கூடாரை வெல்லும் கோவிந்தன்!

ஆண்டாள் நாச்சியார் தனது திருப்பாவையில் கோவிந்த நாமத்தை மூன்று முறை பயன்படுத்துகிறாள். அத்திருநாமத்துக்கு அவ்வளவு பெருமை. ஏற்றம் பெற்ற இந்நாமத்தால் நம் எல்லா இடர்களும் நீங்கும் என்று பெரியோர்கள் வ்யாக்யானம் செய்கின்றனர். ‘கோவிந்தா’ என்று சபை நடுவே அழைத்த போது திரௌபதிக்குப் புடைவை சுரந்து காப்பாற்றியது இத்திருநாமமேயாகும். குறை ஒன்றுமில்லாத கோவிந்தனுக்கும் ஒரு குறை உண்டானது. காரணம், கூடாரை வெல்லும் சீர்கோவிந்தனா அவன் பெருமை பரவுதற்கே!
ராமானுஜருக்கு, ‘திருப்பாவை ஜீயர்’ என்றொரு திருநாமம் உண்டு என்பதை முன்னமே அறிவோம். அவரின் நித்யகர்மாநுஷ்டானத்தில் திருப்பாவை முக்கிய பங்கேற்கும். திருமாலிருஞ்சோலையில் ஆண்டாளின் திருவுள்ளத்தின்படியே நூறு தடா வெண்ணெய், அக்காரவடிசில் சமர்ப்பித்தார் யதிராஜர். அதனால் அவரை, ‘அண்ணா’ என்று அழைத்தாள் கோதை.
கோதையின் நாயகனாகிய கோவிந்தனுக்கும் ராமானுஜர் பிரியமானவரன்றோ! அக்கோவிந்தன் ஒரு திருவிளையாடலை அரங்கேற்றினான். ராமானுஜர் வாழ்ந்த காலத்தில் சைவத்துக்கும், வைணவத்துக்கும் சண்டைகள் நிறைய நடந்துள்ளன. இவையனைத்தையும் வரலாறு நன்கு பதிவு செய்துள்ளது.சோழ ராஜனின் கொடுமையினால் ராமானுஜர் மேலக்கோட்டைக்கு வெள்ளை சாற்றி எழுந்தருளினார். பெரிய நம்பியும், கூரத்தாழ்வானும் கண்களையிழந்தனர். ராமானுஜர் வைணவத்தின் தலைசிறந்த ஆசாரிய ராகத்திகழ்ந்தாலும், ஏனைய மதங்களை அழிக்க நினைத்ததில்லை.
வைணவ கோட்பாடுகளை நிறுவ கொள்கை அளவில்வாதம், பிரதி வாதம் செய்து கண்டனம் செய்வாரே தவிர்த்து, ஒரு போதும் எதையும் அழிக்க நினைத்ததில்லை. ஆனால், அரசனின் மனோநிலை வேறாக இருந்தது. வைணவ கோயில்களை இடித்தும், அவற்றிலுள்ள விக்ரகங்களை சிதைத்தும், அழித்தும் விட்டால் சைவம் வளரும் எனும் எண்ணம்.
திவ்யதேசங்களில் சிறப்பான திருக்குடந்தையில் இன்றும் ஒரு ஆதாரத்தைக் காணலாம். சிவபக்தனாகிய அரசன் வந்தபோது திருக்கோயிலுக்கும், பெருமானின் திவ்யமங்கள விக்ரகத்துக்கும் ஏதாவது தீங்கு நேரிடுமோ? என பயந்த மெய்வாசல் உடையார் எனும் பரம பக்தர் ஒரு மாபெரும் சாகசம் செய்தாராம்.
அதாவது, பெரும் வைக்கோற்போர் கொண்டு திருக்குடந்தை சார்ங்கபாணியாம் ஆராவமுதப்பெருமானின் ஆலயத்தை முழுதுமாக மூடி விட்டாராம். அமுதன் ஆலயம் வைக்கோற்போரால் மூடப்பட்டது. அரசன் அருகிலிருந்த சிவபெருமான் ஆலயத்தைத் தரிசித்தவன், இந்த வைக்கோற்போரை துளியும் லட்சியம் செய்யவில்லை. இன்றும் அமுதன் சன்னிதி புறப்பாட்டில் அந்த மெய்வாசல் உடையாருக்கு மரியாதை ஆவதை சேவிக்கலாம்.
இவ்வாறெல்லாம் ஆலயங்களும், விக்ரகங்களும் காப்பாற்றப் பட்டுள்ளன. இனி, ராமானுஜர் கதைக்கு வரலாம். தில்லை சித்தி ரக்கூடம் சைவம், வைணவம் என இரண்டும் சேர்ந்ததொருதிருத்தலம். ‘தில்லையம்பதி’ என சைவர்கள் நடராஜப் பெருமானை கொண்டாடுகின்றனர். திருச்சிற்றம்பலம் என்று சிற்சபையின் நாயகனாக சபாபதி (நடராஜன்) விளங்குகிறான்.
இங்குள்ள திருக்கோயில் வளாகத்தில் கோவிந்த ராஜனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. ‘தில்லைநகர் திருச்சித்திரக்கூடம் தன்னுள்’ என்று ராமாவதாரத்தைப் பாடும்போது ஆழ்வார்கள் இத்திவ்யதேசம் திருச்சித்தி ரக்கூடம் என்று கொண்டாடுகின்றனர். தில்லை நகராகவிருப்பினும், இதுவே திருச்சித்திரக் கூடம் என்று அவர்களின் அனுபவம். நடராஜன் ஆடுபவராக, ‘சபாபதி’ எனும் பெயருடன் ஒரு புறம் விளங்க, மற்றொருபுறம் கோவிந்த ராஜனாக மஹா விஷ்ணு ஆதிசேஷனில் துயில் கொண்ட திருக்கோலத்தில் மூலவராகவும், ஒரு திருவடியை மடித்து அமர்ந்த கோலத்தில் உத்ஸவராகவும் எழுந் தருளியுள்ளான்.
சைவ சமயத்தின் மீது மிகுதியான பற்றுதல் கொண்ட அரசனுக்கு இந்த சேர்க்கை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ‘சபாபதிக்கு (நடராஜனுக்கு) சரிநிகர் சமானமாக மற்றொரு தெய்வம் குடியிருப்பதா?’ என்று வெகுண்டான். அன்பர்களே, அடியேன் முன்னமே தெரிவித்தேன். ஒரு சம்பிரதாயத்தில் பற்றுதல் இருப்பதில் தவறேதுமில்லை. ஆனால், மற்றொன்றை வெறுத்து, அதை அடியோடு அழிக்க நினைப்பது தவறன்றோ. மேலும், வாதப்போர் செய்து வெற்றி பெறுவது வித்வான்களின் மேன்மை. அதை விடுத்து ஆட்சி பலத்தில் அடக்குமுறை கையாள நினைப்பது அறிவற்றவர்கள் செய்யும் காரியம்.
அரசன் அடாது செயலைச் செய்யத் தலைப்பட்டான். ஆம்... அங்குள்ள கோவிந்தராஜப் பெருமாளின் திருவுருவை அழிக்க நினைத்தான். ஆலயத்தின் விக்ரகங்களுக்கு ஆபத்து நேர்ந்தது. வைஷ்ணவர்கள் மனம் கலங்கினர். ‘ஆபத்தில் உதவுபவன் கோவிந்தன் என்றால், இன்று அந்த கோவிந்தனுக்கே ஆபத்து நேரிட்டதே’ என திகைத்தனர்.
இறையருள் பெறாதவர்களுக்கு இங்கு ஒரு சந்தேகம் எழும். அதாவது, எம்பெருமான் எல்லோரையும் காப்பவன் என்றால், இன்று அவனையே அவனால் காத்துக்கொள்ள முடியவில்லையே என்று. உண்மை யில் இவைகள் பகவானின் லீலைகள். ‘அலகிலா விளையாட்டுடையவன்’ என்று அவனின் இந்த விளையாட்டை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘பயக்ருத், பயநாசன’ என்று ஒரு திருநாமமுண்டு. அதாவது, பயத்தை உண்டாக்குபவன், பயத்தை நீக்குபவன் என்று பொருள். தன்னுடைய லீலாவிநோதங்களை இவ்விதம் நிகழ்த்துவதாலன்றோ ராமானுஜரின் அரும்பெருமைகள் இவ்வுலகின் வெளிச்சத்துக்கு வரும். அதனால்தான் இந்த நாடகம். மூலவரின் திரு மேனியை அரசன் அப்புறப்படுத்தினான். அதற்குள்ளாக ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒன்றுசேர்ந்து உற்ஸவரை காப்பாற்றத் தலைப்பட்டனர். அரசனும், அவன் ஆட்களும் அறியாவண்ணம் கோவிந்தனின் திவ்யத் திருமேனியை தில்லை நகரத்திலிருந்து வெளியேற்றினர்.
இதேபோன்றுதான் சிதம்பரம் அருகிலுள்ள சீர்காழிப் பெருமாள் தாடாளன். அவனை தவிட்டுப் பானைக்குள் மறைத்து வைத்து ஒரு குருட்டுக் கிழவி காப்பாற்றினாளாம். அதனால்தான் அப்பெருமான் இன்றும், ‘தவிட்டுப்பானை தாடாளன்’ என்று அழைக்கப்படுகிறான்.
விஷயம் வெகு விரைவாக ராமானுஜரின் கவனத்துக்குச் சென்றது. தில்லையில் பெருமாளின் திவ்ய மங்கள விக்ரகத்துக்கு ஆபத்து என்றுணர்ந்து விரைந்து செயல்பட்டார் கூடாரை வெல்லும் கோவிந்தன். கூடார் என்றால் அவனைப் புரிந்து கொள்ளாதவர்கள். அவர்களை வெல்பவன் ‘கூடியார்க்கு’, ராமானுஜருக்கும், அவரடியார்க்கும் தோற்பவன். எனவே, பரம கருணாமூர்த்தியான கோவிந்தனை திருப்பதியில் பிரதிஷ்டை செய்ய நிச்சயித்தார் திருப்பாவை ஜீயர்.
திருமலையில் பிரதிஷ்டை செய்தால் ஏழுமலைகளின் மீதேறி சேவிக்க இயலாதவர்கள் என்ன செய்வர்? ஏற்கெனவே அங்கு கோவிந்தனாக ஸ்ரீநிவாஸன் எழுந்தருளியுள்ளதால் கீழ்திருப்பதியில் கோவிந்த ராஜனை திருப்பிரதிஷ்டை செய்தார். அழகான ஒரு ஆலயம் வெகு விரைவில் எழுந்தது. சயனக் கோலத்தில் பெரிய திருமேனியாக மூலவர் கோவிந்தன் எழுந்தருளினார். ஆழ்வார்கள் பாடி மகிழ்ந்த உற்ஸவரையும் அங்கே பிரதிஷ்டை செய்தார் ராமானுஜர்.
அருகில் கோவிந்த நாமத்தின் பெருமையை
விளக்கிய வேதமனைத்துக்கும் வித்தாகிய திருப்பாவை பாடிய
கோதைக்குத் தனி சன்னிதி அமைத்தார். ‘எல்லோருக்கும் நான் அபயமளிக்கிறேன். கவலைப்படாதே’ என்று கோவிந் தன் பார்த்தசாரதியாகச் சொன்ன வார்த்தையின் உண்மையை உலகம் உணர பார்த்தசாரதிப் பெருமாளுக்கும் சன்னிதி அமைந்தது.
கீழ்திருப்பதியில் ஏற்கெனவே கோவில் கொண்டுள்ள பார்த்தசாரதிப் பெருமானின் ஆலயத்தின் அருகே கோவிந்தராஜரை ப்ரதிஷ்டை செய்தருளினார். மேலும் திருக்கோவில் செல்வம் பெருக வலதுபுறத்தில் ஆண்டாளை ப்ரதிஷ்டை செதருளினார். வலதுபுறம் ஆண்டாளை இங்கு மட்டுமே ஸேவிக்க முடியும்!
தில்லைநகர் திருச்சித்திரக்கூடம் இங்கு திருப்பதியில் மறுபடியும் கோயில் கொண்டது. சில ஆண்டுகள் கழித்து சிதம்பரத்தில் கலகங்கள் அடங்கின. சகஜ நிலை உண்டாயிற்று. சைவ, வைணவ காழ்ப்புணர்ச்சி நீங்கியது. ராமானுஜர் இங்கும் முன்போன்று ஒரு திருக்கோயிலையும், பெருமாளையும் பிரதிஷ்டை செய்து மகிழ்ந்தார். ராமன் சித்திரக்கூடத்தில் மகிழ்ந்தது போன்று தில்லையிலும், திருப்பதியிலும்
கோவிந்தராஜன் இன்றும் மகிழ்வுடன் மக்களுக்கு மங்கலம் அருளுகிறான். எல்லாம் ராமானுசன் கருணை.

Comments