யார் பெரியவர்..?



ருமுறை பகவானுக்கும் ஒரு பக்தருக்கும் இடையில் ஒரு போட்டி வந்தது. ‘‘அண்ட சராசரங்களையும் நான் என்னுள் அடக்கி வைத்திருக்கிறேன். நான்தான் பெரியவன்’’ என்றார் பகவான்.

‘‘உன்னை என் காது வழியே நுழைத்து என் இதயத்தில் அடக்கி வைத்திருக்கிறேன். எனவே, உன்னைவிட நான்தான் பெரியவன்’’ என்றார் பக்தர். அந்த பக்தர் வேறு யாருமல்ல, நம்மாழ்வார்தான்!

காது வழியே நுழைத்து இதயத்தில் அடக்கி இருக்கிறேன் என்பதில் ஒரு தத்துவம் இருக்கிறது.

பகவானின் நாமத்தை குருவின் மூலமாக உபதேசம் பெற்று, அவனை இதயத்தில் இருத்தி பூஜித்து பக்தி செலுத்துவதையே அது குறிக்கிறது.

இதனையே ஔவையாரும், ‘தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே’ என்று பாடி இருக்கிறார்.


புண்ணியம் குறைந்துவிடும்...

ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் ஆசிரமத்தில் ஒருநாள் மாலை பூஜையின்போது பகவானுக்கு நைவேத்தியம் செய்ய எதுவுமே இல்லை. சீடரான கிருஷ்ணதாசர் பக்கத்து வீட்டில் இருந்த ராதாபாய் என்பவரிடம் சென்று, நைவேத்தியத்துக்குத் தேவையான அரிசி, பால், சர்க்கரை போன்றவற்றை வாங்கி வந்து நைவேத்தியம் தயாரித்தார்.

ஆசிரமத்தில் பண்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், கிருஷ்ணதாசர் நைவேத்தியத்துக்கு என்ன செய்தார் என்று ஸ்ரீகிருஷ்ண சைதன்யருக்குப் புரியவில்லை.

எனவே, அவர் கிருஷ்ணதாசரிடம், ‘‘நைவேத்தியத்துக்கு என்ன செய்தாய்?’’ என்று கேட்டார்.

கிருஷ்ணதாசரும் நடந்ததைக் கூறினார்.

அதைக் கேட்ட சைதன்ய பிரபு, ‘‘நீ அந்த அம்மாவிடம் வைத்த நம்பிக்கையை பகவான் கிருஷ்ணரிடம் வைக்கவில்லையே’’ என்றார்.

கிருஷ்ணதாசருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘பகவானிடம் நம்பிக்கை வைத்தால் அவரே கொண்டு வந்து கொடுத்துவிடுவாரா..?’ என்ன என்பதாக அவர் நினைப்பு.

அதைப் புரிந்துகொண்ட சைதன்ய பிரபு, ‘‘நீ பகவான் கிருஷ்ணரிடம் நம்பிக்கை வைத்து வேண்டிக்கொண்டு இருந்தால், நீ போய் கேட்காமல், அந்த அம்மையாரே நைவேத்தியத்துக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்திருப்பார். கேட்டுக் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணிய பலனைவிடவும் கேட்காமல் கொடுப்பதால் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். நீ பகவானிடம் நம்பிக்கை வைக்காமல், அந்த அம்மையாரிடம் கேட்டுப் பெற்றதால், அந்த அம்மையாருக்குக் கிடைக்கவேண்டிய புண்ணிய பலன் குறைந்துவிட்டது’’ என்றார்.


ராதையின் கருணை...
பிருந்தாவனத்தில் ராதா குண்டம் என்ற பகுதி ராதாதேவி வாழ்ந்து அன்பைப் பரப்பிய புண்ணியஸ்தலம். சுவாமி விவேகானந்தர் இந்த இடத்துக்கு வந்து தங்கியிருந்தபோது, அவரிடம் ஒரே ஒரு துணிதான் இருந்தது. அதை ஒரு நாள் அவர் கசக்கி உலர்த்தி வைத்திருந்தபோது, ஒரு குரங்கு வந்து தூக்கிக்கொண்டு போய், மரத்தின் உச்சாணிக் கிளையில் உட்கார்ந்துவிட்டது. சுவாமிஜி குரங்கிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். அது அழகு காட்டிவிட்டு மேல் கிளையில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டது.

சுவாமிஜிக்குக் கோபம் வந்துவிட்டது. குரங்கின் மீது அல்ல! அந்தப் புண்ணியத் தலத்தில் பாதம் பதித்து வலம் வந்த ராதாதேவியிடம்! ‘எல்லோரும் உன்னைக் கருணையின் வடிவமாகப் போற்றுகிறார்கள். ஆனால், உன்னைத் தரிசிக்க வந்த இந்த ஏழையின் துணியைப் பறித்துக் கொண்டு விட்டாயே? பக்கத்தில் உள்ள வனத்துக்குச் சென்று பட்டினிகிடந்து உயிரை விடுகிறேன். அந்தப் பழி உன்னைச் சேரட்டும்.’ என்று கூறியவராய் சுவாமிஜி காட்டை நோக்கி ஓடலானார். ஆனால், பிரேமையின் வடிவமான ராதை சுவாமிஜியைத் தவிக்கவிடுவாளா என்ன?

நடந்ததை எல்லாம் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருந்த ஒருவன், காவி உடையும், சிறிது உணவும் எடுத்துக்கொண்டு காட்டுக்குச் சென்றான். அங்கே சுவாமிஜியைச் சந்தித்து அவற்றைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். சுவாமிஜியின் நெஞ்சம் உருகிவிட்டது. வேட்டியை அணிந்து உணவையும் உட்கொண்ட பின் வனத்தில் இருந்து வெளியே வந்தார்.

அவரைத் தேடி வந்த அந்த வாலிபனை எவ்வளவு தேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவர் தன்னுடைய துணியை முன்பு எங்கே உலர்த்தி இருந்தாரோ அந்த இடத்திலேயே காய்ந்துகொண்டிருந்தது.

Comments