கருடக் குன்றில் சிங்கபிரான்!

பக்தன் பிரகலாதனின் வார்த்தையைக் காப்பாற்ற பெருமாள் தூணிலிருந்து நாரசிம்மமாக ப்ரத்யக்ஷம் ஆனார்! உனது பெருமாள் எங்கே இருக்கிறான்?" என்று கேட்ட ஹிரண்யகசிபுவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச்
சென்று வாயிற்படியில் வைத்து, தன் நகங்களால் அவன் வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலையாக அணிந்தார். அழிந்தான் ஹிரண்ய கசிபு. முடிந்தது நரசிம்ம அவதாரத்தின் நோக்கம்.
ஆனால், கருடனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடிய வில்லை. தான் இல்லாமல் ஒரு அவதாரமா? என்ன தவறு செய்தோம் என்று பகவான்தாம் இல்லாமல் சென்றார் என்று எண்ணி வருந்தியது. ஏதோ பாவம் செய்து விட்ட தால்தான் தமக்கு இவ்வாறு நேர்ந்தது என்று கருதி, தவம் செய்து பாபம் தீர்க்க கிருஷ்ண பத்ரா நதி தீரத்துக்கு வந்தது.
கிருஷ்ண பத்ரா - தக்ஷிண பிநாகினி, தென் பெண்ணை இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் நதி. உலகளந்த பெருமாள் வாமனர், ஓர் அடியில் பூமியை அளந்து, ஈரடியில் வானத்தை அளந்தபொழுது, பிரம்மன் தனது கமண்டல நீரால் அவரது உயர்த்திய பாதத்துக்கு அபிஷேகம் செய்தான். அந்த நீர் பெருமாளின் பாதத்தை நனைத்து ஆறாகப் பிரவாகித்தது. இறைவனின் பாதத்தைத் தொழுது வருவதால், ‘கிருஷ்ண பத்ரா’ என்று பெயர் பெற்றது. இந்நதியில் உலகளந்த பெருமாள் கோயில் கொண்டிருப்பதால் அது, ‘திருக்கோவிலூர்’ என்று அழைக்கப்படுகிறது.
இத்தகைய பெருமைகள் கொண்ட கிருஷ்ணா பத்ரா நதிக்கரையில் கருடன்தன் தவத்தை தொடங்கினான். அன்னம், தண்ணீர் இன்றி இறைவனை எண்ணி நாளும் பகலும் வேண்டினான், கண்ணீர் உகுத்தான். உடல் தேந்து, பறக்கக் கூட தெம்பின்றி அமர்ந்தான். இருப்பினும் இறைவன்பால் கொண்டிருந்த பற்றினால் தனது சிந்தனையை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் இறைஞ்சினான்.
பகவான் மனமிரங்கினார். கருடன் முன்தோன்றி, என்ன வேண்டும்?" என்று வினவினார். கருடனோ, ‘தம்மை நரசிம்ம அவதாரத்தின் போது உடன் அழைத்துச் செல்லாததால் தமக்கு நரசிம்மராகக் காட்சி கொடுக்க வேண்டும்’ என்று வேண்டினான். இதைக் கேட்டு மகிழ்ந்த பெருமாள், மடியில் லட்சுமியுடன் லட்சுமி நரசிம்மராக கருடனுக்குக் காட்சி கொடுத்தார்.
அதைக் கண்ட கருடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். நரசிம்மரையும் லட்சுமியையும் தன் முதுகில் ஏற்றி வலம்வர எண்ணினான். ஆனால், அவனுக்கோ பறக்கத் தெம்பில்லை. இறைவனிடம் மிகுந்த பணிவுடன் ஒரு விண்ணப்பத்தை வைத்தான்.
நரசிம்மரும் தாயாரும் தன் முதுகில் அவ்விடத்தில் பக்தர்களுக்குக் காட்சி கொடுக்க வேண்டும் என்பதுதான் அவ்வேண்டுகோள். இறைவனும் அந்த வேண்டுகோளை ஏற்று அவ்வாறே அங்கு சேவை சாதிக்க அருள் புரிந்தார். இன்றும் அந்திலி திருத்தலத்தில் கருடன் போன்ற தோற்றமுள்ள சிறு குன்றின் மேல் காட்சி அளிக்கிறார் லட்சுமி நரசிம்மர். விழுப்புரத்தைச் சுற்றியுள்ள நவ நரசிம்ம கே்ஷத்ரங்களில் இதுவும் ஒன்று.
இத்தலத்தின் சிறப்பினை உணர்த்த வியாசராஜ தீர்த்தர் இங்கு விஜயம் செய்துள்ளார். அது மட்டுமல்லாமல், இங்கு ஆஞ்ச நேயரையும் அவர் பிரதிஷ்டை செய்துள்ளார். வியாசராஜர் தமது காலத்தில் 729 ஆஞ்சநேயர்களை பிரதிஷ்டை செய்துள்ளார். அவர் கல்லிலே தன் அங்காரா கட்டியால் கோட்டோவியம் வரைந்தால், அது அப்படியே சிலையாக மாறி விடுமாம். அத் தகைய சிறப்புள்ள ஆஞ்சநேயர்களில் ஒருவர் இந்த அந்திலி திருத்தலத்தில் உள்ளார். வியாசராஜ தீர்த்தர் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் முந்தைய அவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமில்லாமல், இவ்வாலயம் நரசிம்மாச்சார் என்ற ஒரு பக்தரின் சரித்திரத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. நரசிம்மாச்சார் ஒரு சிறந்த வேத விற்பன்னர். தினமும் காலையில் கிருஷ்ணபத்ரா நதியில் ஸ்நானம் செய்து, நரசிம்மரை வணங்கி விட்டு அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் மணம் பூண்டிக்கு நடந்து செல்வார். அங்கு பிருந்தாவனஸ்தரான ரகோத்தம ஸ்வாமிகளின் தீவிர பக்தர் அவர். ஒரு நாள் கூட நரசிம்மர் தரிசனமும் ரகோத்தமர் வழிபாடும் நின்றதில்லை.
வருடங்கள் உருண்டோடின. நரசிம்மாசாருக்கு முதுமை வந்தது. மூப்பின் காரணமாக அவர் உடல் தளர்ந்தது. அந்திலியில் இருந்து மணம்பூண்டி வரை அவரால் நடக்க இயலவில்லை. தம் குரு ரகோத்தமரை தரிசிக்காமல் ஒரு நாள் கூட வாழ நரசிம்மாச்சார் தயாராக இல்லை. தனது உயிரை மாத்துக்கொள்ள சித்தமானார். எவ்வாறு தன் உயிரை எடுப்பது? என்று பலவாறாக சிந்தித்தவர், அப்படியே கண்ணயர்ந்து விட்டார். பக்தனின் அக்கறை குருவுக்கு இருக்காதா என்ன? கண்ணயர்ந்த நரசிம்மாச்சாரின் கனவில் தோன்றினார் ரகோத்தமர். என்னைப் பார்க்க உன்னால் வர முடியாவிட்டால் என்ன, உன் பக்கம் நான் திரும்பிக் கொள்கிறேன்" என்றார் புன்முறுவலுடன். திடுக்கிட்டு எழுந்தார் நரசிம்மாச்சார், தான் கண்டது கனவா நனவா? இப்படியும் ஒரு அதிசயம் நடக்க முடியுமா? புரியாமல் மீண்டும் கண்ணயர்ந்தார். காலையில் எழுந்த அவர் தனது ஜபதபங்களை கிருஷ்ண பத்ரா நதிக்கரையில் முடிக்க தளர்ந்த நடையுடன் சென்றார்.
அங்கு இருந்தவர்களிடம் ஒரே பரபரப்பு. என்ன, நிஜமாகவா? இப்படி கூட நடக்குமா? ஆஹா, என்ன ஒரு பக்தி" என்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஒன்றும் புரியாமல் அங்கு வந்த நரசிம்மாச்சாரை கண்டு சிலர் அவர் கால்களில் சாஷ்டாங்க மாக விழுந்தனர். அவருக்கோ எதுவும் விளங்கவில்லை. நடுங்கும் குரலில், என்னப்பா ஆச்சு?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், நேற்று இரவு ரகோத்தம ஸ்வாமிகள் பட்டரின் கனவில் தோன்றி, ‘நான் இப்போது மேற்குப் பக்கமாக இல்லை, என் பக்தன் அந்திலி நரசிம்மாசாருக்காக கிழக்குப் பக்கம் திரும்பி விட்டேன். எனவே, ஆராதனைகள் எல்லாம் கிழக்கு முகமாகவே நடக்கட்டும்’ என்று கூறி இருக்கிறார். என்னே உங்கள் பக்தி என்று மெச்சினார்கள். இதைக்கேட்ட நரசிம்மாச்சார் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
தனது காலம் வரை கிருஷ்ண பத்ரா நதிக்கரையில் இருந்து கிழக்கு முகமாக அமர்ந்த ரகோத்தமரை வணங்கி வந்தார். இன்றும் அவரது பிருந்தாவனம் இக்கோயிலின் அருகே காணப்படுகிறது. அதேபோல் இன்றும் ரகோத்தமர் பிருந்தாவனம் மேற்கு நோக்கி அமைந்திருந்தாலும் பூஜைகள் கிழக்கு நோக்கியே நடக்கின்றன. இத்தகைய சிறப்புகள் வாந்த அந்திலிக்கு வந்துதான் பாருங்களேன்!
செல்லும் வழி: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் இருந்து அரகண்டநல்லூர் வழியில் சென்றால் 5 கி.மீ., அரகண்டநல்லூர் காவல் நிலையம் தாண்டி, வலப்புறம் திரும்பி னால் 3 கி.மீ., தொலைவில் வயல்களின் நடுவே கோயில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 7 முதல் மாலை 6 மணி வரை.தொடர்புக்கு: 0413-225238

 

Comments