பக்தர் குறை தீர்க்கும் பஞ்சவர்ணேஸ்வரர்!

திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில், ஈக்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமான் காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல் மற்றும் மாலை நேரம் என ஐந்து வேளைகளில், ஐந்து நிறங்களில் காட்சியளித்து, அன்பர்களுக்கு அருள்பாலிப்பதால் இப்பெருமானுருக்கு ‘பஞ்சவர்ணேஸ்வரர் என்பது திருப்பெயர். இந்த சிவலிங்கப் பெருமான் அமிர்தமயமானவர் என்பதால் இவ்வாறு நிறம் மாறிக் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக, சிவலிங்கத் திருமேனி கரிய நிறத்தில் வழுவழுப் புடன் காணப்படும். ஆனால், இங்குள்ள மூர்த்தி கருப்பும் வெள்ளையு மாய், மேலிருந்து கீழாகக் கோடுகள் பதிந்து காட்சியளிக்கிறார். சுயம்புத் திருமேனியான இப்பெருமான், மண்ணாலோ, மரத்தாலோ, கல்லாலோ உருவானவர் அல்லர். இரண்டு யானைத் தந்தங்களைப் பிடிப்புக்கு நிறுத்தி, மூலிகைப் பொருட்களால் ஆனவராகத் தெரிகிறது. மேலும் இப்பெருமான், போகர் சித்தரால் நவபாஷாணத்தில் உருவானவர் என்றும் சான்றோர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் கூறுகின்றனர்.
இக்கோயில் சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையானது என்று கூறப்படுகிறது. குபேரன் கையில் இருந்த அமிர்த கலசத்திலிருந்து அமிர்தம் கீழே சிந்தி விட, அந்த இடத்திலிருந்து அமிர்தம் நனைந்த சிவலிங்கம் ஒன்று சுயம்புவாய் வெளிப் பட்டது. அதனை குபேரன் உள்ளிட்ட தேவர்கள் யாவரும் வணங்கி வழிபட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இறைவன், அமிர்த தாரைகள் வழியும் தன்மையோடு இத்தலத்தில் எழுந்தருளினார் என்கிறது தலபுராணம்.
கருவறை மூலவரின் மீது செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகப் பொருட்களை உட் கொள்பவர்களுக்கு சகலவிதமான உடல் உபாதைகளும் நீங்குவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தோல் சம்பந்தமான வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த அபிஷேகப் பிரசாதத்தை உட் கொள்வதாலும், இறைவனுக்குச் செய்யப்படும் அபிஷேகத் திருநீற்றை உடலில் பூசிக் கொள்வதாலும் அப்பிணி நீங்கி நலம் பெறுகிறார்கள் என்பது அனுபவக் கூற்று.
பார்க்கச் சலிக்காத அழகுத் தோற்றத்தில் இக்கோயில் அம்பாள் திரிபுரசுந்தரி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். வழிபடும் பக்தர்களின் எம பயத்தைப் போக்கும் வரப்ரசாதியாக அம்பாள் விளங்குகிறாள்.
கோயிலின் வடக்குப் பகுதியில் காசி விச்வநாதர் லிங்க வடிவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு கற்பூர தீபாராதனை செய்யும் பொழுது லிங்கத்தில் ஜோதி தெரி கிறது. சாவா, மூவா தன்மையுடன் கூடிய இந்த புதுமையும் அதிசயமு மான அமிர்த லிங்கத்தை வணங்கினால் தொழில் தடை, வியாபாரத் தடை, கிரகங்களால் உண்டாகக்கூடிய தடைகள் யாவும் நீங்கும் என, பிரார்த்தித்துப் பயன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
வெளிப்பிராகாரத்தில் விநாயகர், ஐயப்பன், வள்ளி தேவயானை சமேத சுப்ரமண்யர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, காலபைரவர் சன்னிதிகள் உண்டு. மற்றும் சமீபத்தில் செய்யப்பட்ட திருப்பணியின்போது பச்சை வர்ண அம்பாள் சிலை கண்டெடுக்கப்பட்டு, பாலாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் அர்த்தமண்டபத் தூண்களை ஒரு கலைக்களஞ்சியம் என்று கூறலாம். அவற்றில் அமைந் துள்ள காஞ்சி ஏகாம்பரேச்வரர், காளஹஸ்தி திருக்காளத்தீச்வரர், நாகலாபுரம் அடுத்த ராமகிரீஸ்வரர் (ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை வாலில் கட்டி இழுக்கும் காட்சி), பைரவர் திருச்சிலைகள் என எழிலுற வடிவமைக்கப்பட்டுள்ள அற்புதங்களைக் காண ஒரு நாள் போதாது.
ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டு, அவரது திருமேனி தீண்டிய பிரசாதங்களை உட்கொள்ள, இதய நோய் உள்ளிட்ட அனைத்து நோகளும் குணமாகிறது என்று உறுதியாகக் கூறும் பக்தர்களின் கூற்று, நமக்குள் ஒரு புதிய உற்சாகத்தைத் தருகிறது. ஐந்து நிறங்களில் காட்சி தந்து, அன்பர்களின் குறை தீர்க்கும் அம்பல வாணனை தரிசித்து வாழ்வில் ஆனந்தம் அடைவோம்.
அமைவிடம்: ரெட்ஹில்ஸ் - திருவள்ளூர் சாலையில் ஈக்காடு பழைய தபால் நிலையப் பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ளது கோயில். திருவள்ளூர் தேரடியிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் 3 கி.மீ. பேருந்து வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 7 முதல் 11 மணி வரை. மாலை 4 முதல் 7 மணி வரை.

Comments