நல்ல தீர்ப்பு தருவாள் மாகாளியம்மன்!

சிவகங்கை மாவட்டம், கல்லலில் இருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் இருக்கும் அழகிய கிராமம் ‘ஆலம்பட்டு’. இங்கு உள்ள வனாந்தரத்தில் எல்லை தெய்வமாக அருள்பாலிக்கிறாள் ஸ்ரீமாகாளியம்மன்.

பன்னெடுங்காலம் முன், சண்ட-முண்டர்கள் எனும் அரக்கர்கள் பூலோகத்தில் தோன்றி மக்களுக்கு கடும்தொல்லைகளைக் கொடுத்து வந்தனர். இதனைக் கண்டு வெகுண்ட அன்னை உமையவள், அந்த அரக்கர்களை வதம் செய்ய பூலோகத்தில் காளியாக அவதரித்தாள்.

ஆரம்பத்தில், தனது பிறப்பின் ரகசியம் புரியாது ஒரு சாதாரணப் பெண் ணாகத் திகழ்ந்தவள், அரக்கர்களின் இன்னல்களைத் தானும் அனுபவிக்கும் சூழலைச் சந்திக்க நேர்ந்தபோது, `தான் யார்' என்பதை உணர்ந்தாள்; ‘மாகாளியாக’ உருமாறி அரக்கர்களை வதம் செய்தாள். அதனால், உலக மக்கள் மகிழ்ந்தனர். இத்தகவல் தேவி மகாத்மியம் என்னும் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு, வதம் செய்த ‘மாகாளி’ இவ்வூரில் உக்கிரமாக எழுந்தருளியதா கவும், அதனால் அம்பாளை சமாதானப் படுத்தும் நிகழ்வுக்காக எம்பெருமான் சிவன் ‘காளீஸ்வரன்’ எனும் திருநாமம் ஏற்று, இவ்விடம் வந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டதாகவும் சொல்கிறது, தலவரலாறு.

பின்னர் அம்பாள் கோபம் தணிந்து, இத்தலத்திலேயே எல்லை தெய்வமாக அருள்பாலித்தள். அவளைச் சமாதானப் படுத்த வந்த ஈசன் அருகில் தங்கிய இடத்தை ‘காளையார்கோயில்’ என்கின் றனர் பக்தர்கள். அதேபோல், அம்பாள் போர் புரிந்து வெற்றிபெற்ற இடம் ‘வெற்றியூர்’ எனவும்; வெற்றி பெற்று வந்த அம்பாளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஊர் ‘மாலை கண்டான்’ எனவும் அழைக்கப்படுகின்றன. முன்பு உக்கிரதேவதையாக இருந்த மாகாளியம்மன், தற்போது ‘உரல் சத்தம் கேட்காத, உலக்கு சத்தம் பிடிக்காத அளவுக்கு’ சாந்தசொரூபியாக மாறிப் போனாள் என்கின்றனர் ஊர்மக்கள்மழை வரம் தரும் மதுஎடுப்பு திருவிழா!

இங்கு ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் ‘மதுஎடுப்பு விழா’ வெகுவிமரிசையாக நடைபெறு கிறது. இவ்விழாவின்போது, இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆவணிமாதம் முழுதும் விரதம் இருந்து, வளர்பிறை ஒன்பதாவது நாளில், ஒரு குடத்தில் மஞ்சள் கரைத்த நீரைச் சேகரித்து, அதன் மேல் தென்னம் பாளைகளை வைத்து மதுக்கலயங்களைத் தயார் செய்கின்றனர். பின், ஊரின் பொது இடமான ‘சவுக்கை’ எனும் பகுதியில் மதுக்கலயங்களை வைத்து  கும்மியடித்து, கோயிலுக்கு எடுத்துச் செல்வார்கள்.

அப்படி, கோயிலுக்கு எடுத்து வரப்படும் மதுக்கலயங்களை பலி பீடத்தின் முன் படைத்துவிட்டு; அருகில் இருக்கும் ஊரணியிலிருந்து நீர் எடுத்துவந்து பலிபீடத்தை நீராட்டு கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம்  அந்த வருடம் முழுவதும் மழை பொழிந்து, காடு கரைகள் செழிக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

இங்கு ஆண்டுதோறும் ஆடிப் பூரத்தன்று சுமங்கலிப்பெண்கள் மஞ்சள் அரைத்து சமர்ப்பித்தும், அம்பாளுக்கு வளையல் சாத்தியும் வழிபடுகின்றனர். இதனால் மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி நாட்களில் சிறப்பு அலங்கார ஆராதனைகளும், விஜய தசமி அன்று அரக்கனை வதம் செய்யும் வைபவமும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தவிர, தை கடைசி வெள்ளியில் நடைபெறும் விளக்குபூஜையும் இங்கே விசேஷம்.

நியாயம் தங்கள் தரப்பில் இருந்தும், நீண்ட நாட்களாக முடியாத வழக்கு களால் அல்லல்படும் அன்பர்கள், இங்கு வந்து அம்பாளுக்கு சந்தன அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால், கூடியவிரைவில் நல்ல செய்தி வரும் என நம்பிக்கைப் பொங்க தெரிவிக் கின்றனர் ஊர்ப் பொதுமக்கள். `அம்பாளின் சந்நிதிக்கு நேராக பலிபீடம் இல்லாமல் சற்று தள்ளி அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பம்சம்' என்கின்றனர் பக்தர்கள். அதேபோல் வாயிலில் அம்பாளுக்கு இருபுறமும் துவார சக்தியராகத் திகழும் துவாரபாலகர்களுக்கு பதிலாக விநாயகரும் சுப்ரமணியரும் அருள்பாலிப்பதும் விசேஷ அம்சம்.

இக்கோயிலில், அருள்மிகு மாகாளியைத் தரிசிப்பதுடன் கன்னிமூல கணபதியையும், நாகர் சிலைகளையும் அவசியம் தரிசித்து வழிபட வேண்டும். இதனால் சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்.

மாகாளி அம்மனைத் தரிசிக்க வரும் அன்பர்கள், இவ்வூரில் அமைந்துள்ள வேலவாடி கருப்பர் கோயிலுக்கும் சென்று வழிபடுகிறார்கள்.  ஒரு காலத்தில் ஊரின் ஓர் எல்லையாக ‘மாகாளியம்மன்’ ஆலயமும், மறு எல்லையில் ‘வேலவாடி கருப்பர்’ ஆலயமும் இருந்தன. ஆனால், காலப்போக்கில் ‘மாகாளியம்மன்’ ஆலயத்தைச் சுற்றி இருந்த மக்கள் இடம்பெயர்ந்து, ‘வேலவாடி கருப்பர்’ ஆலயத்தைச்சுற்றி, குடியேறி உள்ளனர். எனவே, தற்போது இக்கோயில் ஊரின் மத்தியில் இருப்பது போல் மாறிவிட்டது. இந்த ஆலயத்தில், அரிவாள்களே  கருப்பரின் அம்சமாக வழிபடப்படுகின்றன.

தெய்வ சாந்நித்தியம் மிகுந்த இந்தத் தலத்துக்கு நீங்களும் ஒருமுறைச் சென்று மாகாளியைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; அன்னையின் அருளால் மகத்தான வாழ்வைப் பெறலாம்.




உங்கள் கவனத்துக்கு...

மூலவர்:  ஸ்ரீமாகாளியம்மன்

ஸ்தல விருட்சம்:
  வேம்பு
தீர்த்தம்:
செந்நீர் குளம்

பிரார்த்தனைச் சிறப்பு: நியாயம் தங்கள் தரப்பில் இருந்தும், இழுத்தடிக்கும் வழக்குகளால் பெரிதும் கலங்கித் தவிப்பவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து அம்பாளுக்கு சந்தன அபிஷேகமும், சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால், கூடியவிரைவில் நல்ல செய்தி வரும்; வழக்கில் வெற்றி கிட்டும்.

எப்படிச் செல்வது? சிவகங்கை மாவட்டம், கல்லல் ரயில் நிலையத்தில் இருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது ‘ஆலம்பட்டு’.  இங்கு முத்துநகர் என்னும் பகுதியில் வனாந்தரத்தில் அமைந்திருக்கிறது ஆலயம். எனவே, வெளியூர் பக்தர்கள் கல்லல் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் பயணித்து, கோயிலை அடையலாம்.

நடை திறக்கும் நேரம்: கோயில், ஊரின் எல்லையில் இருப்பதால், பக்தர் களின் அழைப்புக்கு ஏற்ப கோயிலைத் திறந்து வழிபாடு நடத்த உதவுகிறார் அர்ச்சகர் (தொடர்புக்கு: 9585907761; 9942210972).

Comments