மஹா ஸ்வாமிகள் -7

விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத் கதிதார்த நிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக  மே சரணம்


கடல் போன்ற வேத சாஸ்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களை உணர்ந்து அதிலேயே உறைபவரும், புகழ் மிக்கவரும், கயிலை சங்கரனின் அம்சமானவருமான காலடி சங்கர குருவே, உங்கள் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.

-தோடகாஷ்டகம்

தாம் நியமத்துடன் கடைப்பிடித்து வந்த காஷ்ட மௌனத்தை பார்வையற்ற பள்ளிக் குழந்தைகளுக்காகக் கலைத்து, அவர்களிடம் அன்பு ததும்ப உரையாடி ஆசீர்வதித்து அருளிய கருணாசாகரம், மற்றொருமுறையும் தம்முடைய காஷ்ட மௌனத்தைக் கலைத்து அமுத மொழிகளால் ஆசி கூறி அருளினார்.

அந்தச் சம்பவம்...

திருவாடானை என்னும் ஊரில் இருந்து மஹா ஸ்வாமிகளைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களில் சங்கரன் என்னும் அன்பரும் ஒருவர். தேசப் பற்று மிக்கவர். தேச விடுதலைக்காகப் போராடியவர். அதற்குப் பரிசாக, தடியடி பட்டு, பார்வை முற்றிலுமாக இழந்துவிட்டவர்.

அவர்கள் காஞ்சிக்கு வந்த அன்று, மஹா ஸ்வாமிகள் காஷ்ட மௌனம் அனுஷ்டிக்கும் நாளாக அமைந்திருந்தது. திருவாடானையில் இருந்து வந்த பக்தர்கள் வரிசையில் நின்று மஹா ஸ்வாமிகளை தரிசித்தனர். அனைவரையும் மஹான் மௌனமாக ஆசிர்வதித்தார். சங்கரனின் முறையும் வந்தது.

அருகில் இருந்த தொண்டர், ‘‘இவர் திருவாடானை சங்கரன். தேச விடுதலைக்காகப் போராடி, தடியடி பட்டு, பார்வையை இழந்தவர்’’ என்று அறிமுகப்படுத்தினார்.

பார்வை இழந்த சங்கரனின் கண்களில் இருந்து, ‘தன்னால் மஹா ஸ்வாமிகளைத் தரிசிக்க முடியவில்லையே’ என்ற ஏக்கம் கண்ணீராகப் பெருக்கெடுத்து, கன்னங்களில் வழிந்தது.

உடனே, மஹா ஸ்வாமிகள் அதுவரை தாம் அனுஷ்டித்து வந்த காஷ்ட மௌனத்தைக் கலைத்தார். ‘‘வா, சங்கரா! எப்படி இருக்கிறாய்? உன் மனைவி, குழந்தைகள் எல்லாம் சௌக்கியமா? இப்போதும் தேசத் தொண்டு, சமூகத் தொண்டெல்லாம் செய்து வருகிறாயா?’’ என்று அன்பு ததும்ப அமுத மொழி பேசி, சங்கரனின் மன ஏக்கத்தைப் போக்கினார்.

மஹா ஸ்வாமிகள் தமது மௌனம் கலைத்து சங்கரனிடம் பேசியதைக் கண்டு, அங்கிருந்தவர்கள் திகைத்து நின்றனர். யாரோ ஒரு முகமறியாத நபருக்காக மஹான் தமது நியமத்திலிருந்து வழுவிவிட்டாரே என்று மடத்துச் சிப்பந்திகளுக்கு ஆதங்கம்.

பக்தர்கள் அனைவரும் சென்ற பிறகு, மடத்துச் சிப்பந்திகளை கனிவுடன் நோக்கிய மஹான், ‘‘என்ன, யாரோ ஒரு சங்கரனுக்காக நான் என்னுடைய நியமத்தை விட்டுவிடுவது சரியா என்றுதானே நினைக்கிறீர்கள்? சங்கரன் பாவம்! தேச விடுதலைக்காகப் போராடி, பார்வையை இழந்துவிட்டான். அவனால் என்னைப் பார்க்கமுடியாது. நான் பேசினால், என் குரல் அவன் காதில் விழுந்தால் என்னை தரிசித்த மனநிறைவு அவனுக்குக் கிடைக்கும். இந்த தேசத்துக்காகப் பார்வையைப் பறிகொடுத்த சங்கரனுடைய சந்தோஷத்துக்காக நான் எனது நியமத்தை மீறியது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை’’ என்றார். அந்த அளவுக்கு தேசத்தின் மீதும், தேசப் பற்று உள்ளவர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் மஹான்.

மஹா ஸ்வாமிகள் தமக்குத் தாமே விதித்துக் கொண்ட நியதியைத்தான் மீறினாரே தவிர, தாம் ஜகத் குருவாக வீற்றிருக்கும் ஸ்ரீமடத்துக்கான சம்பிரதாயங்களையோ, ஒரு சந்நியாசிக்கு உரிய அனுஷ்டானங்களையோ அவர் எப்போதும் மீறியதே இல்லை.

மஹா ஸ்வாமிகள் ஒரு கிராமத்தில் எழுந்தருளி இருந்தபோது, சுதந்திர தினம் வந்தது. ஊர்ப் பெரியவர்கள் மஹானிடம் வந்து, மறுநாள் சுதந்திர தினத்தை முன்னிட்டுத் தங்கள் கிராமத்தில் தேசியக் கொடி ஏற்ற இருப்பதாகவும், மஹா ஸ்வாமிகள்தான் வந்து கொடி ஏற்றி வைக்கவேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொண்டனர்.

‘‘ஒரு சந்நியாசியாகிய நான் கொடி ஏற்றுவ தெல்லாம் சரியல்ல. ஊர் முக்கியப் பிரமுகரைக் கொண்டு கொடி ஏற்றுங்கள். நான் வந்து கலந்துகொள்கிறேன்’’ என்றார். அதேபோல், மறுநாள் காலையில் கொடி ஏற்றும் வைபவம் நடந்த இடத்துக்கு மஹான் விஜயம் செய்து, அனைவரையும் ஆசிர்வதித்து அனுக்கிரகம் செய்தார்.

கயிலை சங்கரன் சுந்தரருக்காகவும், ஞானசம்பந்தருக்காகவும் பொன் கொடுத்த புராண வரலாறு நமக்குத் தெரியும். காலடி சங்கரர் ஏழைப் பெண்ணின் வறுமை நீங்க கனகதாரா ஸ்தவம் பாடி, தங்க நெல்லிக் கனிகளை வர்ஷித்த வரலாறும் நமக்குத் தெரிந்ததுதான்.

அதேபோல், காஞ்சி சங்கரரும் கனகதாரா ஸ்தவம் வாசிக்கச் செய்து, தங்கம் வரவழைத்துக் கொண்ட அதிசயமும் நிகழவே செய்தது.

காஞ்சி காமாட்சி அம்மனின் கருவறை விமானம் முற்காலத்தில் தங்க ரேக்குகளால் வேயப்பட்டு இருந்தது. காலப் போக்கில் தங்க ரேக்குகள் தேய்ந்து, செப்புத் தகடுகள் மட்டுமே காணப்பட்டன.

அம்பிகையின் கருவறை விமானத்துக்குத் தங்கம் வேய்ந்து அழகு பார்க்கவேண்டும் என்று மஹா ஸ்வாமிகள் திருவுள்ளம் கொண்டார். ஆனால், ஸ்ரீமடத்துக்கு வருமானமே இல்லாத நிலையில், தங்கத்துக்கு எங்கே போவது? ஸ்ரீமடத்தின் நிர்வாகியும் தயங்கியபடியே பண வசதி இல்லை என்பதைத் தெரிவித்தார்.


மஹா ஸ்வாமிகள் அதைப் பொருட்படுத் வில்லை. பொற்கொல்லரை வரச் சொன்னார் அம்பிகையின் விமானத்துக்கு தங்க ரேக்குகள் பதிக்க எவ்வளவு ஆகும் என்று விசாரித்தார். பொற்கொல்லரும் விமானத்தைப் பார்த்துவிட்டு, எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்று கணக்கிட்டுச் சொன்னார்.

அடுத்த சில நாட்களில், பிரபல கர்னாடக இசைக் கலைஞர் மகாராஜபுரம் விசுவநாத ஐயர் காஞ்சிப் பெரியவரை தரிசிப்பதற்காக வந்திருந்தார். ஆண்களும் பெண்களுமாய் ஏராளமான பக்தர்கள் நிறைந்திருந்தனர். அப்போது மகா பெரியவா, மகாராஜபுரம் விசுவநாத ஐயரிடம், ‘‘காமாட்சி அம்மன் கோயில் விமானத்துக்கு தங்க ரேக்குகள் பதிக்கவேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. பகவத் பாதரின் கனகதாரா ஸ்தவம் உனக்குத் தெரியும்தானே? அதைப் பாடேன்’’ என்று கூறினார். உடனே அவரும் கனகதாரா ஸ்தோத்திரத்தை பக்திபூர்வமாகப் பாடினார். அங்கிருந்த பெண்களும் அவருடன் சேர்ந்து பாடினர். பாடி முடித்ததுதான் தாமதம், அங்கிருந்த பெண்கள் அனைவரும் தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி மஹா ஸ்வாமிகளுக்கு முன் வைக்கப்பட்டிருந்த மூங்கில் தட்டுகளில் சமர்ப்பித்தனர். அந்த நகைகளை எடைபோட்டுப் பார்த்ததில், பொற்கொல்லர் தங்க ரேக்குகள் பதிக்க எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்று கணக்கிட்டுச் சொன்னாரோ, சரியாக அதே எடை அளவுக்கு இருந்தது தெரியவந்தது.

‘‘பகவத் பாதரின் கனகதாரா ஸ்தவம் இன்றைக்கும் தங்கத்தை வர்ஷிக்கச் செய்துவிட்டதே!’’ என்று சொல்லிப் புன்னகைத்தார் மஹா ஸ்வாமிகள்.

அம்பிகையின் கோயில் விமானத்துக்காக மட்டுமல்லாமல், தன்னிடம் தங்கம் கேட்டு வந்த ஒரு பக்தைக்கும் தங்கம் கிடைக்க அருள் செய்தார் மகான்.

எப்படி..?

Comments