திருப்பணிக்குக் காத்திருக்கும் அகஸ்தீஸ்வரர் ஆலயம்!

ராமேஸ்வரம் கோயிலில் நாம் சிவபெருமானின் இரண்டு சிவலிங்க மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். கருவறை யில் இருப்பது ராமபிரான் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம்; வெளியில் இருப்பது அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம்.

ராவண வதம் நிகழ்த்திய ராமன், தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்க  பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினார். சிவலிங்க மூர்த்தத்தைக் கொண்டு வருவதற்காக அனுமனை வடதிசைக்கு அனுப்பினார். அனுமன் சிவலிங்கம் கொண்டு வருவதற்குத் தாமதமானது, எனவே, சீதை மணலால் வடித்த சிவலிங்க மூர்த்தத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்து விட்டார்.

சற்று தாமதமாக அனுமன் கொண்டு வந்த சிவலிங்க மூர்த்தத்தை, அனுமனின் மனம் நோகக் கூடாது என்பதற்காக கருவறைக்கு வெளியில் பிரதிஷ்டை செய்ததுடன், முதலில் அந்த லிங்கத்துக்கே பூஜைகள் செய்யப்படவேண்டும் என்ற நியதியையும் ஏற்படுத்தினார். இதேபோல், இரண்டு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்ட  சிறப்புக்கு உரிய தலம்தான், இதோ
இப்போது நாம் தரிசிக்க இருக்கும் சேந்தமங்கலம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில். ஒருகாலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்த இந்த திருக்கோயில் இப்போது சிதிலமுற்று கிடப்பதைக் கண்டபோது, மனம் பதறித் துடித்து அந்தத் துடிப்பானது கண்ணீராக வெளிப்பட்டது.

எத்தனை மகிமை வாய்ந்த திருத்தலம் அது என்பதை அறியும் எவருக்குமே மனம் கலங்கத்தான் செய்யும்.

ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டது ராமபிரான் என்றால், இங்கே சேந்த மங்கலத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டவர், ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதய மகா மந்த்ரம் உபதேசித்த அகத்திய மகரிஷி.

தென்திசை பயணம் வந்த அகத்திய மகரிஷி சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட எண்ணற்ற தலங்கள் இருந்தாலும், இந்தத் தலத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இங்கே, அகத்திய மகரிஷியின் நாம ஜபத்தால் ஈசன் சுயம்புவாகத் தோன்றி அருள்புரிந்தார் என்பதே அந்தத் தனிச் சிறப்பு. ஈசனின் சஹஸ்ர நாம ஜபத்தின் மகிமையை உணர்த்தும் வகையில் நிகழ்ந்த அந்தப் புனித நிகழ்வு...

கயிலை நாயகனின் உத்தரவின்படி தென்திசை விஜயம் மேற்கொண்ட அகத்தியர் பல இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

அதேபோல் அகத்திய மகரிஷி இந்தத் தலத்திலும் உலக நன்மைக்காக சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினார்.அனைத்து திருப்பணிகளும் நிறைவுபெற்று, சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான முகூர்த்தமும் குறித்தாயிற்று. சிவலிங்க மூர்த்தம் எடுத்து வர அடியார்களையும் அனுப்பியாயிற்று. ஆனால், இயற்கைச் சீற்றத்தின் காரணமாக குறித்த நேரத்துக்குள் சிவலிங்க மூர்த்தம் வந்து சேரவில்லை.

இதுவும் இறைவனின் திருவுள்ளம்தான் போலும் என்று எண்ணிய அகத்திய மகரிஷி, வில்வ தளங்களைச் சமர்ப்பித்தபடி சிவ சஹஸ்ர நாமத்தை ஜபம் செய்தார். ஈசனை விடவும் அவருடைய திருநாமம் ஆற்றல் கொண்டதல்லவா?! அகத்திய மகரிஷியின் நாமஜபத்தின் பலனாக சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றினார். மனம் மகிழ்ந்த அகத்தியர் சிவலிங்க பிரதிஷ்டையுடன், அம்பிகை அகிலாண்டேஸ்வரியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

அதேநேரம் அடியார்களும் சிவலிங்க மூர்த்தம் கொண்டு வந்தனர். அவர்கள் மன வருத்தம் கொள்ளக்கூடாது என்பதற்காக, அகத்திய மகரிஷி அவர்கள் கொண்டு வந்த சிவலிங்க மூர்த்தத் தையும் கருவறைக்கு வெளியில் பிரதிஷ்டை செய்து வழிபடச் செய்தார்.

சிவநாம மகிமையை உலகத்தவர்க்கு உணர்த்தும் வண்ணம், அகத்தியரை முன்னிட்டு ஈசன் சுயம்புவாகத் தோன்றிய இந்தத் திருக்கோயில், ஒருகாலத்தில் நித்திய பூஜைகளும் விழாக்களும் தடையின்றி நடைபெற்று பூரண சாந்நித்யத்துடன் விளங்கியது. காலப்போக்கில் அந்தக் கோயில் சிதிலம் அடைந்து நித்திய பூஜைகள் கூட நடைபெறாத நிலை ஏற்பட்டுவிட்டது. பல வருடங்களாக இடிந்த நிலையிலேயே காணப்பட்ட அந்தக் கோயில் மீண்டும் புதுப்பொலிவு பெற வேண்டும் என்று இறைவன் திருவுள்ளம் கொண்டதன் பயனாக, இப்போது திருப்பணிக் கமிட்டி ஏற்படுத்தி திருப்பணிகள் தொடங்கப் பட்டுவிட்டன.

திருப்பணிக் கமிட்டியின் சார்பாக நம்மைத் தொடர்புகொண்ட எஸ்.கண்ணன் என்பவரிடம் பேசினோம்.

‘‘பல வருஷங்களாகவே இந்தக் கோயில் சிதிலம் அடைந்த நிலையில்தான் இருந்தது. பலமுறை முயற்சித்தும் இப்போதுதான் திருப்பணிகள் தொடங்குவதற்கு இறையருள் கூடியுள்ளது. ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் திருப்பணிக் கமிட்டி ஏற்படுத்தி முறைப்படி பதிவு செய்து, வங்கிக் கணக்கைத் தொடங்கி திருப்பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். விரைவிலேயே திருப்பணிகள் நிறைவு பெற்று,  கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்கள் எல்லோருடைய  விருப்பமும். அகத்தியர் வழிபட்ட அகஸ்தீஸ்வரர்தான் அருள்புரிய வேண்டும்’’ என்றவர் தொடர்ந்து,
‘‘சிவ சஹஸ்ரநாமத்தின் மகிமையால் சுயம்புவாகத் தோன்றிய ஈசன் அருள்புரியும் இந்தக் கோயிலுக்கு வந்து, சிவ சஹஸ்ரநாம பாராயணமும் அர்ச்சனையும் செய்து இறைவனை வழிபட்டால், எல்லா தடைகளும் நீங்கி, வாழ்க்கை யில் எண்ணிய எண்ணம் எல்லாம் நிறைவேறும் என்பது காலம்காலமாக பக்தர்களிடையே நிலவும் நம்பிக்கை’’ என்றார்.

சிவநாம மகிமை சொல்லும் இந்தத் திருக் கோயில் விரைவிலேயே புதுப் பொலிவு பெற வேண்டும்; நாளும் அங்கே சிவ சஹஸ்ரநாமம் ஒலிக்கவேண்டும்; அதன் புனித அதிர்வலைகள் இந்தப் பிரபஞ்சம் எங்கும் வியாபித்து, எங்கும் சந்தோஷமும் சாந்தியும் நிலவவேண்டும் என்றால், திருக்கோயில் திருப்பணிக்கு நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்தால்தானே சாத்தியமாகும்?

ஐயன் திருக்கோயில் மீண்டும் புதுப் பொலிவு பெற நாம் நம்மால் இயன்ற பொருளுதவி செய்வோம். அதன் பயனாக, ‘மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரும், தேசனும், தேனார் அமுதமும், பேராது நின்ற பெருங்கருணைப் பேராறு’மாகிய சிவபெருமானின் அளப்பரிய கருணைத் திறம் நம்மையும் நம் சந்ததியரையும் வாழ்வாங்கு வாழ்விக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


உங்கள் கவனத்துக்கு...

தலத்தின் பெயர்: சேந்தமங்கலம்

இறைவன்: ஸ்ரீஅகஸ்தீஸ்வரர்

இறைவி:  ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி

பிரதிஷ்டை செய்து வழிபட்டவர்: அகத்திய மகரிஷி

தலத்தின் சிறப்பு
: சிவநாம மகிமையை உணர்த்தும் வகையில், ஈசன் கோயில் கொண்ட திருத்தலம்.

பிரார்த்தனைச் சிறப்பு:  இந்தக் கோயிலுக்கு வந்து, சிவ சஹஸ்ரநாம பாராயணமும் அர்ச்சனையும் செய்து இறைவனை வழிபட்டால், எல்லா தடைகளும் நீங்கி, வாழ்க்கையில் எண்ணிய எண்ணம் எல்லாம் நிறைவேறும்

எப்படிச் செல்வது?:
புதுக்கோட்டையில் இருந்து குடுமியான் மலை செல்லும் சாலையில் சுமார் 8.5 கி.மீ. தூரத்தில் உள்ள மேலப்பழுவாஞ்சி என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 1.5 கி.மீ.தூரத்தில் உள்ளது சேந்தமங்கலம்.

Comments