சோழீஸ்வரம் என்னும் கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழர்

புராணகாலத்துக்குப் பிறகு, பூமியில் புதையுண்டு போன ஊட்டத்தூர் கோயிலை, தஞ்சைப் பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜராஜ சோழனே கண்டெடுத்துக் கட்டினார் என்று சொன்னேன் அல்லவா? அந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.

ரு காலத்தில், வில்வ மரங்கள் அடர்ந்து செழித்து, வில்வாரண்ய க்ஷேத்திரமாக விளங்கியிருக்கிறது ஊட்டத்தூர். இவ்வூருக்கு வடக்கே சோழீஸ்வரம் என்னும் கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழர், அடிக்கடி அந்தக் கோயிலுக்குச் சென்று ஸ்ரீசோழீஸ்வரரைத் தரிசித்து வருவார்.

இப்போதிருக்கும் சுத்தரத்தினேஸ்வரர் கோயில் அப்போது பூமிக்குக் கீழே புதையுண்டிருந்தது. அதன் மேற்பரப்பு முழுவதும் வில்வ மரங்கள் அடர்ந்திருந்தன. வழக்கம் போல ஒரு நாள், மன்னர் இவ்வழியே கோயிலுக்குச் செல்லும்போது, அவர் செல்லும் பாதையில் உள்ள புல்லைச் செதுக்கி, இடையூறுகளை நீக்கிக்கொண்டிருந்தனர் சேவகர்கள். அப்போது, குறிப்பிட்ட ஓரிடத்தில் வெட்டியபோது, சேவகனின் மண்வெட்டி போன்ற கருவி எதன் மேலேயோ இடிப்பது போல சத்தம் கேட்டதும், வேகமாக அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தனர். அங்கே காத்திருந்தது பேரின்ப அதிர்ச்சி!

உச்சியில் ரத்தம் வழிய, மண்ணிலிருந்து சுத்த மாணிக்கமாக (சுத்த ரத்தினம்) சூரியகோடி பிரகாசத்துடன் ஜொலித்தபடி வெளிவந்தது லிங்க ரூபம். அந்த சிவலிங்கத் திருமேனியை வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்து, மாமன்னர் ராஜராஜன் கட்டிய கோயில்தான் இப்போது இருப்பது என்று விவரிக்கின்றது தலவரலாறு. கோயிலைச் சுற்றிக் காணப்படும் 50-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும் அதை உறுதிசெய்கின்றன.

திருமேனி முழுதுமே ரத்தினமாக ஜொலிப்பதால், தூய மாமணி, மாசிலாமணி, துகுமாமணி போன்ற வேறு பல நாமங்களும் இவருக்கு உண்டு. மண்வெட்டியால் வெட்டுப் பட்ட வடு இன்னும்கூட மூலவரின் முடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீசுத்த ரத்தினேஸ்வரருக்கு மட்டுமில்லை. இங்கே இருக்கும் ஒவ்வோர் அற்புதத்துக்குப் பின்னும் ஒரு வரலாறு உள்ளது. மூலவருக்கு முன்னே இரண்டு நந்திகள், மூலவர் சந்நிதியில் பிரம்ம தீர்த்தம் என்ற வற்றாத தீர்த்தக் கிணறு, ஆசியாவிலேயே இங்கு மட்டுமே காணப்படும் பஞ்சநதன நடராஜர், அவரையே பார்த்தபடி ஒயிலாகச் சாய்ந்திருக்கும் சிவகாமி அம்மன், கொடி மரத்துக்கு அருகே மேலே விதானத்தில் செதுக்கப்பட்டுள்ள 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் மற்றும் நவகிரகங்கள், ‘காசிக்கு வீசம் அதிகம்’ எனப்படும் நந்தியாறு... இப்படி இத்தலத்தில் உள்ள சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நான் கண்டு இன்புற்ற அந்த ஆனந்த அற்புதங் களை ஒவ்வொன்றாய் சொல்கிறேனே!

பாடாலூரிலிருந்து வயல்வெளிகளுக்கு நடுவே நெளிந்து செல்லும் சாலையில் பயணித்து, ஊட்டத்தூரை அடைந்ததும் நம் கண்களில் தென்படுகின்றன இரண்டு கோயில்கள். சிறப்பு மிக்க சுத்தரத்தினேஸ்வரர் கோயிலுக்குத் திரும்பும் சாலையில் வலது புறம் பெருமாள் கோயிலையும் தரிசிக்கலாம். இரண்டு கோயில் களுக்கும் இடையே சுரங்கப் பாதை இருந்ததாம். சிவன் கோயில் பிரம்ம தீர்த்தத்தில் இருந்துதான் பெருமாளுக்கான அபிஷேக நீரைக் கொண்டு வருவார்களாம். இப்போது அந்தப் பாதை மூடப்பட்டுவிட்டதாகவும் அறிந்தோம்.

சிவாலயத்தின் ராஜகோபுர வாசலில் இருந்து கோயிலுக்குள் நுழைகிறோம். இரு புறமும் அடர்ந்து செழித்த நந்தவனம்; மலர்ந்து சிரிக்கும் மலர்ச் செடிகள். இப்படியான பசுமை விருந்து மட்டுமல்ல;  கோபுரத்திலிருந்து கோயிலுக்குள் செல்லும் நீண்ட நடைபாதையில்  செதுக்கப் பட்டிருக்கும் சிற்பங்களும் நம் கண்களுக்கு  கலை விருந்தளிக்கின்றன. நீளமான மீன்கள், முதலை, பாம்பு, கிளி, அன்னம் என்று விதம் விதமான விலங்குகள், பறவைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்களின் பாதங்கள் பட்டுப் பட்டு அந்தக் கற்கள் தேய்ந்து வழுவழுப்பாக மாறியிருந்தாலும், அந்த உருவங்கள் இன்னும் அழியவில்லை. எந்தக் கோயிலிலும் இது போல நடைபாதையில் நீர்வாழ் உயிரினங் களின் உருவங்களைப் பார்த்ததாக நினைவில்லை எனக்கு. ஊட்டத்தூர் கோயிலுக்குச் செல்பவர் கள் அவசியம் பார்க்க வேண்டும்.

ஒவ்வொன்றையும் ரசித்தபடி மஹா மண்டபத்தில் நுழைகிறோம். நெடிதுயர்ந்த கொடி மரத்தை வணங்கிவிட்டு, நிமிர்ந்து அண்ணாந்து பார்த்தால், அடடா... மேலே விதானத்தில் என்னவோர் அற்புதம்...!


அவனருளாலே அவன் தாள் வணங்கி...

ஊட்டத்தூர் சிவனாரின் தீவிர பக்தர் கிருஷ்ணன். இவர்,   இறையருளால் தனக்கு நேர்ந்த அனுபவத்தைச் சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘எனக்கு 60 வயசு ஆகுதுங்க. முசிறிக்குப் பக்கத்தில் கண்ணுக்குளம்தான் என் சொந்த ஊரு. ரெண்டு வருஷத்துக்கு முன்னால கடுமையான வயித்து வலி, விலாவில் வலி வந்து திருச்சி எஸ்.ஆர்.எம். மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிப் பார்த்தப்போ, ஸ்கேன் எல்லாம் எடுத்து கிட்னியில் கல் இருக்குன்னு சொன்னாங்க. ரெண்டு பக்க கிட்னியிலும் இருந்ததால், என்னால் வலி பொறுக்க முடியல. ஆறு மாசமா சிகிச்சை எடுத்துக்கிட் டாலும் வலி தொடர்ந்து இருந்துச்சு. ஆபரேஷன்தான் பண்ணணும்னு டாக்டர் சொன்னாங்க. இந்த நிலைல, என் பொண்ணு ஊட்டத்தூர் கோயில் பற்றி என்கிட்ட சொல்லி, ‘ஒரு தடவை வாங்கப்பா’ன்னு என்னைக் கூப்பிட்டுட்டே இருந்துச்சு. நான்தான் அசால்ட்டா விட்டுட்டேன்.

ஒரு கட்டத்தில், வலி தாங்க முடியாமல் போகவே, ‘சரி, சாமியையாவது போய் கும்பிட்டு வருவோம்’னு ஊட்டத்தூர் போய், பஞ்சநதன நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சார்த்தி, தீர்த்தம் வாங்கிட்டு வந்து 48 நாள் சாப்பிட்டேன். என்ன ஆச்சரியம்...! வலி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுது.

சமீபத்தில் டாக்டரைப் பார்த்தப்போ, ஸ்கேன் பார்த்துட்டு ‘கல்லின் அளவு குறைஞ்சிருச்சு... ஆபரேஷன் தேவையில்லை’ன்னு சொல்லிட்டார்! அப்பா... அந்த நிமிஷம் என் மனசு நிம்மதியான விதத்தை எப்படிச் சொல்றது...! எல்லாம் அவன் அருள்தாங்க! ’’  - கண்களில் நீருடன் கைகூப்பித் தொழுகிறார் கிருஷ்ணன். வலி நீங்கி, குணம் பெற்ற மகிழ்ச்சி வார்த்தைகளில் வழிகிறது.


மண் குதிரா... குதிரையா?

பளபளப்பாக இருப்பதைப் பாா்த்து, அதாவது வெளித் தோற்றத்தைப் பார்த்து நாம் ஏமாந்து போய்விடக்கூடாது என்பதற்காகவே, ‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே’ எனப் பழமொழியாகவே சொல்லிவைத்தாா்கள், பெரியோர்கள்!

‘குதிா்’ என்பது கிராமங்களில், நெல் கொட்டி வைக்கப் பயன்படும் ஒன்று. அடிப்பாகம் சற்று சிறுத்தும், நடுப்பாகம் நன்கு பெருத்தும், மேற்பாகம் சிறுத்தும் இருக்கும். அதைச் சாணம் போட்டு மெழுகிப் ‘பளபள’வென வைத்திருப்பாா்கள்.

அதுபோல, நதிகளிலும் சிறுசிறு மணல் திட்டுகள் இருக்கும். இவற்றையும் ‘மண் குதிா்’ என்பாா்கள். ஆற்றில் நீா்வரத்து குறைந்த காலத்தில், இவை சிறிது மேலே எழும்பிப் ‘பளபள’வென இருக்கும். இதை நம்பிக் காலை வைத்தோமானால், `பளிச்’சென்று நம்மை உள்ளே இழுத்துவிடும். இப்படிப்பட்ட மண் குதிா்களை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது; ஆபத்து உண்டாகும் என்பதை உணா்த்துவதற்காகவே, ‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே’ என்றாா்கள். அதுவே ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே’ என்று மாறிவிட்டது!

Comments