மஹா பெரியவா... மஹா ருத்ராபிஷேகம்!

லக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் நேரங்களில், துன்பம் போக்கி அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படுத்தவுமே இறைவனின் அம்சமாக மகான்கள் விண்ணிருந்து மண்ணிறங்கி வருகின்றனர். அப்படி நம் புண்ணியபூமியில் எண்ணற்ற மகான்கள் அவதரித்து உள்ளனர். அதனால்தான் ஸ்ரீதியாகையர், ‘எந்தரோ மஹானுபாவலு அந்தரிகி வந்தனமு’ என்று பாடி இருக்கிறார்.

மகான்களின் அவதார தினத்துக்கு உள்ள சிறப்பைவிடவும், அவர்களுடைய ஆராதனை தினம் பலமடங்கு சிறப்பு வாய்ந்தது. காரணம், நம்முடைய நன்மைக்காக அவர்கள் எந்தப் பரம்பொருளின் அம்சமாக அவதரித்தார்களோ, அந்தப் பரம்பொருளிடமே சென்று ஐக்கியமாகி விடுகின்றனர். ஆனாலும், அவர்களுடைய அருள் திறமானது சூட்சுமமாக எங்கும் வியாபித்து இருப்பதுடன், அவர்களுடைய சந்நிதி நாடி வரும் எண்ணற்ற பக்தர்களுக்கு சந்தோஷமும் சாந்தியும் தருகின்றது.

அப்படித்தான், இந்தக் கலியில் நாம் படும் துன்பங்கள் அனைத்தையும் போக்கிட கயிலை நாயகனின் அம்சமாக அவதரித்தவர் காஞ்சி மஹா பெரியவா.

நடமாடும் தெய்வமாக எல்லோராலும் போற்றி வணங்கப்பட்ட மஹா பெரியவா, ‘பிரார்த்தனை என்பது நம்முடைய தேவைகளைப் பெறுவதற்கான விண்ணப்பம் அல்ல’ என்று உபதேசித்து இருந்தாலும், தம்மை தரிசித்து வழிபடுபவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே அனைத்து நலன்களையும் அருளவே செய்கிறார்.

ஆம். அவர் ஸ்தூல சரீரத்துடன் இந்த பூமியில் உலா வந்த காலத்தில் மட்டுமல்ல, கயிலை சங்கரருடன் சங்கமித்த பிறகும் எண்ணற்ற பக்தர்களுக்கு அருள்புரிந்த வண்ணம் இருக்கிறார். இன்றைக்கும் அவருடைய அருளாடல்கள் பல பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, நம்முடைய நன்மைக்காக அவர் நீண்ட நெடிய தவ வாழ்க்கை மேற்கொண்ட தேனம்பாக்கம் திருத்தலத்தில் அவருடைய பரிபூரண சாந்நித்யத்தை, அருள்திறனை பக்தர்கள் பலரும் அனுபவித்து உணரவே செய்கிறார்கள்.

நம்பிக்கையுடன் தன்னைச் சரண் அடையும் அடியவர்களுக்கு அவர்கள் வேண்டியதை வேண்டியபடி அருளும் மஹா பெரியவா ஆராதனை வைபவம், தேனம்பாக்கம் ஸ்ரீசிவாஸ்தானம் திருத்தலத்தில்  நடைபெற இருக்கின்றது.

21-ம் தேதி முதல் 23-ம் தேதி முடிய ஸ்ரீருத்ர ஜபமும், 24-ம் தேதி ஸ்ரீமகா ருத்ர ஹோமமும் நடைபெற இருக்கின்றது. மஹா பெரியவா ஆராதனை தினமான 25-ம் தேதியன்று ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கும் ஸ்ரீமஹா பெரியவாளுக்கும் மஹா ருத்ர அபிஷேகமும் மஹா பெரியவா ஆராதனை வைபவமும் நடைபெற இருக்கின்றன. பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் அருளுடன் மஹா பெரியவா கருணா கடாட்சத்தையும் பெற்று சிறப்புற வாழலாம்.

Comments