி 31-ம் தேதி தைத் திருவிழா நடைபெறுகிறது). தை மாதத்தின் இரண்டாம் செவ்வாய் அன்று குரு பூஜை வைபவத்துடன் விழா தொடங்கும். அன்று கோயிலில் உள்ள பெரிய சப்பரத்தை, சுமார் 50 பக்தர்கள் ஊர்வலமாகத் தோளில் சுமந்த படி சென்று, சற்று தொலைவில் உள்ள மண்டகப் படியில் வைத்துவிடுவர்.
மூன்றாம் செவ்வாய்க்கிழமையன்று உற்சவ அம்பாளை சப்பரத்தில் எழுந்தருளச் செய்வர்.
பின்னர், கோயிலில் உக்கிர பூஜை செய்து, அங்கிருந்து சக்தி வடிவமாக உள்ள சூலாயுதத்தை மேள-தாளம் முழங்க எடுத்துச் செல்வார்கள். பிறகு, சப்பரத்தில் உற்சவ அம்பாளுடன் சூலத்தை வைத்து ஊர்வலமாக கோயிலுக்குத் திரும்புவர். சப்பரம் கிளம்பும்போது பக்தர்கள் எலுமிச்சை, உப்பு, மிளகினை அதன் மீது வீசி வழிபடுவர். இதனால், ஊரில் நோய் ஏதும் அண்டாமல் அம்பிகை பார்த்துக்கொள்வாள் என்பது நம்பிக்கை. குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவும் வேண்டிக்கொண்டும் இந்த வழிபாட்டைச் செய்வதுண்டு.
அம்பிகையின் அருள் பரிபூரணமாக நிறைந்திருக்கும் இந்தத் தலத்துக்கு நீங்களும் ஒருமுறைச் சென்று, வெயிலுகந்த அம்மனைத் தரிசித்து வாருங்கள். உங்களது வினைகள் யாவும் நீங்கும்; வாழ்க்கைச் செழிக்கும்!
உங்கள் கவனத்துக்கு…
மூலவர்: வெயிலுகந்த அம்மன்.
தலச்சிறப்பு: நவகிரக நாயகியாக அம்பாள் அருளும் தலம்.
பிரார்த்தனைச் சிறப்பு: சனிக்கிழமைகள் அல்லது சனி ஹோரை வேளையில் அம்மனைத் தரிசித்து வழிபட்டால், சனிதோஷ பாதிப்புகள் நீங்கும். அஷ்டமி தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து பைரவ மூர்த்தியரை வழிபட்டால், சத்ரு பயம் நீங்கும்.
தரிசன நேரம்: காலை 11 முதல் 1 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை.
எப்படிச் செல்வது?: திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் சுமார் 26 கி.மீ., தொலைவில் படுக்கப்பத்து அமைந்திருக்கிறது. உடன்குடி அல்லது குலசேகரன்பட்டினம் என இரு வழிகளில் செல்லலாம். பஸ் வசதி உண்டு.
Comments
Post a Comment