பல்லக்கு சுமந்தவனின் பரதத்துவம்!

ரஹுகணன் என்கிற அரசன் தத்துவ உபதேசம் பெறுவதற்காகக் கபில முனிவரின் ஆசிரமத்துக்குப் பல்லக்கில் புறப்பட்டுக் கொண்டிருந்தான். பல்லக்குத் தூக்கிகளில் ஒருவன் அன்று உடல் நலம் குன்றியதால் ஓய்வெடுக்கப் போய்விட்டான்.
தூரத்தில் வயலில் ஒரு மனிதன் காணப்பட்டான். திடகாத்திரமாயிருந்த அவனைப் பல்லக்கு சுமக்க அழைத்தனர். அவனும் ஒப்புக்கொண்டு பல்லக்கு சுமக்க ஆரம்பித்தான். ஆனால், அவன் நடை வேகத்துக்கு மற்றவர்களால் ஈடு கொடுக்க முடியாததால் பல்லக்கு ஆட்டம் காண ஆரம்பித்தது.
அரசன் கேட்டதற்கு, புதியவன் தாறுமாறாகப் போவதால் பல்லக்கு ஆட்டம் காண்கிறது" என்றார்கள். இயற்கையில் நல்லவனேயான ரஹுகணனுக்குத் தான் அரசன் என்கிற அகந்தை இருந்தது. அவன் பல்லக்கு சுமப்பவனைக் குறித்து, நீ ஒருவனே பல்லக்கு சுமக்கிறாய்; நெடுந்தூரம் வந்திருக்கிறாய்! அதனால் களைத்து, இளைத்திருக்கிறாய்" என்று மறை முகமாக அவனுடைய சரீரத்தைச் சுட்டிக் காட்டி ஏளனம் செய்தான்.
புதியவன் பதில் சொல்லவில்லை. பல்லக்கு மட்டும் முன்போலவே ஆட்டம் கண்டுகொண்டே இருந்தது. அரசன் கோபம் கொண்டு, நான் இந் நாட்டு அரசன் சொல்கிறேன். பல்லக்குத் தூக்கி நீ! என் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத உன்னைத் தண்டிக்கிறேன்" என்று கோபப்பட்டான்.
இதைக் கேட்ட அந்த மனிதனுக்குக் கோபம் வர வில்லை. சாந்தமாக பதிலளித்தான், அரசே! நான் பல்லக்கு சுமக்கவில்லை; எனக்கு இளைத்தலோ பெருந்தலோ கிடையாது! நான் பல்லக்கு சுமப்பவனும் இல்லை; நீ அரசனும் இல்லை" என்றான்.
இந்த வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்த அரசன் பல்லக்கிலிருந்து இறங்கி அம்மனிதனைப் பார்த்தான். அவன் உடலிலிருந்த பூணூலையும், முகத்தில் தெரிந்த அறிவுச் சுடரையும் பார்த்து எண் சாண் கிடையாகத் தரையில் விழுந்து வணங்கினான்.
சுவாமி! என்னை மன்னித்து விடுங்கள்! ஞானியான அந்தணரை அவமதித்த பாவம் என்னைச் சேரும் என அஞ்சுகிறேன். தங்கள் பேச்சுக்கள் என் மனத்தில் ஐயங்களை எழுப்பியுள்ளன. தாங்கள் சொன்னது அனைத்தும் என் கண்ணால் பிரத்யக்ஷமாகக் கண்டவற்றை மறுக்கின்றன! தயவுசெய்து தங்கள் வார்த்தைகளின் உள்ளர்த்தம் என்னவென்பதை விளக்குங்கள்" என்று பணிவுடன் வேண்டினான்.
அந்தணர் இந்த வினாவுக்கு விரிவான பதிலைச் சொல்கிறார்: பல்லக்கை நான் சுமக்கவில்லை; என் தேஹம் சுமக்கிறது. தேஹம் வேறு, ஜீவன் வேறு.
தேஹம் கணத்துக்குக் கணம் மாறிக் கொண்டேயிருந்து, குழந்தைப் பருவம், யௌவனம், முதுமை என்ற கட்டங்களைக் கடந்து, முடிவில் பஞ்சபூதங்களில் கலந்து விடுகிறது. ஆனால், ஜீவன் அழிவற்றது! என்னையும், என் உடலையும், பல்லக்கையும் அதில் அமர்ந்துள்ள உங்களையும் பூமி சுமக்கிறது! பூமியை யார் சுமக்கிறார்கள்?
விஞ்ஞான ரீதியாக அணுக்கள் சுமக்கின்றன எனலாம்; ஆனால், ஜடப்பொருளான அணுதானாக இயங்காது. அதை இயக்குபவன் அணுவைக் காட்டிலும் நுண்ணியதாக இருந்து அதை இயக்கும் சைதன்யம். இதையே அணோரணீயன் என்று ஞானிகள் போற்றுகின்றனர்! அனைத்தையும் தாங்கும் சைதன்யமே கடவுள்! அதனாலேயே அவனுக்குத் தர்மன் (தாங்குபவன்) என்ற பெயர் வந்தது.
அடுத்து, நீங்கள் அரசாள்பவர் இல்லை என்றேன். உண்மையே! நீர் சிந்துசௌ வீர நாட்டுக்கு மட்டும் அரசன்! உம்மைவிடப் பெரிய அரசர்கள் உள்ளனர்! எல்லோரையும் ஆள்பவன் பகவான். அவனே உண்மையான ஆண்டவன்!
தேஹாபிமானத்தினால் நாம் அஹங்காரம், மமகாரங்களை வளர்த்துக் கொண்டு துன்பங்களுக்கு ஆளாகிறோம்! நான் ஒரு மான் குட்டியின் மேல்வைத்த மமகாரத்தினால் மானாகப் பிறந்தேன்; ஆனால், நீண்ட காலம் செய்த பகவத் சேவையினால் பூர்வ ஜன்ம நினைவு வந்து பச்சாதாபப்பட்டதால் மானின் உடலை விட்டு இந்த உடம்பில் இருந்து கொண்டு அஹங்கார, மமகாரங்களைத் துறந்து கடவுள் சிந்தனையிலேயே இருக்கிறேன்" என்றார் ஜடபரதர் என்ற அந்த மஹா ஞானி. அரசன் ரஹுகணன் தெளிவடைந்து ஆன்மீக மார்க்கத்தில் பயணிக்க ஆரம்பித்தான்.
நான் யார்?
விசிஷ்டரின் பர்ண குடீரம். எங்கெங்கும் அமைதி! உள்ளே வசிஷ்டர் யோக வாசிஷ்டத்தை எழுதிக் கொண்டிருந்தார். யாரும் குறுக்கிடக்கூடாது என்று குடிலின் கதவை மூடியிருந்தார் வசிஷ்டர்.
கதவை யாரோ மெதுவாக, மிக மெதுவாகத் தட்டினார்கள்.
யாரது?" என்ற வசிஷ்டரின் கேள்விக்கு மௌனமே பதில்!
மறுபடியும் கதவு தட்டப்பட்டது; மறுபடியும் யார் தட்டுவது என்ற வசிஷ்டரின் கேள்விக்குப் பதில் இல்லை! இப்படியே மூன்று முறை நடந்தது.
நான்காம் தடவை கதவு தட்டப்பட்டது. வசிஷ்டரே எழுந்து வந்து கதவைத்திறந்தார். அங்கு ஸ்ரீராமன் நின்றிருந்தான்!
அவ்வளவு முறை நீ யார் என்று கேட்டும் ஏன் பதில் சொல்லவில்லை?" என்று வியந்தார் வசிஷ்டர்.
ஸ்ரீராமன், குருதேவா! நான் யாரென்பது எனக்கே தெரியாது; அதை அறிந்து கொள்ளவே தங்களை நாடி வந்திருக்கிறேன்! எனக்கு ஞானத்தை அருளுங்கள், சுவாமி!" என்று குருவின் அடிபணிந்தான் ஸ்ரீராமன்.
மனிதனாக அவதரித்த ஸ்ரீராமனே தன்னை அறி வதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று வழிகாட்டிய வரல்லவா?


சாமர்த்தியம்!
ஒரு சமயம் ஸ்ரீதேவிக்கும் (மகாலட்சுமி), மூதேவிக்கும் இடையே, ‘தங்களில் யார் அழகு’ என்ற பிரச்னை எழுந்தது. இதில் எதிர்பாராமல் சிக்கிக் கொண்டார் ஒரு கோமுட்டி செட்டியார்.
இருவரும், நீங்கள்தான் நடுவராக இருந்து இதற்குத் தீர்ப்பு சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்கள்.
திணறினார் செட்டியார். யார் ஒருவரை அழகு என்று சொன்னாலும் மற்றவருக்குக் கோபம் வரும். இதனை எப்படிச் சமாளிக்கலாம் என யோசித்தார்.
மகாலட்சுமியிடம் சிறிது தூரம் சென்று நடந்து வரச் சொன்னார். பிறகு மூதேவியிடம், இருந்த இடத்தி லிருந்து நடந்து போகச் சொன்னார்.
முடிவாக மகாலட்சுமியிடம், நீங்கள் வருவது அழகாக இருக்கிறது" என்றும், மூதேவியிடம், நீங்கள் போவது அழகாக இருக்கிறது" எனவும் கூறிச் சமாளித்தாராம்.
இதுதானே நடைமுறை வழக்கமும்கூட. மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்று, எப்போதும் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதேசமயம், மூதேவியை நமது இல்லத்திலிருந்து விரட்டியடிக்கத் துடிக்கிறோம். சரிதானே!

Comments