மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் திருவாசகம் எனப் போற்றப்படுகிறது. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பர். திருவண்ணாமலையில் அண்ணாமலையான், ‘கோவை பாடிய வாயால் பாவைபாடு’ என்று இயம்ப, மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடினார். இருபது பாடல்கள் திருவெம்பாவை. அதில் பத்துப் பாடல்கள் திருப்பள்ளி எழுச்சி. திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் திருப்பெருந்துறை ஈசனையும், திருஉத்திரகோசமங்கை இறைவனையும் போற்றிப் பாடப்பட் டவை. திருப்பள்ளியெழுச்சியில் திருப் பெருந்துறையில் தம்மை அந்தணனாக வந்து ஆட்கொண்ட நிகழ்வைப் பதிவு செய்துள்ளார் மாணிக்கவாசகர்.
‘செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தருளாயே’ என்கிறார்.
அந்தணனாக, குருவாக தரிசனம் தந்தவர்,
ஜோதிஸ்வரூபமாகத் தரிசனம் காட்டியருளினார்.
‘பெண்ணாகி ஆணாகி அலியா பிறங்கொளி சேர்’ என்று திருவெம்பாவையில் பாடியவரின் சிந்தையை, நாயகி பாவமாக மாற்றத் திருவுளங்கொண்டான் சிவபெருமான். முற்றும் துறந்த அப்பர் பெருமானே, ‘முன்னன் அவனுடைய நாமம் கேட்டாள்’ என்று அகத்துறை பாடலைப் பாடவில்லையா? திருவண்ணாமலையில் நாயகி பாவத்தில் சிவ பெருமான் பேரருளின் மீது வைத்த பக்தியை நேச மாகப் பார்க்கலாம்.
மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு விடியற்காலைப் பொழுது. ‘பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்’ என்பான் பாரதி. பொழுது புலர்வதைப் பார்க்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பாவை நோன்புகளில் மார்கழி மாதம் விடியற்காலைப் பொழுதில் இறைவனை எழுப்ப ஒரு பெண், இன்னொரு பெண்ணை எழுப்பி நீராடி ஆலயம் செல்வதாகும். இறைவனின் புகழைப் பாட பெண்களுக்கு நாயகி பாவத்தில் நின்று திருவெம்பாவையைப் பாட வைக்கிறார் மாணிக்கவாசகர்.
ஜோதி வடிவானவன் சிவபெருமான். அண்ணா மலையே சிவஸ்வரூபம். இங்குதான் திருவெம் பாவையை மாணிக்கவாசகர் பாடியருளினார். ‘திருவாதவூரர்’என்ற திருநாமத்தை இறைவன்தான் ‘மாணிக்கவாசகர்’ என்று சூட்டி மகிழ்ந்தருளினார்.
ஏகன் - அனேகனான இறைவனை மாணிக்கவாசகர், ‘தாயுமிலி, தந்தையுமிலி’ என்பார். அவன் அனாதியானவன். அவனைச் சுமந்து பெற்றவர் யார்? ஒரு பக்தர் கேட்கிறார் பாடலாக...
‘தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த தாழ்வெல்லாம்
வருமோ அயா’ என்று கேட்கிறார்.
‘கல்லால் ஒருவன் அடிக்க, கால் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க, வில்லால் ஒருவன் அடிக்க, வீசி மதுரை மாறன் கைப்பிரம்பால் அடிக்க - அந்த
வேளையில் யாரை எண்ணினீரோ அயா’ என்று கேட்கிறார். மாணிக்கவாசகர், தாய்யும் இல்லை, தந்தையும் இல்லை என்று கூறிவிட்டாரே. ஆனால், ஒன்றை மாணிக்கவாசகர் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். சிவ புராணத்தில், ‘தாயிற் சிறந்த தயாவான தத்துவனே’ என்கிறார். இதற்கு எடுத்துக்காட்டாக, திருச்சி மலைக் கோட்டை இறைவன் தாயாகி வந்து அற்புதம் செய்து, ‘தாயுமானவன்’ என்ற பெயரோடு அமர்ந்து அருள் பாலிக்கிறான். மற்றவர்களுக்குத் தாயுமாகி தந்தையுமாகி நிற்பவனை, மற்ற பெண்களுக்கு திருவெம்பாவை முதற்பாடலில், ‘ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சொதியை’ என்று காட்டுகிறார்.
அவன் பெயரையும் அருளையும் கேட்டால், விம்மி விம்மி மெய்மறந்து அழ வேண்டுமாம். திருவாசகத்தில் நெக்குருகி அழுதவர் - அழவைத்தவர் மாணிக்கவாசகப் பெருந்தகை.
‘யானே பொய் என் நெஞ்சும் பொய்
என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே’ என்கிறார். இது அவரு டைய ஞான நெக்குருகல்.
மாணிக்கவாசகப் பெருந்தகை, சிவபெருமான் அனாதியானவன் - மறைகளுக்கும் எட்டாத மன்னன் என்பதை திருவெம்பாவையில் ஆங்காங்கு எடுத்துக் காட்டுகிறார். ஒரு பாடலில் இன்னும் துயிலெழாத பெண்ணைப் பார்த்து, வண்நெஞ்சப் பேதையர் போல் வாளா கிடக்கிறாயே? அதோ அவன் கோயில் சின்னங்கள் கேட்கின்றன. உனக்குக் கேட்கவில் லையா? இன்னும் துயில்கின்றாயே? மிகவும் கஷ்டப்பட்டு உன்னை, நானும் மற்றவர்களும் துயிலெழுப்புகிறோம். பெண்ணே! நீ என்ன கேட்கிறாய்? ‘வண்ணக் கிளி மொழியார் எல்லோரும் வந்தாரா?’ என்று கேட்கிறாய். உனக்கு சந்தேகம் இருந்தால் நம் தோழியர்களில் ஒருவர் குறைந்தாலும் எண்ணிப் பார்த்து விட் டுப் போய்ப் படுத்துக்கொள்" என்கிறார்.
திருவெம்பாவை பாடலில் ஒருத்தி கேட்பது போலவும், மற்றவள் பதில் சொல்வது போலவும் காணப்படும் சிறப்பு நயத்தை திருவாசகத்திலும் காணலாம். இப்பாடல்களில் அவரின் நாயகிபாவம் அதிகமாகவே வெளிப்படும். நாயகியாய் நின்ற வாதவூரர் திருவெம் பாவையில் மற்ற பெண்களுக்கு வழிகாட்டுகிறார். திருவாசகத்தினுள் உள்ளடங்கியது தான் திருவெம்பாவையும், திருபள்ளியெழுச்சியும். அவனை அடையும் பக்தி மார்க்கத்தில் அழைத்துச் செல்லுகிறார். இதை சரணாகதி தத்துவம் எனலாம்.
துயிலெழுந்து உன்னைத் தேடி வந்து விட்டோம். சித்தமயம் அறிவித்து சிவமாக்கி எனையாண்டவன். என்னுடைய வழி என்ன தெரியுமா? என்று திருவெம்பாவையிலேயே பதிவு செய்து விடுகிறார். தினசரி கோயில் போவதற்கும், பூஜைகள் செய்யவும், மார்கழிபாவை நோன்பு நோற்பதற்கும் பூர்வ ஜன்ம புண்ணியம் இருந்தால்தான் முடியும்.
இறைவனை மாணிக்கவாசகர், ‘சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?’ என்று கேட் பது இந்த ஜன்மாந்திரக் கேள்வியல்ல. பல ஜன்மத் தொடர்பு. அத்தொடர்பின் காரணமாக, அவர் நமக்கு ஞானாசிரியனாக நாயக - நாயகி பாவத்தில் நின்று வழி நடத்துகிறார். புண்ணியம் பண்ணிய நாம் மார்கழி யில் குளிரக் குளிர நீராடி திருவெம்பாவையைப் பாடி, மாணிக்கவாசக குருவைப் பணிவோம்.
Comments
Post a Comment