பிறர் வலி... தன் வலி!

வெளிநாடுகள் போகும்போது அங்கங்குள்ள சுவாமி நாராயண் கோயில்களைப் பார்க்க வாருங்கள் என்று தவறாமல் அழைப்பார்கள். பிரம்மாண்டம், தூய்மை, பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்த பராமரிப்பு, சகல நவீன வசதிகளும் இந்தியப் பாரம்பரிய மதத்தன்மையும் மோகித்து ஒன்றை ஒன்று தழுவி நிற்கும் ராதாகிருஷ்ணத் தன்மை இவை கண்டு நான் திகைத்தது உண்டு.
ஏராளம்... தாராளம்... பெருகிக் கிடக்கும். அந்த பிரம்மாண்டத்தைக் கண்டு நான் பிரம்மித்தபோது, ஒருவரி என்னுள் பொறி தட்டியது. அது, அன்பின் பிரம்மாண்டம். உண்மையைச் சொன்னால் அந்த வழிபாட்டுணர்வின் மூலவரான சுவாமி நாராயண் அவர்களது அளவிட முடியாத அன்பின் பிரம்மாண்டத்தின் முன் அந்தக் கோயில்கள் மிக மிகச் சிறியவை... தூசு... வரலொட்டி ரங்கசாமி என்ற எழுத்தாளர் தம் பதிவில் இப்படியொரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். அதைப் படித்தபோது கல்லும் கலையும் கட்டித் தழுவி, காதல்களி நடனம் செய்யும் அக்ஷர்தம் கோயில் உள்பட, சுவாமி நாராயண் தம் பிரேமைக் கடல் முன் ஒரு சொட்டுத் துளி... அப்படியென்ன அவர் பிரேமை காட்டி விட்டார்?
இருபது வயது நிறையாத இளந்துறவியாக இருந்த சுவாமி நாராயண் தமது குருநாதர் திருவடிகளைப் பணிந்து வணங்கினார். ஆற்றல் வாய்ந்த அதி அற்புத ஆச்சர்ய தபோபலம் உடையவராம் அவ ரது குரு. கேட்டார் கேட்ட வரம் தரும் கடவுள் என்றே அவரைக் கொண்டாடி இருக்கிறார்கள். அந்த அபூர்வ குருவை வணங்கி, தம் கல்வியை அவரிடம் முடித்துக் கொண்டு புறப்படுகிறார் சுவாமி நாராயண். இறை பணிக்குத் தயாராகி வெளியேறும் தருணம்.
கண்ணீர் மல்கக் கைகூப்பி நிற்கும் சீடரைப் பார்வையால் ஊடுருவிப் பார்த்த குருநாதர் புன்னகை தவழ, என் அன்பு மகனே... கேள். வாழ்நாள் முழுவதும் நீ நன்றாக வாழ, மிக மிக அவசியமான ஏதேனும் ஒரு வரம்... ஒரே ஒரு வரம் கேள்... உனக்கு அதைத் தருகிறேன். அந்த வரத்தால் நீ நலமோடு, வளமோடு, பலமோடு வாழ ஆசி தருகிறேன். கேளப்பா... கேள்"’ என்றார் குருநாதர்.
புருவம் நெளிய, கண்கள் அழுது சிவப்பேற, கைகூப்பி நின்ற சுவாமி நாராயண் பேசத் தொடங்கினார். குருவே... எனக்கு எந்தக் குறையும் இல்லை. எந்தத் தேவையும் இல்லை. ஆனால், மண்ணுலகில் மனிதர் பலர் படும் துயரங்கள், கஷ்டங்கள் இவற்றைப் பார்க்கும்போது நான் நடுங்குகிறேன்; துடிக்கிறேன். இவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லையே என்று வருந்துகிறேன். குருவாகிய நீங்கள் உலகின் தந்தை போல... கடவுள் போல... அப்படியானால் உலக மக்கள் யாவரும் உங்கள் பிள்ளைகள் போல... அவர்கள் கஷ்டப்படக் கூடாது என்கிற வரமளித்தால் நான் நிம்மதி அடைவேன். உலகில் உள்ள மக்கள் எவருமே துயரம் அடையாத வரம் தாருங்கள் குருவே" என்று நெக்கு நெக்குருகி விழிநீர் சிந்தினார்.
குருவோ, குழந்தாய்... கர்மவினை குறித்து நான் நடத்திய கல்வி உன் நினைவில் இருக்கும். பாவ, புண்ணியம் அவரவர் செய்தது. அதற்
கேற்ப கர்ம வினையால் இன்ப, துன்பங்கள் அவர்கட்கு வருகிறது. அதை நீயோ, நானோ எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? அப்படியானால் அந்தக் கர்மாக்களை யார் அனுபவிப்பது என்று யோசித்துப் பாரப்பா?" என்று ஞானம் புகட்ட விரும்பினார்.
அந்த அன்பின் பிரம்மாண்டம் அழுகையோடு, நான் அனுபவிக்கட்டுமா சுவாமி... யார் ஒருவர் என்ன கஷ்டப்பட வேண்டும் என்று எழுதி இருந்தாலும் அது எனக்கே வரட்டுமே சுவாமி... வறுமை, பிணி, இழப்பு, விஷக்கடி, அவமானம்... இப்படி யார் எதை அனுபவிக்க வேண்டி இருந்தாலும் அதை எனக்குத் தரும்படி மாற்றுங்களேன் குருதேவா... உங்கள் சீடப் பிள்ளைகளில் ஒருவன் மானமிழந்து பிச்சை எடுக்கும் விதி இருந்தால் அது எனக்கு வரட்டும். நான் அவமானப்பட்டு பிச்சை எடுக்கத் தயார்" என்று உடைந்து போய் அழுதார் சுவாமி நாராயண்.
திகைத்துப் போன குருநாதர், தம் இருக்கை விட்டு எழுந்தார். சீடனை நோக்கி ஈர்க்கப்பட்டார். நெஞ்சாரத் தழுவி கண்ணீரைத் துடைத்து விட்டு, உன் குருவான என் புகழ், பெருமை எல்லாம் என் காலத்தோடு கரைந்து காற்றாகி விடும். உன் புகழ் அழியாது. நீ வணங்கப்படுவாய். உலகம் உள்ளவரை உலகுக்காக வாழ நினைக்கும் நீ வாழ்ந்து கொண்டே இருப்பாய்" என்று ஆசி வழங்கினார். அந்த ஆசீர்வதிக் கப்பட்ட மகன்தான் தம் இயக்கம் மூலம் வாழ்கிறார். சுவாமி நாராயண் மகராஜ் சீடர்கள்தாம் யமுனை ஆற்றங்கரை அக்ஷர்தம் கோயில் தொடங்கி உலகெங்கும் பிரம்மாண்டமான கோயில்களை உருவாக்கி வருகிறார்கள்.
‘நான் நன்றாக இருக்க வேண்டும்... என் பிறந்த நாள்... கோயிலுக்கு வருகிறேன்... என் ஆயுள் கூட வேண்டும்... எனக்கு வேலை வேண்டும்... எனக்குப் பணம் வேண்டும்’ என்று சகல ஜீவர்களும் வேண்டும் கடவுளிடம், ‘இவர்கள் கஷ்டங்கள் எனக்கு வேண்டும்’ என்ற எண்ணம்தான் சித்தம் அழகான நிலை. இவர்களே சித்தம் அழகியார்.
மீன்பிடி வலையும் தூண்டிலும் பார்த்து வள்ளலார் அழுகிறார். மண்ணினில் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோதெல்லாம் எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்" என்று பாடுகிறார். அதைவிட அற்புதம்,
‘மண்ணுல கதிலே உயிர்கள்தாம்
வருந்தும்
வருத்தத்தை ஒருசிறி
தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக்
கேட்டும்
கணமும்நான் சகித்திட
மாட்டேன்’ என்கிற திருவருட்பா வரிகள்.
ஸ்ரீ வைஷ்ணவத்திலே மாறனேரி நம்பிகள் என்றொரு மகான் வாழ்ந்தார். வாழ்ந்தார் என்று இறந்த காலத்தில் சொன்னால் எனக்குப்பாவ மல்லவா வந்து சேரும். வாழுகிறார்... நிரந்தர நிகழ்காலம் அவருக்கு. அந்த மகா உத்தமர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியே நின்று கோயிலுக்குள் நிக ழும் ஆளவந்தார் சுவாமிகளின் காலட்சேபம் கேட்பது வழக்கம். மாறனேரி நம்பிகள் கோயிலுக்கு உள்ளே அப்போது அனுமதி மறுக்கப்பட்ட வகுப்பு. ஆனாலும், ஆழ்வார்கள் மீதும் பெருமாள் மீதும் ஆசார்யர்கள் மீதும் அதிக மரியாதை உடையவர் அவர்.
கோயிலுக்கு உள்ளே ஸ்ரீ ஆளவந்தார் பேசுவது வெளியே நிற்கும் மாறனேரி நம்பிகளுக்குக் கேட்க வில்லை. காரணம், ஆளவந்தாருக்குப் பிளவை நோய் ஏற்பட்டு நோயின் கொடுமையால் அவரால் உரக்கப் பேச முடியவில்லை. ஒருநாள் ஸ்ரீ ஆளவந்தார்
கோயிலினுள் புகுமுன் அவரை வணங்கி எழுந்த மாறனேரி நம்பிகள், சுவாமி... தங்கள் பிளவை நோயைச் சிறிது நேரம் எனக்கு மாற்றித் தர வேணும். காலட்சேபம் சொல்கிற காலமளவு அது என்னிடம் இருக்கட்டும்" என்கிற விசித்திரமான கோரிக்கை வைத்தார். முதலில் தயங்கிய ஆளவந்தார், காலட்சேபம் செய்யும் காலம் வலியும் நோவும் இல்லாதிருந்தால் பலருக்கும் பயன்படும் வண்ணம்தம் பணி நடக்கும் என்கிற பெருமனத்தால், ‘சரி’ என்று உள்ளே புகுமுன் தம் நோவை ஸ்ரீ மாறனேரிக்கு மாற்றிக் கொடுத்து விட்டு கதை சொல்லப் போனார்.
ஆனால்... என்ன ஆச்சர்யம்? திரும்பி வந்து தமது நோயைத் திருப்பித் தருமாறு ஸ்ரீ ஆளவந்தார் கேட்ட போது, குரு பிரசாதமாக அது என்னிடமே இருக்கட்டும்" என்று மாறனேரி நம்பிகள் திருப்பித்தர மறுத்து விட்டார். குரு பிரசாதம் என்று நாம் எதை எதை விரும்புகிறோம் என்று ஒருகணம் எண்ணினால் மாறனேரி நம்பி கோடி மகான்கள் கூடிய மகான் என்பதை உணர்ந்து கொள்ளுவோம். நெகிழ்ந்து போன ஆளவந்தார், தம் அருகிருந்த பெரியநம்பிகளிடம் மாறனேரி நம்பிகளைச் சுட்டிக்காட்டி, இவரும் நாமும் இனி வேறல்ல. நம் நோய் மட்டுமல்ல... நாமும் இவர் வசமே" என்று கண்ணீர் சிந்தினார். அதனால்தான் அரிஜன வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீ மாறனேரி நம்பி மறைந்தபோது (திருநாடு அலங்கரித்தபோது) அந்தண மரபினரான பெரியநம்பிகள் இறுதிக்கடன் செய்து மற்றொரு மதப் புரட்சி செய்தார். இவர்கள் யாவருமே சித்தம் அழகியார்தாம். ஆன்மிக வானில் சிறகடிக்கும்போது எல்லைகளைக் கடந்துபோகும் ஞான வானம் பாடிகள் இவர்கள். மாணிக்கவாசகரும் தாம் சாதி, குலம் என்ற சிற்றெல்லைகளில் சிறைப்பட்டதாகவும், சிவபெருமான் அதனை அறுத் தெறிந்து விடுவித்தருளியதாகவும் பாடுகிறார். ‘சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு’ என்று பாடுகிறார்.
மாணிக்கவாசகரைப் போன்ற மகாத்மாக்கள் நிச்சயம் சாதி, குலம் என்கிற சிற்றெல்லைக்குள் சிறைப்பட்டிருக்க மாட்டார்கள். அடியார் திருக்கூட்டத்துக்கு அலையாய் அலைகிற ஆத்மாக்கள் ஒவ்வொரு சிவனடியாரையும் என்ன சாதி, என்ன குலம் என்றா தேடித்தேடி வணங்கி இருப்பார்கள். திருவாசகம் முழுவதும் படித்தால் தான் என்ன என்ன பிழை செய்தோம் என்று பட்டியல் போடுவது தெரியும். சராசரி மனிதன்கூட தன் வாழ் நாளில் அத்தனை தவறுகளும் செய்திருக்க முடியாது. முழு வாழ்நாளையும் தவறுக்கென்றே பயன்படுத்தினால்கூட இத்தனை பாவங்களையும் ஒருவரே செய்திருக்க வாய்ப்பில்லை. இப்படித்தான் இருக்கும் என்று ஓர் உவமை சொல்ல விரும்புகிறேன்.
துறுதுறுப்பான மகன் எதையாவது அடிக்கடி உடைத்துக் கொண்டிருக்கிறான் என்று அப்பா கோபப் படுகிறார். விலை உயர்ந்த கண்ணாடி உடைந்து கிடக்கிறது. யார் உடைத்தார் என்று அப்பா சீறும்போது பாட்டி குறுக்கே வந்து, நான்தான் உடைச்சேன். என்னை என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ" என்று பழியைத்தான் ஏற்றுக்கொள்வதுபோல, உலக மக்களின் சகல பழி, பாவங்களையும் தானே செய்ததாக, மணிவாசகர் புலம்புகிறார் என்றே நான் கருதுகிறேன். பழுத்த அந்த ஆன்மா, பாட்டி பேரனுக்காகப் பழி ஏற்ற மாதிரி, நம் பாவங்களைத்தம் பாவங்களாகப் பாடுவதால்தான் திருவாசகம் படிக்கிறபோது நமக்குக் கண்ணீர் வருகிறது. காரணம், அது நம் பாவம்; நம் பழி; நம் அனுபவம். பிறர் துன்பம் தமக்கு வரட்டும் என்றார் சுவாமி நாராயண். பிறர் வருத்தம் தன் வருத்தம் என்றார் வள்ளலார். பிறர் நோய் தன் நோய் என்றார் மாறனேரி நம்பிகள். பிறர் வலி தன் வலி என்றார் கண்ணப்ப நாயனார். அதனால்தான் பிறர் பழி தம் பழி என்கிறார் மாணிக்கவாசகர். தன் பழியைப் பிறர் மீது போடுபவர் சித்தவிகாரம் உடையவர். பிறர் பழியைத் தன் மீது போட்டுக் கொள்பவர் சித்தம் அழகியார்.

Comments