துர்வாசரை துரத்திய விஷ்ணு சக்கரம்!

திருவாரூர் மாவட்டம், குடவாசலுக்குக் கிழக்கே குடமுருட்டி ஆற்றின் வடகரையில், ஆவணம் பருத்தியூரில் அமைந்துள்ளன ஸ்ரீபிரசன்ன பார்வதி உடனுறை நஞ்சழித்தநாதர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீமஹாலட்சுமி உடனுறை ஆதிவரதராஜப்பெருமாள் திருக்கோயில்கள்.
‘பரிதி’ என்றால் சூரியன். சூரிய பகவான், சிவபெருமானை வழிபட்டு, அருள் பெற்ற திருத்தலம் இங்குள்ள சிவன் கோயில்.
ஒருமுறை சூரிய கிரகணத்தின்போது, ராகு சூரியனை மறைக்கச் சென்றான். அப்போது சூரியனின் கதிர்கள் ராகுவை தகிக்கச் செய்தது. இதனால் கோபம் கொண்ட ராகு, நச்சுக் காற்றை உமிழ்ந்து கொண்டு சூரியனை மறைத்தான். ராகுவின் நச்சுக் காற்றால் சூரியனின் முகம் கருமையடைந்து விட்டது. இழந்த பொலிவை மீண்டும் பெற, சூரிய பகவான் இத்தலத்தில் குடமுருட்டி ஆற்றின் வடகரையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கடுந்தவம் இயற்றி வழிபட்டான். அவனது தவத்தில் மகிழ்ந்த ஈசன் அம்பிகையுடன் சூரியனுக்குக் காட்சி தந்தார்.
அன்னை பார்வதியும் ஈசனும், மலர்ந்த முகத்துடன் தமது அருட்பார்வையை சூரியனின் மீது செலுத்த, அவனது முகத்தில் படர்ந்திருந்த கருமை நீங்கி, மீண்டும் பொலிவுடன் கூடிய மலர்ந்த திருமுகத்தைப் பெற்றான் சூரியன்! இதனால் அன்னை பார்வதிக்கு, ‘பிரசன்ன பார்வதி’ எனும் திருப்பெயர் ஏற்பட்டது. பிரசன்னம் என்றால் மலர்தல் என்று பொருள். ராகுவின் நச்சுக் காற்றால் ஏற்பட்ட கொடுமையை இத்தலத்து ஈசன் அழித்ததால், ‘நஞ்சழித்தநாதர்’ என்று பெயர் பெற்றார். அப்பெயரே வடமொழியில், ‘விஷ ஹரேஸ்வரன்’ என்று வழங்கி வருகிறது.
‘எமது அருள் பெற்று பொலிந்து விளங்கியதால் உன்னுடைய பெயரால் இத்தலம் ‘பரிதியூர்’ என்று வழங்கப்படும்’ என்று கதிர வனிடம் கூறியருளினார் ஈசன். அப்பெயரே மருவி, பருத்தியூர் என்று வழங்கி வருகிறது. சூரியனிடம் கடுமையாக நடந்து கொண்ட தனது செயலுக்காக வருந்திய ராகு, ஈசனிடம் மன்னிப்புக் கோரியதோடு, ‘இத்தலத்தில் இனி, பாம்பின் விஷம் எவரையும் பாதிக்காது’ என்ற உறுதிமொழியையும் பகர்ந்தான்.
இக்கோயிலின் மேற்கே அமைந்துள்ளது ஸ்ரீமஹா லட்சுமி உடனுறை ஆதி வரதராஜப்பெருமாள் திருக்கோயில். இவ்விரு கோயில்கள் அமைந்துள்ள வடக்குத் தெருவின், வடக்குப் பக்கத்தில் மட்டுமே வீடுகள் உள்ளன. இப்படி, தெருவின் ஒருபுறம் வீடுகள் இல்லாததன் காரணமே, இத்தலத்தின் வரலாறாகவும் அமைந்துள்ளது விசேஷம்.
மன்னன் அம்பரீஷன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் திருமாலுக்கு உகந்த ஏகாதசி விரதத்தை, தவறா மல் அனுஷ்டித்து வந்தான். ஓர் ஏகாதசி நாளில் துர்வாச முனிவர் அம்பரீஷனின் அரண்மனைக்கு வருகை தர, மன்னன் அவரை வரவேற்று அன்று அரண்மனையில் தங்கி, அடுத்த நாள் துவாதசியன்று தன்னுடன் உணவு அருந்தும்படி வேண்டினான். மன்னனின் வேண்டுகோளை ஏற்ற துர்வாசர், அடுத்த நாள் காலை நீராடி வர நதிக்கரைக்குச் சென்றார். முனிவர் திரும்ப நேரமாகி விட்டது. அதோடு ஏகாதசி முடிந்து, துவாதசி தொடங்கி விட்டதை உணர்ந்த மன்னன், துளசி தீர்த்தத்தை மட்டும் அருந்தி விரதத்தை முடித்துக் கொண்டான். மன்னன் அவ்வாறு செய்தது, தன்னை விடுத்து உணவு அருந்தியதற்குச் சமம் என்று கருதிய துர்வாசர், கோபம் கொண்டு ஒரு பூதத்தைப் படைத்து அம்பரீஷனைத் தாக்கச் செய்தார்.
மன்னன் பூதத்துக்கு அஞ்சாமல் திருமாலைப் பணிய, பெருமாள் மன்னனைக் காத்திட தனது சுதர்சன சக்கரத்தை ஏவினார்! அது பூதத்தை அழித்ததோடு, துர்வாசரையும் துரத்தியது. துர்வாசர் திருமாலிடம் சரண் அடைந்தார். திருமால், எமது பக்தன் அம்பரீஷன் உம்மை மன்னித்தால் மட்டுமே சக்கரம் எம்மிடம் திரும்பும்" என்றார். துர்வாசர் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சக்கரம் பெருமாளிடம் திரும்பியது.
பொதுவாக, திருமாலின் சுதர்சனச் சக்கரம் பக்க வாட்டில்தான் இருக்கும். ஆனால், பருத்தியூர் வரதராஜப்பெருமாள் கையில் உள்ள சக்கரம் குறுக்கு வாட்டில், ஏவி விடும் நிலையில் உள்ளது. பெருமாளின் கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதாலேயே சக்கரம் இருக்கும் தெற்குப் புறத்தில் வீடுகள் இல்லை எனக் கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள்! இந்தச் சக்கரத்தை, பெருமாளின் மேலாடையால் மூடியே வைத் திருக்கின்றனர். அவ்வப்பொழுது பக்தர்கள் தரிசனத்துக்காக பெருமாளின் மேலாடையை விலக்கி சக்கரத்தைக் காட்டுகின்றனர்.
பிரயோகச் சக்கரம் ஏந்திய பெருமாளை ஆதிவரத ராஜர் என்று குறிப்பிடுகின்றனர். சாதாரண நிலையில் சக்கரத்தை ஏந்திய மற்றொரு பெருமாள் விக்ரஹத்தையும் அருகில் எழுந்தருளச் செய்துள்ளனர். இவரை, கல்யாண வரதராஜர் என்று போற்றுகின்றனர். வரதராஜர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
அழகுத் திருக்கோலத்தில் விளங்கும் ஸ்ரீகோதண்ட ராமர், தெற்கு நோக்கியபடி சீதா-லட்சுமண-ஹனுமத் சமேதராக தனிச் சன்னிதியில் விளங்குகிறார். ஸ்ரீராமரிடம் பவ்யமாகப் பேசும் பாவத்தில் ஆஞ்சநேயர் வாய்க்கு நேரே கையை வைத்த நிலையில் காட்சி தருகிறார். மகாமண்டபத்தில் உள்ள ஸ்ரீராமர் சன்னிதி முகப்பில், விசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசிவிஸ்வநாதர், தண்டபாணி, நந்தியம்பெருமாள் ஆகியோர் காட்சியளிப்பது இக்கோயிலின் சிறப்பு.
குடவாசல் - நன்னிலம் சாலை, பருத்தியூர் பேருந்து நிறுத்தத்தில், பக்தர்களை வரவேற்கும் விதமாகக் கட்டப்பட்டுள்ள தோரண வாயிலில் பெருமாள்,
சிவன், சந்தனமாரியம்மன் ஆகியோரின் சுதைச் சிற்பங்களை அமைத்துள்ளனர்.
கோயிலின் வலப்புறம் அமைந்துள்ளது அம்பரீஷ தீர்த்தம். இக்குளத்தின் தென்கிழக்கு மூலையில் வர சித்தி விநாயகர் தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார். இந்த விநாயகப்பெருமானுக்கு உற்ஸவம் நடத்திய பிறகே பெருமாள் கோயிலின் ஸ்ரீராமநவமி விழா தொடங்குகிறது. இறுதியில், ஸ்ரீஆஞ்சநேயர் உற்ஸ வத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
அமைவிடம்: குடவாசலுக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. பேருந்து வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12.30 வரை. மாலை 5.30 முதல் 7.30 மணி வரை.

Comments