மங்கலம் அருளும் மஹாபைரவ வழிபாடு!

பனித்தலை முடித்த அருட்பெரும் கடவுள் சிவபெருமான் அசுரர்களை அழிக்க தனது வீரத்தை வெளிப்படுத்திய தலங்களை, ‘அட்ட வீரட்டத் தலங்கள்’ என்பர். அவை, திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருப்பறியலூர், திருவிற்குடி, வழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர், திருவதிகை ஆகும். அட்டவீரட்டத் தலங்கள் வரிசையில் திருக்கோவிலூர் இரண்டாம் இடம் வகிக்கிறது.
விழுப்புரத்தில் இருந்து சுமார் 55 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோவிலூர். இவ்வூருக்குப் பெருமை சேர்க்கும் இரண்டு ஆலயங்களில் ஒன்று, திரிவிக்ரமப் பெருமாள் திருக்கோயில். அடுத்தது, அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான சிவபெருமானின் கோயில்.
தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் உள்ளது கீழையூர் வீரட்டேஸ்வரர் ஆலயம். ஆற்றின் கரையில் மிகப்பரந்த அளவில் பிரம்மாண்ட மாக சுவாமி மற்றும் அம்பாள் கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இரு கோயில்களுக்கும் தனித் தனியே ராஜகோபுரங்கள். ஆலயத்தின் தெற்கு வாயில் வழியாக நுழைந்தால், முதலில் உள்ளது பதினாறுகால் மண்டபம். வளாகத்தின் தெற்குப் புறத்தில் மெப்பொருள் நாயனார் சன்னிதி உள்ளது.
‘சேதி நல்நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி மாது ஒரு பாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான்’ என்று, மெப்பொருள் நாயனார் குறித்து திருத்தொண்டர் புராணத்தில் விவரிக்கிறார் சேக்கிழார்.
சுவாமி கோயில் ராஜகோபுரம் வழியாக நுழைந்ததும் கொடிமரம் மற்றும் நந்தியை தரிசிக்கிறோம். விசாலமான வெளிப்பிராகாரம். வடக்குப் புறத்தில் பெரிய கல்யாண மண்டபம். கொடிமரத்தை வணங்கி, உள்ளே சென்றால், அந்தகாசுரவத மூர்த்தி, ஸ்ரீ பைரவி ஆகியோரின் திருவுருவப் படங்களும், அடுத்து பிரம்மாண்டமாகக் காட்சி தரும் நந்தியையும் தரிசிக்கலாம். அடுத்து, பெரியானைக் கணபதி ஔவைக்கு அருள் செய்த லீலையின் சிற்பத்தைக் காணலாம். இந்தச் சிற்பம்
சொல்லும் கதை சுவாரஸ்யமானது. அதென்ன பெரியானை கணபதி?
இக்கோயில் பெரியானை கணபதியை தினமும் வழிபட்டு வந்தாள் ஔவைப் பிராட்டி. ஒரு நாள் நம்பி ஆரூரரான சுந்தரர், வானில் ஐராவதம் என்ற வெள்ளை யானை மீதும், அவரது தோழர் சேரமான் பெருமாள் குதிரை மீதும் திருக்கயிலாயம் சென்று கொண்டிருப்பதைக் கண்டாள். இதைக் கண்ட ஔவைக்கு, ‘தம் மால்கயிலாயம் செல்ல முடியவில்லையே’ என்ற வருத்தம் ஏற்பட, அவசரமாக கணபதிக்கு பூஜை செய்தாள். ஔவையின் சொகத்துக்கான காரணத்தைக் கேட்டார் கணபதி. தமது ஆசையை ஔவை சொல்ல, நிதானமாக பூஜை செய்யுமாறும், தாமே அவரை விரைந்து கயிலாயத்தில் சேர்ப்பதாகவும் வாக்களித்தார்.
மகிழ்ச்சியுற்ற ஔவை, ‘சீதக் களபச் செந்தாமரை’ எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடி கணபதி யைத்துதித்தார். அகமகிழ்ந்த விநாயகர், யானை வடிவெடுத்து ஔவையை தம் தும்பிக்கையில் தூக்கிக் கொண்டு, சுந்தரருக்கும் சேரமானுக்கும் முன்னதாகவே கைலாயத்தில் இறக்கி விட்டார். அதன் பின்னர் அங்கு வந்து சேர்ந்த இருவரும் ஔவையிடம், நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?" என்று கேட்டனர்.
அதற்கு ஔவை, மதுர மொழிநல் உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை முதிர நினைய வல்லார்க் கரி தோமுகில் போல் முழங்கி அதிர நடத்திடும் யானையும் தேரும் அதன்பின் வரும் குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னரே" என்றாள்.ஔவையை கயிலாயத்தில் கொண்டுவிட கணபதி விஸ்வரூபம் எடுத்ததால் இவர், ‘பெரியானை கணபதி’ ஆனாராம். இங்கே அந்தக் கயிலாயக் காட்சியை தரிசிக்கலாம்.
பெருமானுக்கு அமைந்த உற்ஸவ மூர்த்தி கொள்ளை அழகு! சிரசில் பெருகும் கங்கை, இரு கரங்களில் ஒரு சூலத்தை ஏந்தி, மற்றிரு கரங்களில் மானும் மழுவும் கொண்டு, பாதத்தில் அசுரனை மிதித்த கோலத்தில் அழகுறக் காட்சி தருகிறார்.
இன்னொரு மூர்த்தி பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில், எட்டு கரங்களுடன் காட்சி தருகிறார். வலது கரம் அக்க மாலையும், இடது கரம் மானும் தாங்க, இன்னும் இரு கரங்கள் தமக்குத் தானே கங்கையை அபிஷேகித்துக் கொள்ள, மற்ற நான்கு கரங்களில் நீர்க் கலசம் ஏந்திக் காட்சி தருகிறார்.
பிரதான அந்தகாசுர வத மூர்த்தியின் உற்ஸவ மூர்த்தியும் மிக அழகு. ருத்ராம்சத்தில் அவதரித்த இவர், தம் திருமுகத்தில் குறுநகை பூக்க, சாந்த ஸ்வரூபியா காட்சி தருவது அபூர்வமானது. அவரது கண்களில் கோபத்துக்கு பதிலாக கருணையும் வாத்சல்யமும் பொங்குகிறது.
அந்தகாசுரனை வதம் செய்த திருத்தலம் இது! கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் தனித்திருந்த நேரம், விளையாட்டாக ஐயனின் கண்களைப் பொத்தினாள் அம்பிகை? அப்போது, அம்பிகைக்கு ஒரு கணமும், தேவர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகளுமா இருள் வந்து அண்டியது. அந்த இருள், ஓர் அரக்கனாக உருவானது. இருட்டு நேரத்தில் அம்பாளின் வியர்வைத் துளி, ஐயனின் நெற்றிக்கண் நெருப்பால் வெப்ப மடைந்து அரக்கனாக உருப்பெற்றான் என்பது புராணம்.
அந்தகார இருட்டில் தோன்றியதால் அவன் அந்தகாசுரன் ஆனான். எனவே, அவனுக்குப் பார்வை தெரியவில்லை. ‘அந்தகன்’ என்றால் பார்வை இழந்த வன் என்றும் பொருள். பிரம்மாவை நோக்கித் தவம் செய்த அந்தகன், வரம் பல பெற்றான். பெற்ற வரத்தால், ஆணவம் பெருகியது. முனிவர், ரிஷிகள், மக்கள் எனப் பலரையும் துன்புறுத்தினான். கொடுமை தாளாத அனைவரும் திருக்கோவிலூர் சிவபெருமானை வேண்டினர்.
அவர்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட ஈசன், அந்தகாசுரனுடன் போர் புரிய, பூத கணங்களை ஏவினார். ஆனால், பூத கணங்கள் தோற்றன. பிறகு, தனது அம்சமான வடுகதேவரை அனுப்பினார் ஈசன். ஒரு முகம், பத்து கரங்களுடன், சூலம், வாள், பாசம், அங்குசம், கபாலம், நாகம், பரிசை, தண்டம் ஆகிய வற்றுடன் அபய, வரதகரங்கள் கொண்ட வடுக நாதர், அந்தகாசுரனுடன் போரிட்டார்.
அப்போது, அரக்கர் குல குருவான சுக்ராச்சாரியார், மிருத்யுஞ்சய மந்திரம் ஓதி அசுரனுக்குக் கேடு ஏற்படாமல் காப்பாற்றினார். இதனால் கோபமுற்ற சிவபெருமான், சுக்ரனை மந்திரத்துடன் சேர்த் துக் கட்டி, தனது வடிவத்தில் மறைத்தார். சுக்ரனின் இடையூறு தொலைந்ததும் வடுக தேவர், அசுரனை திரிசூலத்தால் குத்தி, சிவசந்நிதானம் முன்கொணர்ந்தார். தனது தவறை உணர்ந்த அசுரன், பெருமானைப் பணிந்து நின்றான். பின்னர், பூத கணங்களுக்குத் தாமே தலைவனாகும் பேற்றை வேண்டி நின்றான். அசுரனின் வேண்டுகோளை ஏற்ற பெருமான், அவனுக்கு அவ்வாறே அருள் செய்தார்.
சிவபெருமானின் இந்த வீரத்தை ‘மஹா பைரவ பேதம்’ என்றும், அவரது நடனத்தை, ‘அந்தகாசுர வத தாண்டவம்’ என்றும் புராணங்கள் வர்ணிக்கின்றன. சூலத்தால் பெருமான் அசுரனைக் குத்தியபோது, பூமி யில் அதிர்வு ஏற்பட்டதாம். அசுரனை வதம் செய்கிற காலத்தில், பூமியின் அம்சமாக வாஸ்து புருஷன் தோன்றினான். அச்சமயம், வாஸ்து புருஷனின் அனுமதி இல்லாமல் எவரும் பூமியைத் தீண்டக் கூடாது, எனும் வரத்தை பெருமான் அவனுக்கு அருளினார்.
அந்தகாசுர வதத்தின்போது 36 மாத்ரு கணங்களும், பறவைத் தலை கொண்டடாகினி தேவதையும் தோன்றினராம். பொல்லாத அசுரனின் ரத்தம் பூமியில் சிந்திவிடக் கூடாது என்பதற் காக அன்னைகாளிதேவி, அதனை ஒரு பாத்திரத்தில் தாங்கினாள். இங்குள்ள அந்தகாசுர வதை சிற்பமும் உற்ஸவ மூர்த்தியும் இந்தக் காட்சியை அருமையாகத் தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில் அம்பாள், பெருமானின் அருகில் பைரவியாக நின்றாராம். சிவபெருமான் பெருவீரத்தால் அந்தகாசுரனை வதம் செய்தபோது, சிவ அம்சமான வீரட்டேஸ்வரரின் தேகத்தில் இருந்து 64 பைரவர்கள் மற்றும் 64 பைரவி யோஹினி சக்திகளும், சப்த மாதர்களும், டாகினி-யோகினி தேவதைகளும், வாஸ்து புருஷனும் ஆவிர்பவித்த தாகச் சொல்வர்.
எனவே இது, ‘பைரவ கே்ஷத்ரம்’ என்றே வழங்கப் படுகிறது. பக்தர்கள் தீப மேற்றி இங்கே பைரவரைத் துதிக்கின்றனர். உடைத்த தேங்காயிலும், வெட்டிய வெண்பூசணியிலும் விளக்குகளை ஏற்றி, தங்களைத் தொடரும் பிணிவிலக, பைரவரின் முன் தங்கள் பிரார்த் தனைகளை நிறைவேற்று கிறார்கள்.
அந்தகாசுர வதத்தின் போது, அனைத்தும் இருள் மயமாகத் திகழ, சூரியன் மட்டும் சற்றே ஒளி கொடுத்து ஆறுதல் தந்தாராம். அவரது செயலைப் பாராட்டி சிவபெருமான் அவரை, ‘சிவசூரியன்’ என அழைத்ததாகக் கூறுவர். ஆலயத்தில் பரிகார ஹோமங்கள் நடைபெறுகின்றன. பக்தர்கள் தங்களைத் துரத்தும் தீவினைகள் மாயவும், தங்களைப் பீடித்த அந்தகனாகிய இருள் அழியவும் இங்கே பெருமானுக்கு ஹோமம் செய்து, ஆஹுதியை சமர்ப் பிக்கின்றனர். இதனால், மனம் குளிரும் பெருமான் பக்தர்களுக்கு வரம் பல அருளுகின்றான். நாமும் பெருமானை உளமாரத் துதிக்க, மனத்தில் அந்தக இருள் விலகி, சந்தன மணம் கமழும் என்பதில் ஐயமில்லை!

 

Comments