சிவ புண்ணியங்கள்!

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள், திருநெல்வேலி சிவாலயத்தில் அருளும் முருகப் பெருமானைத் துதித்து மிக அற்புதமான பதிகத்தை அருளியுள்ளார். அதில் எட்டாவதாக ஒரு பாடல்:
பூவளங் கொண்டொழுகச் சிவ புண்ணியந் தான்றழைக்கத்
தாவற வேதினமு நல்ல தாம்பிர வன்னியெனும்
ஆவகை தான்பெருகு நெல்லை யப்பர் விமான முறை
வீவி லயிற்கரனே யென்றன் வேண்டலைப் பூர்த்திசெய்யே!


இந்தப் பாடலில் பாம்பன் சுவாமிகள் ‘சிவபுண்ணியம்தான் தழைக்க’ என்று குறிப்பிட்டு வேண்டுகிறார். நாம், இந்த சிவ புண்ணியங்கள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா...

* ஆலயத்தைக் கட்டுவது, நிர்மாணிப்பது.

* கோயிலில் மகாதேவரின் விக்கிரகங்கள், லிங்கங்கள், விநாயகர், பார்வதி தேவி, சண்முகர், விநாயகர், பைரவர், சிவபக்தர்களான கணங்கள் ஆகியோருக்கு உரிய சந்நிதிகள், கொடுங்கைகள், அட்டாலங்கள் முதலானவற்றுடன் சிவாலயத்தை நிர்மாணிக்க வேண்டும். இதற்கான பணச் செலவை பொருட்படுத்தக்கூடாது.

* இவற்றில் தாமிரத் தங்கம், கல்லால் ஆன பிரதிமைகளை பக்தியோடு செய்து நியமத்தோடு பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

* இந்தச் சிலைகளுக்கு அபிஷேகமும் அலங்காரமும் செய்து வஸ்திரம், சந்தனம், நைவேத்தியம் அளித்து, ஒளிவீசும் தீபங்களை சந்நிதியில் ஏற்றி, பிறகு மற்ற உபசாரங்களைச் செய்ய வேண்டும்.

* இந்தக் கோயிலுக்குச் சொந்தமாகப் பசுக்களையும், நிலத்தையும் மலர் வனத்தையும் வழங்க வேண்டும்.

 இந்தக் கோயிலில் பசுக்களை பாதுகாக்கும் செலவையும் மற்ற செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

* பின்னர் இந்தக் கோயிலுக்காக ஓடைகள், குன்றுகள், கிணறுகள், மரங்கள் ஆகியவற்றை உண்டாக்க வேண்டும்.

* வாகனங்கள், ரதம் ஆகியவற்றை உண்டாக்கி தேர், தெப்பம் போன்ற திருவிழாக்களையும் உற்சவங்களையும் நடத்த வேண்டும்.

* மேலும் சிதிலம் அடைந்த கோயில் களைப் பழுதுபார்த்துச் செப்பனிட்டு, அதை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும்.

* கோயில் அர்ச்சகர் வசிக்க வீடு அளிப்பதுடன், அவருக்குத் தேவையான தானியங்களும், பொருட்களும் கொடுக்க வேண்டும்.

* குருவைப் பார்த்ததும் நமஸ்கரிக்க வேண்டும். பின்னர் அவருக்கு உரிய பணிவிடைகளைக் குறைவின்றிச் செய்ய வேண்டும்.

* சிவ பக்தருக்கு வீடும், வேண்டிய பொருளும் கொடுக்க வேண்டும். அவர்களுக்குச் சிவபுராணம், ருத்ராட்சங் கள், சிவலிங்கங்கள், அன்ன ஆபரணங் கள் ஆகியவற்றை பக்தியோடு கொடுக்க வேண்டும்.

* அவர்களைப் பார்த்ததும் பக்தியோடு வணங்கி, அவர்களிடம் பிரியத்துடனும் அன்புடனும் பேசி அவர்கள் மனம் குளிரும்படி நடக்க வேண்டும். அவர்களுக்கு இயன்றளவு உதவிகளை வாக்கு, மனம், உடல், பணம் ஆகியவற்றால் செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக் கூடாது.

இவைதான் சிவ புண்ணியங்கள். சிவதர்மோத்திரம், திருமந்திரம் முதலான ஞானநூல்கள் கூறும் இத்தகைய புண்ணிய காரியங்களைச் செய்பவர்கள், சகல போகங்களையும் அனுபவித்து, சிவலோகம் சென்று முக்தி பெறுகிறார்கள்.

- முருகனடிமை

Comments