ஒள௸தகிரி கல்யாண வேங்கடேசர்!

செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் செல்லும் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது ஆப்பூர். சிறிய கிராமம்தான்! இங்கே மலை மீது கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீநித்யகல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள்.
இம்மலைக்கு ஔஷதகிரி என்று பெயர். அதற்கேற்ப, மலை எங்கும் மூலிகைகள் மயம்தான்! மேலே ஏறிச் செல்ல வசதியாக 508 படிகள், நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளது. சிவப்பு, வெள்ளை வர்ணம் பூசப்பட்ட படிகள் நீண்டு செல்லும் அழகை அடிவாரத்தில் கண்டு கொள்ளலாம். படிகளில் ஏறும்போது மூச்சிரைக்கும், ஆனால், சுவாசத்தில் மூலிகை மணம் நாசி துளைப்பதை நாம் நன்கு உணர முடியும். மேலே ஆலய முகப்பும், மண்டபமும் பளிச்சிடுகின்றன. வந்த களைப்பு தீர மண்டபத்தில் அமர்ந்து, சன்னிதியை வலம் வரலாம்.
பெருமாள் சன்னிதி கருவறை, முன் மண்டபம், பிராகார மண்டபம், கம்பி வேலி அமைக்கப்பட்ட கருட மண்டபம். இவ்வளவுதான் மலை உச்சியில். அருகே வற்றாத கிணறு. அதன் நீர் மூலிகை கலந்த தனிச்சுவை. அந்த நீரே பெருமாள் திருமஞ்சனத்துக்கு!
பெருமாள் மார்பில் தாயாருடன் தனித்திருக்கின்றார். சுமார் ஐந்தடி உயரம். திருப்பதி வேங்கடேசரைப் போன்ற அழகு! அவர் ஏழுமலையான் என்றால், இவர் ஏகமலையான். இங்கே அகத்தியரும் சித்தர்களும் வருகின்றனராம். குறிப்பாக பௌர்ணமிகளில். ஔஷதகிரி அருகே சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கச்சூர் கோயில் சிவபெருமானும் ஔஷதகிரீஸ்வரர் (மருந்தீஸ் வரர்) என்ற பெயருடன் திகழ்கிறார்.
இந்த, நித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் இங்கே கோயில் கொண்டு 800 வருடத்தில் இருந்து ஆயிரம் வரை இருக்கலாம். இங்குள்ள கிராமப் பகுதிகளில் பெருமாளை மனத்தில் நினைத்து திருமண பாக்கியத்துக்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம் கைகூடியதும் பெருமாளுக்குப் புடைவை எடுத்து சாற்று கிறார்கள். கல்யாண ஜவுளி எடுக்கும்போது, முதல் புடைவை பெருமாளுக்குதான். அதை நிச்சயதார்த்தத்தின் போது கொண்டு வந்து பெருமாளுக்கு சாற்றுகிறார்கள்..." என்றார் அர்ச்சகர்.
இங்கே தாயாரே பெருமாள் ஸ்வரூபியாக எழுந் தருளியிருப்பதாக ஐதீகம். அதனால் புடைவை
சாற்றுவதும், திருமஞ்சனம் செய்வதும் நேர்த்திக் கடனாக இருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். அர்ச்சகர் தினமும் படிகளில் ஏறிவந்து, பூஜைகளைச் செய்கிறார். மக்கள் நட மாட்டம் அதிகமில்லை. குரங்குகள் அதிகம். எனவே எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சனி, ஞாயிறுகளில் காலை 8-12 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 8 மணிக்கும் கோயில் திறந்திருக்கும். அர்ச்சகர் ஸ்ரீராமனை 9952110109 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, உறுதிப்படுத்திக் கொண்டு செல்லலாம்.
மறைமலைநகர் ரயில் நிலையத்தை அடுத்த சாமியார் கேட் கடந்தும் கோயிலை அடையலாம். அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு.

Comments