இளமையாக்கும் ஈசன்!

திருநீலகண்ட குயவனார் பானை வனைய மண் பிசைந்து கொண்டிருந்தார். அவரது இயற்பெயர் என்னவென்றே யாருக்கும் தெரியாது. அவர் உதடுகள் எப்பொழுதும் பொன்னம் பலத்தில் கூத்தாடும் தில்லை நடராஜனின் திருநாம மாகிய திருநீலகண்டம் என்பதையே உச்சரித்து வந்ததால் அவரை எல்லோரும் ‘திருநீலகண்ட குயவனார்’ என்றே அழைத்தனர்.
திருநீலகண்டர் சிவபக்தி சீலர். அன்றாடம் தான் செய்த திருவோடுகளிலே சிறந்த ஒன்றை சிவனடியாருக்குத் தந்து விட்டுதான் பிற பொருட்களைச் செய்வார். நரை கூடி முதுமை வந்திருந்தாலும் இப்பழக் கத்தை தொடர்ந்து செய்து வந்தார். அவர் மனைவி ரத்னாச்சலையோ சிறந்த பதிவிரதை. கணவரின் இறைப்பணிக்கு குறைவின்றி துணை நிற்கும் குணவதி. ஊராரைப் பொறுத்தமட்டில் திருநீலகண்டரும் அவர் மனைவியும் சிறந்த தம்பதியர். ஆனால், அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும், பல ஆண்டுகளாகப் பிரிந்தே இருந்தனர்.
இளமையில் திருநீலகண்டர் இறைப்பற்று மிக்கவ ராக இருந்தபோதிலும், சிற்றின்பத்தில் நாட்டம் உடையவராகவும் இருந்தார். ஒருமுறை அவர் பரத்தையர் இல்லம் சென்று வந்ததை அறிந்து அவர் மனைவி மிகுந்த துன்பமுற்றார். தன்னைத் தீண்ட நெருங்கிய கணவரிடம், ‘எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்’ என்று கோபத்துடன் உரைத்தார். இறைவனின் பெயரால் மனைவி சபதம் இடவும், அப்படியே நின்றுவிட்டார் திருநீல கண்டர். ‘எம்மை’ என்று பன்மையில் அவர் கூறியதால் எந்தப் பெண்ணையும் தீண்டுவதில்லை என்று பொருள் கொண்டு, அன்று முதல் தன் மனைவி உட்பட, எந்தப் பெண்ணையும் தீண்டா மல் வாழ்ந்தார். காலங்கள் பல உருண்டோடி இளமை நீங்கி, முதுமை எதினாலும் தனது சபதத்தில் இருந்து அவர் மாறினார் இல்லை.
திருவோடு வழங்கும் இறைப்பணியே தமது தலையாய கடன் என்று எண்ணி வாழ்ந்தார். அன்றும் அதே போலத்தான் திருவோடு செய்ய யத்தனித்தபோது வாசலில் நிழலாடியது. நிமிர்ந்து பார்த்தார் திருநீலகண்டர். சிவப்பழமாக நின்றிருந்தார் ஒரு சிவனடியார். அவர் கையில் கருமை பாந்த ஒரு பழைய ஓடு இருந்தது. உணவு வேண்டி வந்திருக்கிறார் போலும் என்று எண்ணிய திருநீலகண்டர், புதியதொரு திருவோட்டை எடுத்து கொண்டு விரைந்தார். வந்த சிவனடியாரோ, நீர்தான் திருநீலகண்டரோ" என்று வினவினார். அப்படித்தான் என்னை எல்லோரும் அழைக்கின்றனர்" என்றார் திருநீலகண்டர். உடனே சிவனடியார், நான் நெடுந்தூர தீர்த்த யாத்திரை செல்லவிருக்கிறேன். வரும் வரையில் என் திருவோட்டை பத்திரமாக வைத்துக் கொள்வீர்களா?" என்று கேட்டார். இதைக் கேட்டு மகிழ்ந்த திருநீலகண்டர், கண்டிப்பாக பாதுகாத்துத் திருப்பித்தருகிறேன்" என்று உறுதி அளித்தார்.
சிவனடியார் திருவோட்டை அளித்து விட்டு நகர்ந்தார். நாட்கள் பல கழிந்தன. அவ்வப்போது தான் வைத்ததிருவோடு பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து வந்தார் திருநீலகண்டர். திடீரென்று ஒரு நாள் சிவனடியார் மீண்டும் வந்தார். எங்கே நான் கொடுத்த திருவோடு?" என்று வினவினார். இதோ எடுத்து வருகிறேன்" என்று வீட்டுக்குள் ஓடினார் திருநீலகண்டர். ஆனால், என்ன ஆச்சர்யம், திருவோட்டைக் காணவில்லை. வீடு முழுவதும் தேடினார் திருநீலகண்டர். எங்குமே ஓடு இல்லை.
தொங்கிய முகத்துடன் வெளியில் வந்த திருநீல கண்டர், ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். திருவோட்டைக் காணவில்லை. அது பழைய ஓடு தானே, நான் உங்களுக்குப் புது ஓடு தருகிறேன். எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார். இதைக்கேட்ட சிவனடியார், மிகுந்த கோபத்துடன், நான் கொடுத்த ஓட்டைத் திருடிக்கொண்டு நாடகமா ஆடுகிறீர்? உங்கள் ஓடு எனக்குத் தேவையில்லை. நான் கொடுத்த ஓட்டைத் திருப்பிக் கொடுங்கள்" என்றார். இதைக் கேட்ட திருநீலகண்டர் அதிர்ச்சி அடைந்தார். சத்தியமாக நான் உங்கள் ஓட்டைத் திருடவில்லை. என்னை நம்புங்கள்" என்றார். அதற்கு சிவனடியார், இப்படி எல்லாம் சத்தியம் செய்தால் நான் நம்ப மாட்டேன், உங்கள் மகன் கைபிடித்து சத்தியம் செய்து கொடுங்கள்" என்றார். ஐயா, அந்த பாக்கியம் எனக்கு அமையவில்லை" என்றார் திருநீலகண்டர்.
அப்படி என்றால் உன் மனைவியின் கை பிடித்து சத்தியம் செ" என்றார் சிவனடியார். திருநீலகண்டர் செய்வதறியாது திகைத்தார். ஐயா, மன்னிக்க வேண்டும். நான் உங்கள் ஓட்டை எடுக்கவில்லை. புதிதாக எவ்வளவு ஓடுகள் வேண்டும் என்றாலும் தரத் தயாராக இருக்கிறேன்" என்றார். இதைக்கேட்டு சிவனடியாரின் முகம் மேலும் சிவந்தது. இது சரியாக வராது. என் திருவோட்டையும் தரவில்லை. மாறாக, மனைவியின் கைபிடித்தும் சத்தியம் செய்ய மறுக்கிறீர். நான் தில்லை அந்தணர்களிடம் சென்று வழக்குரைக்கிறேன்" என்று அவ்விடம் நீங்கினார்.
சற்று நேரத்துக்கெல்லாம் திருநீலகண்டருக்கு தில்லை அந்தணர்களிடமிருந்து அழைப்பு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட அவர்கள், திருநீல கண்டர் திருவோட்டை திருடாத பட்சத்தில் தமது மனைவி கைப்பிடித்து திருப்புலீஸ்வரர் திருக்கோயில் குளத்தில் மூழ்கி எழுந்திருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். அவ்வாறு செய்ய இயலாது" என்று திருநீலகண்டர் விளக்க முற்பட்டாலும் அது எடுபட வில்லை.
இல்லம் சென்ற திருநீலகண்டர் நடந்ததை மனைவியிடம் விவரித்து, அவரை அழைத்துக் கொண்டு திருப்புலீஸ்வரர் கோயில் குளத்துக்கு வந்தார். அங்கு கோலின் ஒரு முனையை அவர் பிடித்து கொள்ள, மறுமுனையை மனைவியை பிடிக்கச் சொல்லி மூழ்கினார். என்ன ஆச்சர்யம், மூழ்கி எழுந்த போது திருநீலகண்டரும் அவர் மனைவியும் தங்கள் முதுமை மாறி, இளமையுடன் காட்சி அளித்தனர். கரையில் நின்றிருந்த சிவனடியாரைக் காணவில்லை. அதற்கு பதில், விடை வாகனத்தில் இறைவன் காட்சி கொடுத்து, எம்மேல் செய்த சத்தியத்துக்காக தனது இளமையையே இழந்து வாழ்ந்த நீங்கள் இருவரும் நீண்ட காலம் இளமையுடன் வாழ்ந்து எம்மை சேர் வீர்களாக" என்று கூறி மறைந்தார்.
இத்தகைய சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்த இடத்தை நாம் காண வேண்டாமா? வாருங்கள் சிதம்பரத்தில் உள்ள காசு கடை தெருவுக்கு. அங்குதான், ‘இளமையாக்கினார் கோயில்’ என்று வழங்கப்படும் திருப்புலீஸ்வரர் திருத்தலம் உள்ளது. வியாக்ரபாதர் பிரதிஷ்டை செய்ததால் இறைவன் திருப்புலீஸ்வரர் என்றும் அம்பிகை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால், திருநீலகண்டருக்கும் அவர் மனைவிக்கும் இளமையை அளித்த பிறகு இவர்கள் யவனேஸ்வரர், யவனாம்பிகை என்று அழைக்கப் படுகின்றனர். இக் கோயில் திருக்குளம், ‘இளமை தீர்த்தம்’ என்று வழங்கப்படுகிறது. இறைவன் திருவிளையாடல் நிகழ்த்திய இக்குளம், சுற்றிலும் மதில் அமைக்கப் பட்டு மிக சுத்தமா கப் பராமரிக்கப்படு வது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.
பெரிய பிராகாரங்களுடன் நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டு இருக்கிறது இவ்வாலயம். இது திருநீலகண்டருடன் மட்டும் அல்லாமல், கணம்புல்ல நாயனார் வாழ்க்கையுடனும் தொடர்புடைய ஆலயம். கணம்புல்ல நாயனார் சேலம் அருகே உள்ள இருக்கு வேளூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். செல்வந்தரான அவர், சிவாலயங்களில் திருவிளக்கு ஏற்றும் திருப்பணியை செய்து வந்தார். திருப்புலீஸ்வரர் ஆலயத்தில் திருவிளக்கு திருப்பணியை செய்ய சிதம்பரத்துக்கு வந்தார். அவரின் பக்தியை சொதிக்க எண்ணிய சிவபெருமான் அவரை வறியவராக்கினார். கையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் விற்ற போதிலும் திருவிளக்குப் பணியை அவர் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் அவரிடம் விற்க பொருட்கள் எதுவுமே இல்லை. எனவே, அவர் ஆற்றோரம் வளரும் கணம்புற்களை அறுத்து, விற்று அந்தப் பணத்தில் திருவிளக்குப் பணியைச் செய்து வந்தார்.
மேலும், சொதனை அளிக்க விரும்பிய சிவனாரோ ஒரு நாள் புற்களும் விற்காமல் செய்தார். கணம்புல்ல நாயனார் விற்காத புல்லைக் கொண்டு வந்து அதில் விளக்கேற்ற முற்பட்டார். ஆனால், புற்கள் எரியவில்லை. உடனே கருகிப் போயின. இதைக் கண்ட நாயனார் சற்றும் மனம் தளராமல் தனது முடியினைத் திரியாக்கி அதில் தீபம் ஏற்றினார். அவர் பக்தியை மெச்சிய இறைவன், அவர் முன் தோன்றி அவரை ஆட்கொண்டார். இத்தகைய சிறப்புக்கள் வாந்த இந்தத் திருத்தலத்துக்கு வந்து உங்கள் இளமையை மீண்டும் பெற்று வாழ்வீராக.
அமைவிடம்: சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு அருகில்.
தரிசன நேரம்: காலை 8 -12 மணி வரை. மாலை 5-8 மணி வரை.
தொடர்புக்கு: 94426 12650

Comments