மூத்தவருக்கு மூத்தவர்!

வேலனுக்கு மூத்தவர், விநாயகப் பெருமான். அவருக்கும் மூத்தவர் எவரேனும் இருக்க முடியுமா? இருக்கிறார்... அவரும் அவரேதான்!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகே உள்ளது ஆலகிராமம். இந்த ஊரில் இருக்கும் `எமதண்டீஸ்வரர்’ ஆலயத்தில் அருள்பாலிக்கிறார் ஒரு பிள்ளையார். ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த- ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பமாகக் காட்சி தருகிறார் இந்த விநாயகர். கிட்டத்தட்ட 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலை; கலைநயமும் நேர்த்தியும், தெய்விகாம்சமும் ஒருங்கே அமைந்த அற்புத வடிவம். பார்த்தவுடனேயே, நம்மைத் தலையில் குட்டிக்கொண்டு தோப்புக் கரணமும் போடவைத்துவிடுகிறார்.  `இவர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு மூத்தவர்’ என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.

கோயில் நிர்வாகி சுந்தரமூர்த்தியிடம் பேசினோம். ``ஆலகிராமத்திலுள்ள விநாயகர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. வாதாபியில் இருந்து நரசிம்மவர்மன் விநாயகர் சிலையைக் கொண்டுவந்த காலத்திலிருந்துதான் தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இங்கு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் யாவும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. எனவே, அதற்கும் முன்னரே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. இந்தச் சிற்பம், 75 செ.மீ உயரமும் 40 செ.மீ அகலமும் கொண்ட நீண்ட கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிள்ளையார் பீடத்தில் 3 வரிகளில் `பிரமிறை பன்னூற - சேவிக - மகன் - கிழார் - கோன் - கொடுவித்து’ என வட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்தின் வடிவம் பூளாங்குறிச்சி எழுத்து வடிவத்துக்குப் பின்னரும், பிள்ளையார்பட்டி குடவரைக் கோயிலின் கல்லெழுத்து வடிவத்துக்கு முந்தையதுமாக இருக்கிறது. எனவே, இந்த விநாயகர் சிற்பம், கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டது என்றே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்” என்றார் சுந்தரமூர்த்தி.

விநாயகமூர்த்திக்கு உலகெங்கும் எத்தனையோ சிற்பங்கள். அத்தனைக்கும் எத்தனையோ சிறப்புகளும் உள்ளன. அவ்வகையில் ஆலகிராமத்தில் உள்ள விநாயகர், பழம்பெருமை மிக்கவராக தனித்துவம் வாய்ந்தவராகத் திகழ்கிறார்!

Comments