செவ்வாய் தோ௸ம் நீக்கும் ஸ்ரீமொகிலீஸ்வரர்

திருமால் மற்றும் பிரம்மாவுக்குள் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட, அவர்களின் முன்பு வானளாவிய தீப்பிழம்பாகத் தோன்றினார் சிவபெருமான், ‘எவர் தன்னுடைய திருவடி மற்றும் திருமுடியை முதலில் காண்கிறாரோ அவரே உயர்ந்தவர்’ என்று ஈசன் கூற, திருமால் பன்றியாகவும், பிரம்மா அன்னமாகவும் மாறி அடி, முடியைத் தேடிச் சென்றதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவபெருமானின் திருவடிகளைக் காண முடியாமல் திருமால் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டார். பிரம்மா, ஈசனின் முடியைத் தேடி அன்னமாக மேலே பறந்து சென்ற போது, சிவபிரானின் முடியிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்த ஒரு தாழம்பூவிடம், தான் ஈசனின் திருமுடியைக் கண்டதா பொ சாட்சி உரைக்கக் கேட்டுக் கொண்டார். உண்மையறிந்த சிவபெருமான் தன்னுடைய பூஜைக்குரிய மலர்களிலிருந்து தாழம்பூவை அகற்றினார். அதோடு, பிரம்மனுக்கும் கோயில் இல்லாமல் போனது.
இந்தப் புராண நிகழ்வைப் பிரபதிலிக்கும் வகையில்தான் சிவாலயக் கருவறையின் பின்புறம் மேற்கு நோக்கி, கோஷ்டத்தில் லிங்கோற்பவமூர்த்தி பிரதிஷ்டை செயப்பட்டுள்ளார். ஒரு லிங்க வடிவுக்குள் கிரீடத்தின் மேல் பகுதியும், பாதங்களும் மறைந்த நிலையில் சிவபெருமானும், கீழே பன்றி வடிவில் திருமாலும், மேலே அன்ன வடிவில் பிரம்மனும் இருப்பதைக் காணலாம். ஒருசில சிற்பங்களில் தாழம்பூவும் காட்டப்பட்டிருக்கும். மகாசிவராத்திரி நாளன்று லிங்கோற்பவகாலத்தில் இந்த மூர்த்திக்கு சிறப்பு ஆராதனைகள் செயப்படுகின்றன. சிவ அபராதப்பட்ட பிரம்மா, தன் சாபம் நீங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில்
சிவசர்மா என்ற அந்தணராகப் பிறந்து இறைவன் ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரரை வழி பட்டு, சாபவிமோசனம் பெற்றதாக விரிஞ்சிபுரம் ஆலயத்தல வரலாறு.
இந்தப் புராண வரலாறின் அடிப்படையில் அமைந்த இன்னொரு தலம், தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், ஜராசங்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கேதகீ சங்கமேஸ்வரர் ஆலயம். தாம் தவம் செய்யும் பொருட்டு பிரம்மா தேர்ந்தெடுத்த இந்த இடம் அக்காலத்தில் தாழைக்காடாக இருந்ததால் கேதகி வனம் (வட மொழியில் கேதகி தாழம்பூவைக் குறிக்கும்.) தெலுங்கு மொழியில் மொகிலி (தாழை) வனம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிரம்மாவுக்கும் தாழம்பூவுக்கும்
சிவபெருமான் சாபவிமோசனம் அளித்து, தாழை மலரை (மொகிலிப் பூவை) தன் பூஜைக்கு உகந்த மலராக ஏற்றுக் கொண்டு அருள்புரிந்தாராம். சிவபெருமானின் அன்றாட பூஜையில் தாழம்பூ இடம் பெறுவது இத்தலத்தின் தனிச் சிறப்பு. தாழை வனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதால் சிவபெருமானுக்கு, ‘கேதகி சங்கமேஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
சிவலிங்கப் பிர திஷ்டை செய்து, பிரம்மா சாப விமோசனம் பெற்ற இன்னொரு புனிதத் தல மாக ஆந்திர மாநிலம்,
சித்தூர் மாவட்டத்தில் உள்ள மொகிலி கருதப்படுகிறது. அக்காலத்தில் இது, ‘மொகிலிவாரிப்பல்லே’ என்று அழைக்கப்பட்டது. தாழையின் பெயரிலேயே இந்தக் கிராமத்தின் பெயர் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ‘தட்சிண கைலாசம்’ என்று போற்றப்படும் இத்தலத்தில் சிவபெருமான் ஸ்ரீ மொகிலீஸ்வரர் (தாழைவன நாதர்) என்ற பெயரில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஒரு தாழைப்புதரின் கீழ் சுயம்பு வாக இருந்த சிவலிங்கத்தை மொகிலியப்பா என்ற விவசாயி கண்டெடுத்துப் பிரதிஷ்டை செய்ததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது. அதன் பின்னர் மிளகு வியாபாரி ஒருவரால் இந்த ஆலயம் எழுப்பப்பட்டதாம்.
தற்போதுள்ள ஆலயம் இப் பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
பின்னாளில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் எந்த விதமான மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படாமல் பழைய சோழர் காலப் பாணியிலேயே ஆலயம் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. கோபுரம், முக மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என ஆலயம் அமைந்திருக்க, கருவறையில் லிங்க வடிவில், ஸ்ரீ மொகிலீஸ்வரர் ஆவுடையின்றி அருள் பாலிக்கிறார். ஆலயவளாகத்தில் தேவி காமாட்சிக்கும், பரிவார தேவதைகளான விநாயகர், பைரவர், சுப்பிரமணியர், மகாவிஷ்ணு, உமா சகித சந்திரசேகரர், ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி ஆகியோருக்கும்
சன்னிதிகள் உள்ளன. இங்குள்ள வீரபத்திரர் சிற்பம் கலை நுணுக்கம் மிக்கது. இதில் வீரபத்திரரின் அருகில் ஆட்டுத் தலையுடன் தட்சன் காட்சி தருகிறான்.
ஆலயத்துக்கு வெளியே சிவபெருமான் தன் திரிசூலத்தால் ஏற்படுத்திய திரிசூல தீர்த்தத்தில் ஒரு நந்தியின் வாய் வழியாக எப் போதும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது. கடுமையான கோடை காலத்திலும் இந்த புஷ்கரணியில் தீர்த்தம் இருப்பது இதன் சிறப்பு. இதற்கு பஞ்சலிங்க தீர்த்தம், பாவன தீர்த்தம் போன்ற பெயர்கள் உள்ளன.
மேலும், ஆலய வளாகத்தில் நாரணப்பா என்ற நாராயண யதீந்திரர் சன்னிதியைக் காணலாம். ‘நாராயண தாத்தயா’ என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட வளையல் வியாபாரியான இந்த யோகி, கர்நாடக மாநிலம், சிக்க பல்லாப்பூர் மாவட்டம், கைவாராவில் அவதரித்து, தெலுங்கு, கன்னட மொழிகளில் பல அரிய நூல்களை இயற்றியவர்.
வளையல் வியாபாரத்துக்காக ஒருமுறை மொகிலிக்கு வந்த இவர், கடும்மழை பொழியவே மொகிலி வேங்கடகிரி பள்ளத்தாக்கில் ஒதுங்கினார். இறைவனை நினைத்து தியானம் செய்த அவர் முன்பு பரதேசி சுவாமிஜி தோன்றி அஷ்டாட்சர உபதேசம் செய்ய, அவர் ஊர் திரும்பி சன்னியாசம் மேற்கொண்டார். கைவாராவில் இவரது சமாதி உள்ளது. மொகிலிக்கு வந்து உபதேசம் பெற்றதால் ஸ்ரீ மொகிலீஸ்வரர் ஆலயத்தில் இவருடைய சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.
சிவராத்திரியையொட்டி நடைபெறும் பிரம்மோத் ஸவத்தையொட்டி, இந்த ஆலயத்துக்கு ஆந்திரா தவிர, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். ஸ்ரீ ஆதிசங்கரர் வந்திருந்ததாகக் கூறப்படும் இந்த ஆலயத்தில் சர்ப்பதோஷம், செவ்வாய் தோஷம், புத்திர பாக்கியம் போன்றவற்றுக்கு பரிகார பூஜைகள் செயப்படுகின்றன.
அமைவிடம்: சித்தூரிலிருந்து சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் 25 கி.மீ., திருப்பதியிலிருந்து சுமார் 90 கி.மீ.
தரிசன நேரம்: காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை.

 

Comments