ஆஞ்சநேயர் காப்பாற்றுவார்!

ங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் நான் பிரத்தியட்சமாகி அருள்புரிவேன்’ என்பது ஆஞ்சநேயரின் வாக்கு. ஆஞ்சநேயர் பல தோற்றங்களில் காட்சி தருகிறார். அத்தகைய தோற்றங்களில் தனிச்சிறப்பு கொண்டது பஞ்சமுக ஆஞ்சநேயர் திருவடிவம். ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு.

ராம - ராவண யுத்தத்தில் ராவணன் தோல்வி அடையப்போகும் நிலையில் அவனைக் காப்பாற்ற மயில்ராவணன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகம் தடங்கல் இல்லாமல் முடிந்துவிட்டால், ராம லட்சுமணர்கள் அழிந்துவிடுவார்கள். எனவே, அவனுடைய யாகத்தைத் தடுத்து நிறுத்த ஆஞ்சநேயர் விரும்பினார். ராமபிரானின் உத்தரவு பெற்று மயில்ராவணனின் யாகத்தைத் தடுக்கப் புறப்பட்ட ஆஞ்சநேயர், நரசிம்மர், வராகர், கருடன், ஹயக்கிரீவர் ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார். அவர்களும் தங்களுடைய சக்திகளை ஆஞ்சநேயருக்கு வழங்கியதுடன், அவருடைய முகங்களாகவும் திகழ்ந்தனர். இதுவே ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்த புராணம்.

ஆஞ்சநேயர் பஞ்சமுகங்களுடன் காட்சி தரும் ஆலயம் திண்டிவனம் - பாண்டிச்சேரி சாலையில் உள்ள பஞ்சவடி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. மிகவும் வரப்பிரசாதியான ஆஞ்சநேயர் வேண்டிய வரங்களை வேண்டியபடியே அருள்பவர். பல பக்தர்களின் தீராத கஷ்டங்களையும் போக்கி அருள்புரிந்தவர். இவர் நிகழ்த்திய அருளாடல் ஒன்றை ஆலயத்தின் மேனேஜிங் டிரஸ்டியான எம்.கோதண்டராமன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரின் வாழ்க்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சநேயர் அருள்புரிந்துள்ளார். அவருக்கு ஒருநாள் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும், உடனே அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறிவிட்டார்கள்.ஆனாலும், அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிவது சந்தேகம் என்றும் கூறிவிட்டார்கள். மறுநாள் அவருக்கு அறுவைச் சிகிச்சை என்று முடிவு செய்யப்பட்டது.


உறவினர்கள் கலக்கமுடன் இருந்த நிலையில், அறக்கட்டளை உறுப்பினர் சற்றும் கலக்கம் கொள்ளவில்லை. தன்னை பஞ்சவடி ஆஞ்சநேயர் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையுடன் கூறிவிட்டார். மறுநாள் டாக்டர்கள் தயங்கியபடியேதான் அறுவைச் சிகிச்சை செய்தனர். என்ன ஆச்சரியம்?! டாக்டர்கள் பயத்துடனும் சந்தேகத்துடனும் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, அறக்கட்டளை உறுப்பினர் இன்று முன்பை விடவும் சுறுசுறுப்பாக ஆலயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அவரைப் போலவே எண்ணற்ற பக்தர்கள் பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டு, அருள் பெற்றுச் செல்கின்றனர்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Comments