கிரக தோ௸ம் தீர்க்கும் ஆதிநாராயணர்!

அதிமூலமே’ என்று அழைத்த கஜேந்திரனுக்கு பெருமாள் மோக்ஷம் கொடுத்த இடம் கபித்யாரண்ய கே்ஷத்ரம். இது இறைவனுக்கு மிகவும் உகந்த பிரதேசம். சுற்றிலும் நெல் வயல்கள். தூரத்தே குன்றுகள். ரம்மியமான காற்று. மனதை ஒருமைப்படுத்தி, இறை வழிபாட்டில் ஈடுபட மிகவும் பொருத்தமான இடமாதலால் தன்னை நாடிய கஜேந்திரனுக்கு மோக்ஷமளித்த பின், இவ்விடத்தில் நாரதர் மற்றும் பிருகு முனிவருக்கு கோள்களின் கோச்சாரம், அவற்றின் சாதக, பாதகங்கள் பற்றியும் உபதேசித்தார் பெருமாள். நவக்கிரகங்கள் எவ்வாறு மனித வாழ்க்கையில் சம்பந்தப்பட்டு இருக்கின்றன என்று பிருகு முனி வரும் நாரத மகரிஷியும் இங்குதான் அறிந்து கொண்டனர். இறைவனுக்கு உகந்த தலம் என்றால், அவர் பத்தினிகளுக்கும் அது அபிமான தலம்தானே.
இவ்விடத்தில் பூமா தேவி நாராயணரை பக்ஷி ரூபத்தில் தினமும் வழிபட வேண்டி பிரார்த்தித்தாள். அவ்வாறே நாராயணரும் வரம் கொடுக்க, தன் அருள் பெற்ற பூகர்ப மகரிஷியிடம் ஆதிமூல நாராயணரை அத்தி மரத்தில் சிலா ரூபமாக வடித்துத் தர வேண்டினாள். பூகர்ப மகரிஷியும் பேரானந்தம் கொண்டு இறைவனின் தானுகந்த திருமேனியை சிலா ரூபமாக வடித்து, அருகிலேயே தனது பெயரால் பூகர்ப தீர்த்தம் என்ற திருக்குளத்தையும் ஏற்படுத்தினார்.
பூமா தேவி மனமகிழ்ந்து தினமும் இறைவனை ஆராதித்து வந்தாள். கோள்களின் சுழற்சியையும் அதன் பலன்களையும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஜோதிடர்கள் இவ்வாலயத்துக்கு வந்து இறைவனை வணங்கி வழிபட்டு, தங்களை நாடிய மன்னர்களுக்கும் மக்களுக்கும் நற்பயன்களை அறிவித்துக் காத்தனர். காலப்போக்கில் இப்பகுதி, ‘விளாங்காடு’ என்று வழங்கப்படலாயிற்று.
இறைவனுக்கு சிலா ரூபம் அமைக்கப்பட்டு, மிக பிரம்மாண்டமான ஆலயமும் எழுப்பப் பட்டது. ஐந்து கால பூஜைகளும் பஞ்ச பருவ விழாக்களும் பிரம்மோத்ஸவமும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது, விஜயநகர அரசர்கள் காலம் வரை. விஜயநகர ராஜ குருவாக வியாசராஜரும் அவரின் மறு அவதாரமான ராகவேந்திரரும் கூட இத்தல இறைவனை வழிபட்டுச் சென்றதா கச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.


1750களில் பாண்டிச்சேரி பிரெஞ்சு படைகளுக்கும், ஆங்கிலேய, ஆற்காடு நவாப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட பூசலில் விளாங்காடு மிகுந்த பாதிப்புக்குள்ளானது. யுத்த காலத்தில் பூஜைகள் நின்று, கோயிலும் ஊரும் பழுதுபட்டன. காலப் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து கோயில் முழுவதும் விழுந்தது. தூண்களையும் கற்களையும் மக்கள் தம் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இங்கு ஆலயம் இருந்த சுவடு மறைந்து, ஒரு மாட்டுக்கொட்டில் எழும்பி, பின் அக்கொட்டிலும் பயன்பாடு இல்லாமல் பாழ்பட்டு நின்றது. பூகர்ப தீர்த்தமோ, பாசியும் தாமரையும் படர்ந்து பரிதாப மானது.


காலங்கள் கடந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இவ்வழியே ஐயப்ப பக்தர்கள் சிலர் பஜனை செய்து கொண்டு சென்றனர். அப்போது அவர்களில் ஒருவருக்கு ஆவேசம் வந்து, இந்த மாட்டுக் கொட்டிலுக்குள் ஓடினார். அங்கு, கேட்பாரற்றுக் கிடந்த ஆதிமூல நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அடையாளம் காட்டினார்.
சர்வ லட்சணம் பொருந்திய இறை மூர்த்தங்களைப் பார்த்து பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். சில நாட்களிலேயே, அங்கு ஒரு சிறு குடில் அமைத்து, இறை உருவங்களை வழிபடத் தொடங்கினர். இச்சமயத்தில் இவ்வூரைச் சேர்ந்த ஒருவருக்கு, அவர் குருவின் மூலம் இங்கு இறைவன் எழுந் தருளி இருப்பதும், அவருக்குக் கோயில் கட்டுமாறும் உத்தரவானது. ஊர் மக்கள் மற்றும் நல் இதயம் கொண்டோர் முயற்சியால், சிறிய ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் செயப்பட்டது.


இவ்வாலய பெருமாளை இன்றும் ஆதிசேஷன் வழிபட்டு வருகிறார். பல நாட்களில் பட்டர் சன்னிதியைத் திறக்கும்போது பெருமாளின் மேல் அவர் குடை பிடித்து காட்சி தருவதை பேருவகையுடன் குறிப்பிடுகிறார். பட்டர் இக்கோயிலுக்கு வந்ததே இறைவனின் விளையாடல்தான். வட மாநிலத்தில் ஒரு கோயிலில் கைங்கர்யம் செய்து வந்த இவர், தனது உறவினர்களைக் காண தமிழகம் வந்திருந்தார். அப்போது இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு வந்தார். வந்தவருக்கு இறைவன் ஆணை இடவே, மீண்டும் ஊர் திரும்பாமல் இங்கேயே தங்கி விட்டார். இவ்வாலயத்துக்காக உத்ஸவரைத் தேடும்போது, மூலவரை அச்சில் வார்த்ததுபோல அப்படியே ஒரு மூர்த்தம் சுவாமி மலையில் உள்ளதாகத் தகவல் வந்து, அங்கு போய் பெற்று வந்திருக்கின்றனர். இது ஆதிமூல நாராயணர் செயலே என்று வியக்கின்றனர் ஊர் மக்கள்.
இப்பெருமாள், அனைத்து விதமான கிரக தோஷங்களையும் போக்க வல்லவர். பலர் இவ்வாலயத்தை பற்றிச் செவி வழியாகக் கேள்விப்பட்டு, இங்கு வந்து பலன் பெற்றுச் செல்கின்றனர். மேலும், ஜோதிட துறையினை தொழிலாகக் கொண்டவர்கள் இங்கு வந்து, தாங்கள் துல்லியமாக நற்பலன்களைத் தெரிவிக்க இறைவனை வழிபட்டுப் பலன் பெறுகின்றனர்.


இவ்வாலயத்துக்கு மேலும் பல திருப்பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. கோயிலைச் சுற்றி மதில் எழுப்பி, குளத்தைச் சுத்தம் செய்து, தாயார் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி போன்றவை அமைக்கப்பட உள்ளன. நல்லெண்ணம் கொண்டோர் துணையும் உதவியும் இச்சிறப்பான ஆலயத்துக்குத் தேவைப்படுகின்றன.
செல்லும் வழி: மேல்மருவத்தூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது.


தரிசனநேரம்: தற்சமயம் ஒரு கால பூஜை நடை பெற்று வருகிறது. பட்டர் கோயிலுக்கு அருகே தங்கி இருப்பதால் தொடர்பு கொண்டு விட்டுச் சென்றால் எளிதில் தரிசிக்கலாம்.
தொடர்புக்கு: 98403 44082 / 89396 04704

Comments